இசைத்தெய்வத்தின் மேடை
- பாவண்ணன்
தூறல் இலக்கிய காலாண்டிதழ்
ஜூலை- செப்-2018
தூறல் இலக்கிய காலாண்டிதழ்
ஜூலை- செப்-2018
திருவிழா மேடைகளிலும் திருமணக்கூடங்களிலும் உற்சாகக்களை சூழ நிகழும் பாட்டுக்கச்சேரிகளை நாம் அனைவரும் பார்த்திருப்போம். காதுகொடுத்துக் கேட்கிறவர்களும் கேட்காதவர்களுமாக நிரம்பிவழியும் மக்கள் தொகைக்கிடையே நின்று பாடுவது அவ்வளவு எளிமையான செயலல்ல. ஆழமான கனவுகளோடு தன்னையே இன்னொரு மனிதனாக மாற்றிக்கொள்பவர்களால் மட்டுமே அந்த மேடையில் நிற்பது சாத்தியம். தனக்குத் தேவையான விசையை தன் நெஞ்சிலிருந்து திரட்டியெடுத்துக்கொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள் அவர்கள். எம்.எஸ்.வி., இளையராஜா, எஸ்.பி.பி., டி.எம்.எஸ்., பி.பி.ஸ்ரீநிவாஸ், மலேசியா வாசுதேவன், பி.சுசிலா, ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரி, சொர்ணலதா, வாணி ஜெயராம் ஆகியோராக தம்மையே உருவகித்துக்கொண்டு பாடவோ இசைக்கவோ தொடங்கும்போது, அவர்கள் சிறகு முளைத்தவர்களாக மாறுகிறார்கள். தமக்கென ஒரு வானத்தையே உருவாக்கிக்கொண்டு, அதில் வட்டமடிக்கிறார்கள். நள்ளிரவுக்குப் பிறகோ, அதிகாலையிலோ அவர்கள் மெல்ல மெல்ல கீழிறங்கி வண்டி பிடித்து வீட்டுக்குப் போய்ச் சேர்கிறார்கள்.
அவர்கள் அனைவரும் தன் வயிற்றுப்பாட்டுக்காகவோ, தன்னை நம்பியிருக்கும் குடும்பத்தின் வயிற்றுப்பாட்டுக்காகவோ ஏதோ ஓர் அலுவலகத்தில் சின்னச்சின்ன வேலைகளைச் செய்பவர்களாகவும் கடைச்சிப்பந்திகளாகவும் இருக்கக்கூடும். அந்தப் பகல்நேர வாழ்க்கையைக்கூட அவர்கள் தம் கனவுகளின் ஆற்றல் வழியே கடந்துசெல்லவே முயற்சி செய்வார்கள். தன்னை கணந்தோறும் கலைத்து விளையாடியபடியே இருக்கும் கனவுகளை உதறவும் சக்தியில்லாமல் வென்றெடுக்கும் வாய்ப்புகளுக்கு வழியுமில்லாமல் செத்துச்செத்துப் பிழைப்பவர்கள் அவர்கள். காலமெல்லாம் கைசோரும் வரைக்கும் நீந்திக்கொண்டே இருந்தாலும், அவர்கள் ஒதுங்க ஒரு கரை தென்படுவதே இல்லை. ஒதுங்கி நிற்கும் கரையில் அவர்கள் நினைத்த வாழ்க்கை இருப்பதில்லை. கற்பனைக்கும் எதார்த்தத்துக்கும் இடையில் அகப்பட்டு நசுங்கிநசுங்கி சொர்க்கத்தையும் நரகத்தையும் தனக்குத்தானே உருவாக்கிக்கொள்கிறார்கள். உதிர்ந்துபோகும் அந்த நட்சத்திரங்களை தன் நினைவிலிருந்து ஒரு கோட்டோவியமாக தீட்டி வைத்திருக்கிறார் நகலிசைக்கலைஞன் ஜான் சுந்தர்.
அசோகமித்திரன் எழுதிய கரைந்த நிழல்கள் நாவலை அனைவருமே படித்திருப்போம். திரைத்துறையில் கால்பதிக்கும் கனவுகளோடு வந்து முட்டிமோதி கரைந்துபோகும் எளிய மனிதர்களுடைய வாழ்க்கைச்சித்திரங்கள் அடங்கிய தொகுப்பு அது. அரைநூற்றாண்டுக்குப் பிறகு இப்போது வந்திருக்கும் ஜான் சுந்தரின் நகலிசைக்கலைஞன் மேடைக்கச்சேரிக் கலைஞர்களுடைய பல்வேறு சித்திரங்களின் தொகுப்பாக வந்திருக்கிறது. சற்றே முயற்சி செய்திருந்தால் ஒரு நாவலாக விரிந்து செல்வதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளவையாகவே இக்கட்டுரைகள் காணப்படுகின்றன.
ராமேட்டன், டேனியல், சூர்யா, கலைச்செல்வன், மகேந்திரன், வசந்தன், பைரவன் என பல கலைஞர்களைப்பற்றிய நினைவுகள் இந்தக் கட்டுரைத்தொகுதியில் பதிவாகியிருக்கின்றன. தொகுதி முழுதும் சுந்தரின் மொழி கூர்மையாகவும் துல்லியமாகவும் இயங்குவதைப் பார்க்கமுடிகிறது. சம்பவச்சித்தரிப்பில் குறைத்துச் சொல்லும் இடங்களிலும் தாவிச்செல்லும் இடங்களிலும் அவர் கைதேர்ந்தவராகவே இருக்கிறார்.
ராமேட்டன் இசைஞானம் மிக்க கலைஞர். மின்னிசைப்பலகை பயின்று அதிலிருந்து எழும் இசைக்கோவைகளைப் பயின்ற மனிதர். ஒரு கைப்பேசி வாங்க அவருள் எழும் எளிய கனவையும் அதை வாங்கிய பிறகு அதை அவர் கையாண்ட விதம் பற்றிய சித்தரிப்பையும் புன்னகை அரும்பாமல் படிக்க முடியாது. கட்டுரையின் இறுதிப்பகுதியில் உள்ள தனியறைக்காட்சி புன்னகையின் நேரெதிர் புள்ளியில் கொண்டு சென்று நிறுத்திவிடுகிறது. வாடகைப்பணம் கட்டாததால் ஒரு நாள் இயங்காப் பேசியாகிவிடுகிறது அவர் கைப்பேசி. படுக்கையில் ஓரத்திலேயே கிடக்கிறது. அப்போது ஏதோ ஓர் அழைப்பு. அழைப்புகளை வழக்கமாக தாவியெடுத்துப் பேசக்கூடிய ராமேட்டன் அமைதியாக இருப்பதைப் பார்த்து சேச்சி திகைக்கிறாள். பிறகு தானே எடுக்கிறாள். மறுமுனையில் சொல்லப்பட்ட சொற்களுக்கு அவள் பதில் சொல்ல முற்படுகிறாள். அறையை விட்டு மெல்ல வெளியே வந்து “அவருக்கு கச்சேரி இல்லைம்மா, இருந்தால் கட்டியிருப்பார்” என்று சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். “அடுத்த மாதம் எல்லா பாக்கிகளையும் சேர்த்து கட்டிவிடுவார்” என்று அமைதிப்படுத்துகிறார். ஆனால் மறுதிசையில் ஒலிக்கும் குரல் ஓயவேயில்லை. சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்கிறது. மன்றாடும் குரலில் மீண்டும் சேச்சி, “அதான் சொல்றனே, சீக்கிரம் கட்டிடுவாரும்மா” என்று சொல்கிறார். அதற்குள் எழுந்து வெளியே வந்துவிடும் ராமேட்டன் பதிவுசெய்யப்பட்ட குரலுக்கு பரிவோடு பதில் சொல்லும் சேச்சியை அருகில் அழைத்து மென்மையாக உண்மையை எடுத்துரைக்கிறார்.
டேனியல் பற்றிய விவரங்கள் ஒரு தனிநாவலுக்கு உரியவைபோல இருக்கின்றன. அவர் பாடும் ’ஏன்டி முத்தம்மா’ பாடலுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. மது அருந்திய போதையோடு திரும்பும் அவர் வீட்டில் உறங்கும் மனைவியையும் பிள்ளைகளையும் எழுப்பி தன்னைச் சுற்றி உட்காரவைத்துக்கொண்டு பாட்டு பாடிக் காட்டிவிட்டு உறங்கச் செல்லும் பழக்கமுள்ள மனிதர் அவர். பள்ளிக்கூடம் போகாமல் பகல்முழுதும் தூங்கும் குழந்தைகளிடம் எழுந்ததும் காரணம் கேட்கிறார். ”விடிஞ்ச பிறகுதானேப்பா நீங்க பாட்ட நிறுத்தினீங்க. அதுக்கப்பறம்தான் நாங்க தூங்க ஆரம்பிச்சோம்” என்று பதில் சொல்கிறார்கள் பிள்ளைகள். எதிர்பாராத கணமொன்றில் விதி அவர் குடும்பக்கூட்டைக் கலைத்து விளையாடிவிடுகிறது. அவருடைய மூத்த மகள் திடீரென தன் காதலனுடன் தலைமறைவாகிவிட, கண்ணீர் விட்டு அழுது தவிக்கும் மனைவியை அமைதிப்படுத்த இயலாமல் தவிக்கிறார் டேனில். ஒரு கட்டத்தில் சட்டென அடங்கி டேனிலிடம் முட்டை பரோட்டா வாங்கிவரச் சொல்லி அனுப்பிவைக்கிறார். அப்பாவியாக அவள் சொல்லுக்குப் பணிந்து பரோட்டா வாங்கி வந்து உண்ணச் செய்கிறார் டேனில். அன்று இரவு எல்லோரும் சோர்ந்து உறங்கும் தருணத்தில் அவள் தூக்கு போட்டு மரணமடைந்துவிடுகிறாள். கதறியழும் டேனிலின் குரல் இன்னும் ஒலித்தபடியே உள்ளது.
எவ்வளவு இழப்புகள். எவ்வளவு கண்ணீர். எவ்வளவு துக்கம். ஆயினும் இசைத்தெய்வம் வீற்றிருக்கும் பீடத்தின் முன் இந்தக் கலைஞர்கள் ஒவ்வொருவராகச் சென்று தன்னைத்தானே பலியாக வழங்க தலைகொடுக்கிறவர்களாகவே இருக்கிறார்கள். அந்தச் சுயபலியின் வழியாக அவர்கள் அடைவதென்ன என்பதை அவர்கள் மட்டுமே உணரமுடியும்.
சூர்யா மற்றுமொரு பலிக்கலைஞர். இசைப்பித்து அவரை கோவையிலிருந்து சென்னையை நோக்கி விரட்டியடிக்கிறது. எப்படியோ படாத பாடுபட்டு லட்சுமண் சுருதி குழுவில் பாடும் வாய்பை அடைந்துவிடுகிறார். இரவு பகலாக எங்கெங்கோ கச்சேரிகள். பேருக்கு ஒரு வேலை, பிறகு கச்சேரி என ஓடிக்கொண்டே இருக்கிறது வாழ்க்கை. தற்செயலாக கிட்டிய ஏ.ஆர்.ரகுமான் சந்திப்பில் அவர் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அங்கே தோன்றும் பாடகி சொர்ணலதாவைக் கண்டதும் அவரோடு சேர்ந்து ஒரு பாட்டு பாடும் வாய்ப்பு தன் வாழ்வில் என்றாவது கிட்டுமா என ஏக்கம் கொள்கிறது மனம். ரகுமானின் அலுவலகத்தில் தொடர்புக்கான எண்ணை வாங்கிக்கொள்கிறார்கள். அழைப்பு இன்று வரும் நாளைவரும் என்ற கற்பனையோடு மேலும் சில நாட்கள் கழிகின்றன. எதிர்பாராத விதமாக நிகழும் ஒரு சாலைவிபத்து அவரை மருத்துவமனைவாசியாக மாற்றிவிடுகிறது. அருகிலிருந்து பார்த்துக்கொள்ள வந்த பெற்றோர் சலிப்போடு “போதுமடா சாமி, ஒன்னோட பாட்டும் கூத்தும், இப்பவே நீ கோயம்புத்தூருக்கு புறப்படு” என்று அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். வண்டியேற்ற வரும் அவர் மாமா ஒரு சில நாட்களுக்கு முன்பு தொடர்ச்சியாக நாலைந்து முறை வந்த ரகுமானின் அலுவலக அழைப்புகளை போகிற போக்கில் சொல்லிவிட்டுச் செல்கிறார். விதியை நொந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
கோவை திரும்பிய சில மாதங்களிலேயே ஒரு தொழிலதிபரின் அலுவலகத்தில் வேலை. திருமணம். ஆயினும் இன்னும் விடாத இசைப்பித்து மறுபடியும் அவரை சென்னைநோக்கித் தள்ளுகிறது. இப்போது மனைவியோடும் எட்டு மாதக் குழந்தையோடும் சேர்த்துவைத்திருந்த இரண்டு லட்ச ரூபாயோடும் சென்னைக்கு வருகிறார். அவர் நினைத்த வாய்ப்புகள் கூடிவரவில்லை. விஷக்காய்ச்சலால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மனைவியைக் காப்பாற்றுவது பெரும்பாடாகிவிடுகிறது. ஒரு தருணத்தில் கையில் வெறும் ஐம்பது ரூபாய் மட்டுமே எஞ்சுகிறது. மனம் கசந்துபோன சூர்யா மீண்டும் கோவைக்கே திரும்புகிறார். பேரூர் ஆற்றங்கரையில் புரோகிதம் செய்யும் தொழிலில் ஈடுபடுத்தி வருமானத்துக்கு வழிவகுக்கிறார் அவருடைய அக்காவின் கணவர். எப்போதாவது தேநீர்க்கடைகளில் ஒதுங்கும்போது ஒலிக்கும் பாடல் குரல் அவரை ஒருகணம் கனவை நோக்கித் தள்ளி கண்களை ஈரம் கொள்ளவைக்கிறது. ஆனால் பாடல் வரி முடிந்ததும் ஆற்றங்கரைக்கே சென்றுவிடுகிறார்.
‘ப்ளீஸ் ஆன்ஸ்வர் மை ப்ரேயர்’ என்னும் வரியை ‘ப்ளீஸ் கேன்ஸல் மை ப்ரேயர்’ என மாற்றிப் பாடிக் குழப்பும் பைரவன், பலகுரல் மன்னன் நீலமலை மகேந்திரன், குடிப்பழக்கத்தால் சிகரத்திலிருந்து தரையை நோக்கி விழுந்து தன்னைத்தானே இழந்துவிடும் கலைச்செல்வன், ‘என் கண்ணிரண்டைக் காப்பாற்றும் கண்ணிமையும் நீதான்’ என்னும் வரியை ‘என் கண்ணிரண்டைக் காப்பாற்றும் கண்ணு மையும் நீதான்’ என மாற்றி எழுதிவைத்துக்கொண்டு மனப்பாடம் செய்யும் குமார், இரவு முழுதும் நடந்த கச்சேரிக்கு முந்நூறு ரூபாய் கொடுக்கப்பட்டதைக் கண்டு மனமுடைந்து இரவுப்பேருந்தில் ஏறிச் செல்லும் நண்பன், தமிழை தன் மனம் போனபோக்கில் எழுதிவைத்துக்கொண்டு வாசிக்கும் பாலக்காட்டு எடக்கை ராமச்சந்திரன் என ஏராளமான மனிதர்களை சுந்தர் இத்தொகுதியில் கோட்டோவியங்களாகத் தீட்டி வைத்திருக்கிறார்.
கலைஞர்கள் தம் மனம் உணர்கிற ஒருவித நிறைவுணர்ச்சியால் வாழ்கிறவர்கள். தனக்குக் கைவந்த கலையை தெய்வத்தின் துணை என நினைத்து அதையே பயின்றுபயின்று அந்த வாசல் வழியே எவ்வளவு தொலைவு அந்தக் காட்டுக்குள் ஓட முடியுமோ, அந்த அளவுக்கு ஓடிக் கடக்க முயற்சி செய்பவர்கள். ஆனால் அந்தச் சின்ன மகிழ்ச்சியைக்கூட அந்தத் தெய்வம் அவர்களுக்கு அனுமதிப்பதில்லை. கசப்பையே பிரசாதமாக வழங்கும் கருணையற்ற தெய்வமாக இருக்கிறது காலம். அந்தக் கசப்பின் கடுமையை மறக்க மதுவில் விழுகிறார்கள் கலைஞர்கள். கசப்பாலும் மதுவாலும் உறிஞ்சப்பட்ட பிறகு வெற்றுச்சக்கைகளாக விழுகிறார்கள் கலைஞர்கள். அந்த மகத்தான கலைஞர்களின் கண்ணீர்ச்சுவடுகளே இந்த நூல்.
தோல்விகளின் வரலாற்றை கசப்பே படியாத ஒரு மொழியில் முன்வைப்பது ஒரு மாபெரும் கலை. சொந்தத் துயரை மறந்துவிட்டு, மேடையில் காதல் பாட்டைப் பாடும் இசைக்கலைஞனுக்கு அது இயல்பாகவே கைவந்திருப்பது ஆச்சரியமில்லை.

(நகலிசைக்கலைஞன். ஜான் சுந்தர். கட்டுரைகள். காலச்சுவடு வெளியீடு, 669, கே.பி.சாலை, நாகர்கோவில் 629001. விலை. ரூ.150)