Saturday, 20 September 2014
Friday, 19 September 2014
Thursday, 18 September 2014
ஜான்சுந்தரின் சொந்தரயில்காரி கவிதை தொகுப்பை முன்வைத்து... -வெய்யில்
நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன்
குழந்தையைப்போலச் சிந்தித்தேன்
குழந்தையைப்போல யோசித்தேன்;
நான் புருஷனானபோதோ... குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.
-
1கொரி--13:11 (புதிய ஏற்பாடு)
குழந்தைகளின் கண்கள் உண்மையின் பேரொளி கொண்டவை. அவை இவ்வுலகின் ஒவ்வொரு துகள்களையும்
ஆச்சர்யத்தோடு காண்கின்றன. நம் கருத்துக்கள், அர்த்தப்பாடுகளெல்லாம்
தலைகீழாக்கப்படும் அவ்வுலகில் எப்போதும் மகிழ்ச்சியின் நதி வற்றுவதேயில்லை.
வாழ்வின் பல்வேறு அழுத்தங்களுக்கு நடுவே விழிபிதுங்க
நிற்கும் நமக்கு அந் நதியிலிருந்து ஒரு
குவளை அள்ளி பருகத்தந்திருக்கிறார் ஜான் சுந்தர்.
இத்தொகுப்பின்
பெரும்பாலான கவிதைகள் குழந்தைகளின் உலகில் நிகழ்பவை. நாம் பயன்படுத்துகிற
பொருட்கள், சொற்கள், நம்பிக்கைகள், நாம் புரிந்து வைத்திருக்கிற வாழக்கை, ஆகியவை குழந்தைகளின் உலகில் என்னவாக வண்ணம்
மாறுகின்றன;;; விரிகின்றன; சுருங்குகின்றன; என்பதை குழந்தைகளின் மொழிக்கு நெருக்காமான
மொழியில் கவிதையாக்கியிருக்கிறார்.
“தாய்க்குதிரை
ஏணியின் கடையெழுத்து
தேனியின் பிற்பாதியில் நிற்கிறது
அதன்
செல்லக்குட்டி!”
எழுத்துக்களில்
மறைத்திருக்கும் உருவங்களை, வடிவங்களை பேசும் “எங்கே இருக்கிறது குதிரைக்குட்டி?” எனும் கவிதையில் வரும் இக்காட்சியில் ணி
எனும் எழுத்து தாய்க்குதிரையாகிவிடுகிறது. னி அதன் செல்லக்குட்டியாகிறது. இக்கவிதையில்
வெளிப்படும் கற்பனையும், நேயமும், கச்சிதமான சொல்முறையும், ஜான் சுந்தரின் பல கவிதைகளில் கூடி
வந்திருக்கிறது. “காட்சிப்பிழைகள்”, “பென்சிலின்
நுனியில் உலகத்தின் நிறம்”, போன்ற கவிதைகள் நல்ல
காட்சியனுபவம் தரக்கூடியவை.
"நீலச்சிலுவை சாபங்கள்" எனும்
கவிதையில் மனிதன் தன் அதிகாரத்தை அஃறிணைகளிடம்
இழந்துவிட்டால் மனிதனை அவைகள் பயன்படுத்தும் விதத்தை கற்பனை செய்கிறார். தில் கோழிகளின் சைக்கிளில் மனிதன்
தலைகீழாய் தொங்குகிறான்;
மலர்களின் சவ ஊர்வலத்தில் மனித காதுமடல்கள் தூவப்படுகின்றன. இப்படித்தான்
இவர் புதிதுபுதிதாக பல காட்சிகளை நமக்கு அனுபவிக்கத் தருகிறார்.
“வெள்ளை ரொஜாக்கள்
பரோட்டாக்களாக உருமாறுகின்றன”
(சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் பரோட்டா பேடா இவருக்கு
வெள்ளை ரோஜாவாகத்தெரிகிறது.)
“கை விரல்களால்
சமதளப்படிகளில்
நடக்கும்
வித்தையறிந்திருக்கிறான்
பியானோ கலைஞன்!”.
இவ்வரிகள் மெலும் ஒரு
சிறந்த உதாரணம்.
ஒவ்வொரு கவிஞனும் இயல்பில் வேறுபட்ட கலாச்சாரத்தை, தொழிலை, அரசியலை கொண்டவனாக இருக்கிறான். அவன் விரும்பாவிடினும் அவை கவிஞனின் வரிகளில் மிக நுட்பமாக அமர்ந்து கொண்டுவிடும். மேலும் ஒரு கவிஞனை இவை தனித்து அடையாளப்படுத்தவும் கூடும். இவ்வகையில் ஜான் சுந்தரின் தொழிலான இசை ஓரளவு இவரை தனித்து அடையாளப்படுத்திக்காட்டுகிறது.
தொகுப்பில் நான்
மிகவும் ரசித்துப்படித்த கவிதையான “கள்ளூரும்சுனை”யை இங்கு வாசிக்க விரும்புகிறேன்.
(பக்கம்: 26)
இக்கவிதையில்
தமிழ் சினிமாவின் அலங்கரிக்கப்பட்ட பரிசல்களும் அது சார்ந்த பாடல்களின் துவக்க
ஆலாபனைகளுமாக விரிந்து செல்கின்றன. ஜான் சுந்தருக்கு நிறையும் குறையுமாக
சொல்வதற்கு இக்கவிதையே எனக்கு போதுமானதாக இருக்கிறது. இன்னும் கவனமாக
செய்யப்பட்டிருக்க வெண்டிய கவிதை இது. ஆனாலும்”
“சுழலில் சிக்கிய
பரிசலென
சுற்றத்தொடங்குகிறது
கிராமபோன் தட்டு”
என்ற இறுதி
வரிகளும் பின்னான ஆலாபனையும் நமக்குள் அளவில்லா உற்சாகத்தைக் கடத்தி விடுகிறது.
பொதுவாக இத்தொகுப்பின்
கவிதைகள் மூன்று விதமான வாழ்வை பேசுகின்றன. 1. குழந்தைகளின்
உலகு. 2. குடும்ப, சமூக வாழ்வுலகம். மற்றும் 3. ஜான் சுந்தரின்
இசை உலகம். இது ஒரு புரிதலுக்கான வகைப்பிரித்தல் மட்டுமே. இம்மூன்றுலகும்
கவிதைகளில் பிரிக்க இயலாதவாறு பின்னிப்பிணைந்திருக்கின்றன. அது அப்படியே இருக்கக்
கடவது.
ஜான் சுந்தருக்கு
சொல்லவெண்டிய சில விசயங்கள் இருக்கின்றன. குழந்தைகளின் உலகம் பேசப்படும்
இடங்களிலெல்லாம் ’செண்டிமெண்ட்’ சற்று தூக்கலாக
இருக்கிறது. குழந்தைகள் பெரும்பாலும் உங்கள் குழந்தைகளாக இருக்கிறார்கள். செனல் (4,
காட்சிபிழைகள் கவிதைகள் தவிர்த்து.) குழந்தைகளின் உலகை எழுதியவர்களில் எனக்கு
பிடித்தமான முகுந்த் தனது கவிதைகளில் அழகான காட்சிகளை படம்பிடித்து தருவார். அனால்
பெரும்பாலும் அவர் ஃப்ப்ரேமுக்குள் வரமாட்டார். உங்கள் கவிதைகளில் நீங்கள் அதிகமாக
ஃப்ப்ரேமுக்குள் வந்திருப்பதாக உணர்கிறேன்.
இறுதியாக
உனவின்றி,
மருந்தின்றி, பாதுகாப்பின்றி சில நொடிகளுக்கு ஒரு குழந்தை என மரணித்துக்கொண்டிருக்கும்
உலகில்... போர் என்ற பெயரில் பல்லாயிரக் கணக்கான குழந்தைகளின் தலையில் வெடிகுண்டு
வீசப்படும் உலகில்... வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!.
இந்நேரம் அவர்களை
முன்னிலைப் படுத்தும் ஒரு கவிதை தொகுப்பை நான் வாழ்த்துகிறேன்.
எல்லா
வலிகளிலிருந்தும் வெளியேற ஒரு குழந்தையின் புன்னகையின் முன் நாம்
மண்டியிடுவோம்.
ஜான் சுந்தர்
வரிகளில் சொல்வதென்றால்,
குழந்தைகளின்
சொந்தரயில்
புறப்பட்டு
நிற்கிறது...
ததீம் ததீம்
திக்கு ததா ததா....
ததா ததா திக்கு ததீம் ததீம்
ததா ததா திக்கு ததீம் ததீம்
ஆசிர்வதிக்கப்பட்டவர்களே
உள்ளே வாருங்கள் !
Wednesday, 17 September 2014
பால் பற்களின் மம்முட்டி நடனம் - சொந்த ரயில்காரி கவிதைத்தொகுப்பு குறித்து ச.முத்துவேல்
ஆடி வருகுதல் கண்டால் என் ஆவி தழுவுதடி… சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா…என்று பாரதி பாடிய கண்ணன் பாட்டுத்தான் எத்தனை உணர்வுபூர்வமானது ! கண்ணனை பிள்ளையாக பாவித்து பாரதி பாடியதும்கூட தமிழுக்கு புதிது கிடையாது, அது நம் பக்தி இலக்கியத்தின் தொடர்ச்சி. கு.அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு ஆகிய புகழ் பெற்ற கதைகளும் நினைவுக்கு வருகிறது. பிள்ளைத்தமிழ் என்ற ஒரு வகைமையே தமிழில் இருந்திருக்கிறது.
ஆனால், முகுந்த் நாகராஜனுக்குப் பிறகுதான் குழந்தைகளை வைத்து கவிதைகள் எழுதுவது, மிகவும் பரவலாகி இன்று எழுதி, எழுதி குவிக்கப்படுகின்றன.ஒவ்வொரு நாளும் தமிழ் நாட்டில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைவிட, குழந்தைகளை வைத்து எழுதப்படும் கவிதைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதை வணிகப்பத்திரிக்கைகளில் வரும் கவிதைகளைப் பார்த்தால் ஏற்றுக்கொள்வீர்கள். பாடப்படுகிறார்கள் என்கிற பேரில் இருவரும் சம அளவுக்கு கவிதைகளில் படாத பாடுபடுகிறார்கள். வணிகப்பத்திரிக்கைகளில் பக்கங்களை நிரப்பி, வாசக மனதை நீவிவிடும் இறகுகளாகவும், கிச்சு கிச்சு மூட்டும் பொழுதுபோக்கு அம்சமாகவும் ஆகிவிட்டிருக்கிறது குழந்தைகள் பற்றிய கவிதைகள். எத்தனை முறை கிச்சு கிச்சு மூட்டினாலும், கூசத்தானே செய்கிறது. என்னதான் எழுதியெழுதிக் குவித்தாலும், அவைகளுள் சிலவற்றில் கொஞ்சம் கவிதையிருக்கத்தான் செய்கிறது. ஏனெனில், அவை குழந்தைகளை பாடுகின்றன என்பதனால். ஒரு கவிதைக்குள் குழந்தை வந்துவிட்டாலே அதில் கொஞ்சம் கவிதை வந்துவிடுகிறது என்று நான் முன்னமேயே எழுதியிருக்கிறேன்.
பெரியவர்கள் அளவுக்கு குழந்தைகள் அறிவு முதிராதவர்கள். ஏனெனில், அறிவு நாள்தோறும் வளர்வது. ஆனால், புத்திசாலித்தனம் பிறப்பிலேயே தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. குழந்தைகள் புத்திசாலிகள். இந்த இரண்டும் இணையும் புள்ளியில் நின்றுகொண்டுதான் குழந்தைகள் பெரியவர்களை வசீகரிக்கின்றன. மம்முட்டியின் நடனம்போல. அதனால்தான், கோயிலில் தோப்புக்கரணம் போடத் தெரிந்திருக்கும் அதேவேளையில், அல்லாவுக்கான வழிபாட்டுமுறை அதுவல்ல என்ற பேதம் தெரியவில்லை குழந்தைக்கு. அம்மா சாமிகிட்ட போயிட்டா என்று செத்துப்போனவளைப் பற்றி பெரியவர்கள் சொல்லும்போது, அப்படின்னா சாமி அம்மாவுக்கும் முன்னாலயே செத்துப்போச்சா என்று கேட்கிறது குழந்தை.
இன்னமும் சரியாக அறிந்துகொள்ளாமல் பரிச்சயத்தால் நாம் கடந்துவிட்டவைகளை, குழந்தைகள் புதிய பார்வையால் பார்த்து சிந்திக்கின்றன. நம்மையும் சிந்திக்கத் தூண்டுகின்றன. அறிவு என்கிற பேரால் நாம் கொண்டிருக்குக்கும் எச்சரிக்கைகளை, சூதுகளை சுட்டிக்காட்டி நம்முடைய அறிவை குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்குகின்றன.குழந்தைகளின் பெருவாழ்வு மீண்டும் குழந்தைகளாக ஆகிவிடமுடியாத ஏக்கத்தை பெரியவர்களுக்கு உண்டாக்குகின்றன. குழந்தைகள் விரைவாகக் கற்றுக்கொள்கிறார்கள். பெரியவர்களுக்கும் கற்றுத் தருகிறார்கள்.ஒருவகையில், அவர்கள் கற்றுக்கொண்டே, வளர்வதில்தான் துயரமே தொடங்குகிறது.
சிறந்த தரிசனங்களை அளிக்கும், கவித்துவ தருணங்களை குழந்தைகள் ஏராளமாக அன்றாடங்களில் அருளிக்கொண்டேயிருக்கிறார்கள். அவைகளை கவிஞனின் விழிப்புணர்வோடு மொழியில் கைப்பற்றியவையே ஜானின் கவிதைகள். சில கவிதைகள் காட்சிகளை, நிகழ்வுகளை மட்டுமே படம்பிடித்து பதிவு செய்கிறது. சில கவிதைகளில் கவிஞரின் கோணமும் கலந்துவிடுகிறது. அப்படி கவிஞரின் கோணம் கலந்த கவிதைகளில் ’தேடுங்கள், உப்புத்தாரைகள், சிலைகளை இயக்குதல் போன்ற கவிதைகள் குறிப்பிடத் தகுந்தவை.
ஒரு இளம் தகப்பனாக பட்டறிவோடு எழுதப்பட்ட ஜான் சுந்தரின் முதல் தொகுப்பு இது. எனவே, இவருக்கு கவிதைகளோடு உறவு என்பது இளம் தகப்பனான பிறகுதான் என்றே எண்ண நேர்கிறது. குழந்தைகளாலேயே லேசாக கவிவாடை கமழத் தொடங்கியவராகியிருக்கிறார். ஆனாலும், இலக்கியம் பற்றிய புரிதலில் தன்னுடைய வயதுக்குரிய பக்குவமும், முதிர்ச்சியும் நன்கு கொண்டவராகவே இருக்கிறார். கவிதையுலகில் இன்றைக்கு தன்னுடைய இடம் எது என்பதை தெளிவாகவே தெரிந்துகொண்டு, அதை வெளிப்படையாய் அறிவித்துக்கொள்ள நெஞ்சில் துணிவும் நேர்மைத் திறமும் கொண்டிருக்கிறார். 13 ஆம் பக்கத்தில் வேதாகமத்திலிருந்து எடுக்கப்பட்டு மேற்கோளாக்கியிருக்கும் வரிகள் இதைத்தான் நமக்குத் தெரிவிக்கிறது. அதில் ஒரு வரி
…முழு நிலவின் இரவை நீங்கள் கொண்டாடுங்கள். அதேசமயம் சிறு மின்மினிப்பூச்சி, தன் வாழ்வைப் பாடவும் அனுமதியுங்கள்…
கம்பீரமான இந்தச் சரணாகதி, தொகுப்பு குறித்து நான் எழுப்பவிருந்த குறைபாடுகளை பெரிய அளவில் ஊமையாக்கிவிட்டது. குழந்தைக்கு எல்லாமாகித் தாங்கும் தாயைவிட நான் நன்கு தெரிந்தவன்போல் கவிதைகள் எழுதிக்கொண்டிருப்பது கேலிக்குரியதே என்று சொல்கிற மனம் கொண்டவராகவே ஜான் இருக்கிறார்.
ஜான் ஒரு சிறந்த பாடகர். இசைப்பள்ளி நடத்தும் தொழில்முறை இசைக்கலைஞர். எப்போதுமே ஒருவரின் இளமைப்பருவப் பாடல்கள்தான் மிகவும் நெருக்கமாகவும், எப்போதும் கூடவே வருவதாகவும் இருக்கும்.எனக்கும் பிடித்த கவிஞர் ’இசை’க்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட ஒரு கவிதை , கூட்டு ஸ்வரங்களின் ஈரம் மற்றும் பல கவிதைகளில் ஜான் சுந்தரின் இசையீடுபாட்டை காணலாம்.
முதல் வாசிப்பில் என்னைக் கவர்ந்த சில கவிதைகளை குறித்துவைத்திருந்தேன். இரண்டாவது வாசிப்பில் அவை என்னை ஏன் கவர்ந்தன என்ற ஆச்சரியத்தோடு கேள்வி எழுப்பிப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு சின்ன நெகிழ்ச்சி, மன சஞ்சலம் பழகிவிட்டதாகும்போது அதன் வீரியத்தை இழந்துவிடுகிறது. ’கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை’ என்பது ஒரு திரைப்பாடலின் வரி.
ஜானின் கவிதைகள் என்னை எந்தளவுக்கு அசைத்தன என்பதை சொல்லுகிறேன். படித்தவுடன் துள்ளி எழுந்து உட்காரவைக்கவில்லை அவை. உதடு பிரியாமல் ஒரு புன்முறுவலை உத்திரவாதத்தோடு அளித்தது.
பரோட்டா மாஸ்டரின் கனவில் விரியும் ஒரு காட்சியாக வருகிற, துவையல் அரைக்கும் தருணங்களில் புறங்கையால் கூந்தல் திருத்தும் கணப்பொழுது… நம்மையும் வசீகரிக்கிறது.
பூக்களிலிருந்து ரோஸ்மில்க் வாசம் வரும் அழகிய முரண்கள் கொண்ட குழந்தைகளின் உலகத்தால் ஆன கவிதைகளால் நிறைந்த தொகுப்பே ஜான் சுந்தரின் சொந்த ரயில்காரி. என்றாலும், அவற்றோடு மட்டும் நின்றுவிடாது தமிழ்ஈழம்,சுற்றுச்சூழல் போன்றவற்றில் அக்கறை கொண்ட பொதுவாக சில கவிதைகளும் எழுதியிருக்கிறார்.
வருங்காலங்களில் ஜானிடம் நாம் விரும்பும் வகையில், நிறைய எதிர்பார்க்கலாம் என்பதற்கு சான்றாக புரூஸ்லீ கவிதை நம்பிக்கை தருகிறது. சராசரியான இனப்பெருக்க பிராணியாக மட்டுமே தேங்கிவிடாமல், ஏதாவது மேற்கொண்டு செய்ய விரும்புகிறவனாக , பகுத்தறிவை பயன்படுத்த துடிப்பவர்களாக இருக்கும் மனிதர்களாலே உலகம் பல பயன்களையும், பாதைகளையும் அடைந்திருக்கிறது . ’ரொம்ப சுமாராகப் பாடுபவன்’ என்கிற கவிதை அடையாளம் தேடும் ஒருவனின் இந்தத் துடிப்பைத்தான் எனக்கு உணர்த்துகிறது. ஆனால், தனக்கு எது நன்குவரும், எது அருளப்பட்டிருக்கிறது என்பதை நன்றாக அறிந்து, அதில் ஈடுபடுபவனே பிரகாசிக்கிறான். இவை போன்ற மேலும் சில நல்ல கவிதைகளும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
கவிஞானாக விளங்குவதற்கு பல காரணிகள் தேவைப்படுகிறது. அதில் அன்பு ஒரு முதன்மையான காரணி. அதனால்தான் பெரும்பாலும், பதின்வயதில் காதல் கவிதைகளுடன் கவிதைகள் எழுதத் தொடங்குகிறார்கள். ஈர நிலத்தில்தான் விதைகள் முளைக்கின்றன.. அன்பு நெஞ்சமும், அனுபவமும், மொழியறிவும் ஜான் சுந்தரை கவிஞராக்கியிருக்கிறது.
ச.முத்துவேல்
01.2.2014
எங்கே இருக்கிறது குதிரைக்குட்டி
மகனின் கையெழுத்துக்களை
நேர்த்தியாக்கும் முயற்சியில்
அந்த விளையாட்டைத் துவங்கினேன்
ஓ_வை சரியாக எழுதினால் யானை முகம் தெரியும்
ஃ -ல் வைக்கலாம் பொங்கல் பானையை என்றதும்
பற்றிக் கொண்டது கற்பூரம்.
உயிரெழுத்துக்கள் மெய்யாகவே உருவங்களாய் உயிர்த்தன
கழியில் கட்டப்பட்டிருந்த அன்னம் கழுத்தை சொறிகிறது அகரத்தில்
பத்மாசனத்தை பயிற்சிசெய்கிறது இரவின் முதல் எழுத்து
தாய்க்குதிரை ஏணியின் கடையெழுத்து
பத்மாசனத்தை பயிற்சிசெய்கிறது இரவின் முதல் எழுத்து
தாய்க்குதிரை ஏணியின் கடையெழுத்து
தேனியின் பிற்பாதியில் நிற்கிறது அதன் செல்லக்
குட்டி
உகரம் நாகம்தான் என்பதை ஆட்சேபித்தவன்
உகரம் நாகம்தான் என்பதை ஆட்சேபித்தவன்
அதனை லாரி மாதிரி இருக்கிறது என்றான்
ஊ- தண்ணீர் லாரியாம்
போ’- நன்றாய்ப் பாருங்கள் தொலைபேசியின்
ஒலிவாங்கியை கீழே வைத்திருக்கிறார்கள்
ந- காகம் த- புறா
தீயும் நீயும் கொண்டைக் கிளிகளாகிப் பறந்துவிட
மகரம் கப்பலாகி மிதக்கத் துவங்குமுன்
ழகரம் தன் கத்தியால் நீரைக்கிழித்து விரைகிறது
புழுக்களென நெளியும் லகரங்களை விட்டு விலகி
மேய்ச்சலைத் தொடரும் ளகர ஜாதி ஆடுகள்
நித்ய கல்யாணியாக தெருவெங்கும் மலர்ந்திருக்கிறது
‘ஐ’ப்பூக்கள்
திலகம் வைத்து அலங்காரமாய் நிற்கின்றனர்
மெய்யெழுத்துப் பெண்கள்!பிஸ்கட் நிலாக்கள்
குழந்தைகளின் உலகத்தில்,
பூக்களிலிருந்து
ரோஸ்மில்க் வாசம் வருகிறது.
பூக்களிலிருந்து
ரோஸ்மில்க் வாசம் வருகிறது.
வகுப்புத்தோழர்கள் இனிஷியல்
சுமந்தே திரிகின்றனர்.
அறுபத்துப்பனிரெண்டு போன்ற விசித்திரஎண்கள்
புழக்கத்தில் இருக்கின்றன.
உண்ண மறுக்கிறவர்களை மட்டும்
பிடித்துண்ணும் பூச்சாண்டி உலவுகிறான்.
அறுபத்துப்பனிரெண்டு போன்ற விசித்திரஎண்கள்
புழக்கத்தில் இருக்கின்றன.
உண்ண மறுக்கிறவர்களை மட்டும்
பிடித்துண்ணும் பூச்சாண்டி உலவுகிறான்.
மிருகங்கள் நகங்களை உதிர்த்துவிட்டு
முகம் பொத்தி விளையாடுகின்றன.
முகம் பொத்தி விளையாடுகின்றன.
அதீத மாயசக்தியைப் பெற்று பூமியை
தீமையிலிருந்து காக்க முனைகின்றனர் பிள்ளைகள்.
தீமையிலிருந்து காக்க முனைகின்றனர் பிள்ளைகள்.
விளையாட்டுகளுக்கிடையே
அவர்கள் இடப்போகும் கட்டளைகளுக்கென
கைகட்டி காத்து நிற்கின்றன தெய்வங்கள்
இனிப்பொளி வீசுகின்றன பிஸ்கட் நிலாக்கள்.
அவர்கள் இடப்போகும் கட்டளைகளுக்கென
கைகட்டி காத்து நிற்கின்றன தெய்வங்கள்
இனிப்பொளி வீசுகின்றன பிஸ்கட் நிலாக்கள்.
பறக்க இயலாத பறவை
எல் கே ஜி வகுப்பில்
இங்கிலீஷ் பீரியட் முடிந்ததும்
தமிழ்ப்பாடநேரம் துவங்குமென
ஆசிரியை அறிவித்தவுடனே
தமிழ்ப்பாடநேரம் துவங்குமென
ஆசிரியை அறிவித்தவுடனே
ஆங்கிலப்
புத்தகத்திலிருந்த
சித்திரங்கள் தமிழ்ப்புத்தகத்துக்குத் தாவுகின்றன
சித்திரங்கள் தமிழ்ப்புத்தகத்துக்குத் தாவுகின்றன
யாரும் அறியா வண்ணம்.
ஜீப்ரா
வரிக்குதிரை என்றும்
ஜிராஃபி
ஒட்டகச்சிவிங்கி எனவும்
பெயர்களை
தமிழில் மாற்றிக் கொண்டு
இடம் பெயர
வரிக்குதிரை என்றும்
ஜிராஃபி
ஒட்டகச்சிவிங்கி எனவும்
பெயர்களை
தமிழில் மாற்றிக் கொண்டு
இடம் பெயர
அவற்றைத் தொடருகிறதொரு
பெருங்கூட்டம்.
பெருங்கூட்டம்.
லோட்டஸ்
என்றழைக்கப்படும் தாமரை
ரோஸ்
எனப்படும் ரோஜா ராபிட்(எ)முயல்
பேரட்(எ)கிளி
டக் (எ) வாத்து யானை, மீன்,மயில், ஆடு......
என நீள்கிறது வரிசை
எங்கே இருந்தாலும்
ஒரே மாதிரி முழி
இந்த ஆந்தைக்கு.
எப்போதும் என்றழைக்கப்படும் தாமரை
ரோஸ்
எனப்படும் ரோஜா ராபிட்(எ)முயல்
பேரட்(எ)கிளி
டக் (எ) வாத்து யானை, மீன்,மயில், ஆடு......
என நீள்கிறது வரிசை
எங்கே இருந்தாலும்
ஒரே மாதிரி முழி
இந்த ஆந்தைக்கு.
குழந்தைகளுடன்
இருப்பதற்கான யுக்தி தெரியாமல்
எம்பி எம்பிக் குதித்தபடி
தவிக்கிற பெங்குவினுக்கு தேவை ஒரு தமிழ்ப்பெயர்.
-ஜான் சுந்தர்
-ஆனந்த விகடன்
-சொந்த ரயில்காரி தொகுப்பில்
‘சொந்தரயில்காரி’ தொகுப்பு வெளியீட்டு விழாவில் கவிஞர் கலாப்ரியா ( 2.2.14. கோவை )
இந்தத் தொகுப்பைப் பொறுத்தவரை ஜான் தன் கலைமானின் கொம்பைத் தானே வரைந்திருக்கிறார். தன் இரவின் முழுநிலவைத் தானே கொண்டாடியிருக்கிறது, இந்த இளைய நிலா. கிரிக்கெட் மொழியில் சொன்னால் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை பிரமாதமாக ஆடியிருக்கிறார். அவருடைய ஆட்டச்சக்கரம் – வேகன் வீல்- உராய்வேயின்றி அழகாகச் சுற்றியிருக்கிறது.
நெல்லிக்காய் மூட்டை சிதறினாற்போல என்று ஒரு பேச்சு வழக்கு உண்டு எங்கள் பக்கத்தில், அதுபோல அக்காவின் மடியிலிருந்த பச்சைப் பயிறு சிதறியோடுவதில்,அலைக்கழிப்பில் ஆரம்பிக்கிறது, எந்தக் கலைஞனையும் போலவே ஜான் சுந்தரின் ஆரம்ப வாழ்க்கையும்.
வலியைத் தருகிற வாழ்க்கை, கலைஞனுக்கு ஒரு பார்வையைத் தரும். அது பார்ப்பதையெல்லாம் படைப்பின் மகத்துவத்தோடும், படைப்பின் முரண்களோடும் பார்க்கும். மகத்துவத்தை வியந்தும் முரண்களை உணர்ந்தும் பார்க்கும். கலை மனம் மகத்துவ மலரை முரண் நாரில் கோர்க்கும். அல்லது அந்தச் செடியிலேயே வண்ணத்துப் பூச்சிக்காய் வாடவிட்டுக் காவல் காக்கும்.இந்தப் பார்வை வாய்த்தவருக்கு வார்த்தை வாய்க்கும். தேர்ந்தெடுத்த புதுப்புது வார்த்தைக் கூட்டங்கள் மூளைக்குள் வடம் பிடிக்கும். அப்போது அவனது மொழியே மைதுன மகிழ்ச்சி கொள்ளும், தன் கொழிப்பைப் பார்த்து, செழிப்பைப் பார்த்து.
ஜானுக்கு எப்படி மொழி வாய்க்கிறது பார்ப்போமா
உங்கா மரத்தின் கனி
_____________________
நூல் கிளைகளில்
கொத்துக் கொத்தாய்
கனிந்திருந்த மார்புகளைப் பார்த்து
ஏங்கி அழுகிறது குழந்தை
ஐந்து ரூபாய் கொடுத்து
அதிலொன்றைக் கொய்து தந்தவுடன்
அம்மாவைக் கட்டிக் கொள்வது மாதிரி
அதனைக் கட்டிக் கொள்கிறது குழந்தை
இது அம்மாதான்...இது அவளேதான்
கண்ணாடிக் கரைசலாய்
வாயிலிருந்து ஒழுகும் அன்பில்
அபிஷேகம் செய்யப்படுகிறது
வாயுலிங்கம்
எச்சில்சாலைகளில்
காம்பைத்தேடும் நெடும்ப்யணம்
ஈறுகளால் நடந்தே இந்த உலகத்தை
சுற்றி வந்தாயிற்று ஒரிரு முறை
தொப்புள் முடிச்சைக் கண்டதும் அத்தனை சிரிப்பு
இது அம்மாதான்...இது அவளேதான்
‘உங்கா’ வென குழந்தை வீறிடக் கேட்டு
முகம் சுண்டி விட்டபலூனுக்கு
மெதுமெதுவாய்... மெதுமெதுவாய்..
முலைக்கத் தொடங்குகிறது ஒற்றைக் காம்பு
இப்போது... நிஜமாகவே
இது அம்மாதான்... இது அவளேதான்.
தாயின் முலையூட்டலுக்கு ஏங்கும் ஒரு குழந்தமையின் தவிப்பைக் கவிதையெங்கும் வழியவிட்டிருக்கும் ஜான் சுந்தரின் கவித்துவம் காளமேகப்புலவரின் ‘யானையும் வைக்கோற்போரும்’ போல ஒரு சிலேடைக் கவிதையாகிற அபாயத்தை அழகாகத் தவிர்த்திருக்கிறது.அதிலும் காற்று நிரம்பிய பலூனை வாயுலிங்கமாகப் பார்ப்பதும்,அதுவே சுருங்கத் தொடங்கையில்,பால் சுரக்கும் காம்பாவதும் தானாகக் கை வந்த செய்நேர்த்தி.
கவிதை தானாகக் கைவருவதில் எனக்குப் பெரிய நம்பிக்கையில்லை. ஒரு வலிய அனுபவம் பசுமரத்தாணி போல,பின்குஷனில் யத்தனங்களின்றிச் சொருகிக் கொள்ளும் குண்டூசி போல, மூளைக்கூழில்,அல்லது ஈர மனத்தில், ஏற்படுத்தும் சித்திரம் மொழியாக உருப்பெறுவதென்பது ஒரு பழக்கத்தின் காரணமாகவே என்று நினைப்பவன் நான்.சொல்லவில்லையா அவ்வைக் கிழவி சித்திரமும் கைப்பழக்கம் என்று.ஆனாலொரு கவிதையக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு கவிஞனுக்கு இருக்கிறது. மண்ணிலிருந்தோ, விலா எலும்பிலிருந்தோ செய்யப்பட்ட பொம்மையின் நாசியில் ஊதி ஜீவன் தருவது போல், ஒரு மூச்சுக்காற்றில் கவிதைக்கு ஜீவன் தர வேண்டிய கட்டாயத்தில் இருப்பவன் கவிஞன்.
”அப்படியல்ல....” என்று ஒரு கவிதை,
இங்கே...
துணிக்கடையில்
பணிமனையில்
உணவகத்தில்
மதுக்கடையில்
பொடியன் என்றால்
கொஞ்சம் இளப்பம்தான்.
அங்கே அப்படியல்ல
உங்கள் மட்டிலுமொரு
விளிச்சொல்தான்
தம்பியென்பது
ஈழத்தில் அப்படியல்ல
மேலும்.....
காணவில்லை என்பதும்
நாதியில்லை என்பதுவும் கூட...
கடைசி மூன்று வரி இல்லாவிட்டால் இந்தக் கவிதை ஒரு மண்பொம்மை. மூனு வரிகளில் ஆறு தேர்ந்தெடுத்த வாரத்தைகளில் ஜீவ சுவாசத்தை ஊதி துடி துடிக்கும் உயிர்ப்பைத் தருகிறார், கர்த்தராகிய ஜான்சுந்தர்.கவிதையைப் பிழைக்க வைத்து விடுகிறார்...கவிஞராகிய ஜான் சுந்தர். ஆனால் நாம் தான் ஈழத்தமிழனை நம் இறையாண்மைக்கு பலி கொடுத்து விட்டோம்.
கோள்மூட்டி விரல்கள் என்று ஒரு கவிதை.(பக்கம்_42)
நீங்கள் செல்லும் பக்கமெல்லாம் திரும்பும் சூரியகாந்திக் கவிதைகள் நிறைந்த இந்தப் புத்தகத்தில்; குட்டி இளவரசர்களும்,இளவரசிகளும் ஆலிஸும் அலையும் அற்புதமான ஜானின் உலகில் பூத்திருக்கும் இன்னொரு சூரியகாந்தி இந்தக் கவிதை.
எல்லாக் கவிதைகளின் எல்லா வரிகளிலும், வரிகளுக்கிடையேயும் ஜான் தன் பார்வை சென்று பற்றியதையெல்லாம் அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார்.
புதிய வார்ப்புகள் கவிதையில் (பக்62) பரோட்டாக் கடையின் நிகழ்வுகளையும் கூடவே மாஸ்டரின் கனவுகளையும் அவர் எழுத்தில் வார்த்திருக்கும் விதமே அருமையான உதாரணம். பார்வையில் கூர்மையுள்ள, ஆவியில் எளிமையுள்ள, பாக்கியவானின் பதிவுகள் இந்த அறுபத்திச் சொச்சம் கவிதைகளும்.
கவிதையைக் கைவிடாத, நமக்குத் தூரமாயில்லாத கவிதைகளைத் தரும் இந்த சங்கீதக்காரனை வாழ்த்தி விடை பெறுகிறேன் வணக்கம்.
Tuesday, 16 September 2014
அவளும் நானும் அலைபேசியும்
பைத்தியக்காரனும்
பைத்தியக்காரியும்
இன்பமாய் குலவுவதை
வெறித்துப் பார்க்கின்றன
இன்பமாய் குலவுவதை
வெறித்துப் பார்க்கின்றன
பைத்தியங்கள்.
தொடர்ச்சியாக
பூக்கள் மலர்கின்றன அலைபேசியில்.
சட்டைப்பை மணக்கிறது குறுஞ்செய்தியின் இருப்பால்.
உள்பெட்டியில்
நிரம்பி வழிகிறது கவிதைகள்.
காதற்கடவுளை
பேட்டிகண்ட இறுமாப்பில்
வாழ்ந்துவருகிறேன்.
கொடிய நிமிடத்தின்
கடைசித் துளியில்
இசைத்துணுக்குடன்
இசைத்துணுக்குடன்
வந்தமரும்
நீயனுப்பிய குருவி.
கட்டைவிரல்
கபடியாடும் இல்லாத
உறை பிரிக்க.
மோகப்பொடி தூவிய
வார்த்தைகள்
சொல்லித்தூண்டிவிடு
பற்றி எரியக் காத்திருக்கிறது உயிர்.
பற்றி எரியக் காத்திருக்கிறது உயிர்.
உனக்குத் தெரியுமா
நம் அலைபேசிகளும்
ஒன்றையொன்று
நம் அலைபேசிகளும்
ஒன்றையொன்று
காதலிக்கத்துவங்கி விட்டன .
காதலில் விழுந்தவர்களை
மொய்த்துக் கொண்டே இருக்கின்றன
குறுஞ்செய்திகள் .
மொய்த்துக் கொண்டே இருக்கின்றன
குறுஞ்செய்திகள் .
Subscribe to:
Posts (Atom)
அவள் கடுங்கோபத்தோடு கேட்டாள்.
ஏன் இப்படி இருக்கிறாய்? எப்போது பார்த்தாலும் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு குனிந்து மண்ணையே பார்த்துக் கொண்டு அல்லது மரக்கிளையைப் பார்...
-
நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன் குழந்தையைப்போலச் சிந்தித்தேன் குழந்தையைப்போல யோசித்தேன் ; நான் புரு...
-
அழ வேண்டுமா சிரிக்க வேண்டுமா ஒரு எழவுந்தெரியவில்லை அந்தக் குழந்தைக்கு படுக்க வைத்திருந்தவனை கொஞ்ச நேரம் வெறித்து விட்டு அவனது வண்டியருக...
-
அண்டத்தின் எண்ணி முடியாத பால் வீதிகளில் எத்தனையோ விண்மீன் குடும்பங்கள் நீரும் காற்றும் துணைக்கொரு நிலவுமுள்ள கோளில் மிதந்து அலைகிறது சிற...