Thursday, 18 September 2014

ஜான்சுந்தரின் சொந்தரயில்காரி கவிதை தொகுப்பை முன்வைத்து... -வெய்யில்






நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன்
 குழந்தையைப்போலச் சிந்தித்தேன் குழந்தையைப்போல யோசித்தேன்;
நான் புருஷனானபோதோ... குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.
-       1கொரி--13:11 (புதிய ஏற்பாடு)


குழந்தைகளின் கண்கள் உண்மையின் பேரொளி கொண்டவை. அவை இவ்வுலகின் ஒவ்வொரு துகள்களையும் ஆச்சர்யத்தோடு காண்கின்றன. நம் கருத்துக்கள், அர்த்தப்பாடுகளெல்லாம் தலைகீழாக்கப்படும் அவ்வுலகில் எப்போதும் மகிழ்ச்சியின் நதி வற்றுவதேயில்லை. வாழ்வின் பல்வேறு அழுத்தங்களுக்கு நடுவே விழிபிதுங்க நிற்கும் நமக்கு அந் நதியிலிருந்து ஒரு குவளை அள்ளி பருகத்தந்திருக்கிறார் ஜான் சுந்தர்.

இத்தொகுப்பின் பெரும்பாலான கவிதைகள் குழந்தைகளின் உலகில் நிகழ்பவை. நாம் பயன்படுத்துகிற பொருட்கள், சொற்கள், நம்பிக்கைகள், நாம் புரிந்து வைத்திருக்கிற வாழக்கை, ஆகியவை குழந்தைகளின் உலகில் என்னவாக வண்ணம் மாறுகின்றன;;; விரிகின்றன; சுருங்குகின்றன; என்பதை குழந்தைகளின் மொழிக்கு நெருக்காமான மொழியில் கவிதையாக்கியிருக்கிறார்.

தாய்க்குதிரை ஏணியின் கடையெழுத்து
 தேனியின் பிற்பாதியில் நிற்கிறது
  அதன் செல்லக்குட்டி!”

எழுத்துக்களில் மறைத்திருக்கும் உருவங்களை, வடிவங்களை பேசும் எங்கே இருக்கிறது குதிரைக்குட்டி?” எனும் கவிதையில் வரும் இக்காட்சியில் ணி எனும் எழுத்து தாய்க்குதிரையாகிவிடுகிறது. னி அதன் செல்லக்குட்டியாகிறது. இக்கவிதையில் வெளிப்படும் கற்பனையும், நேயமும், கச்சிதமான சொல்முறையும், ஜான் சுந்தரின் பல கவிதைகளில் கூடி வந்திருக்கிறது. காட்சிப்பிழைகள், “பென்சிலின் நுனியில் உலகத்தின் நிறம்”, போன்ற கவிதைகள் நல்ல காட்சியனுபவம் தரக்கூடியவை.

"நீலச்சிலுவை சாபங்கள்"  எனும் கவிதையில் மனிதன் தன் அதிகாரத்தை  ஃறிணைகளிடம் இழந்துவிட்டால் மனிதனை அவைகள் பயன்படுத்தும் விதத்தை கற்பனை செய்கிறார். தில் கோழிகளின் சைக்கிளில் மனிதன் தலைகீழாய் தொங்குகிறான்; மலர்களின் சவ ஊர்வலத்தில் மனித காதுமடல்கள் தூவப்படுகின்றன. இப்படித்தான் இவர் புதிதுபுதிதாக பல காட்சிகளை நமக்கு அனுபவிக்கத் தருகிறார்.

வெள்ளை ரொஜாக்கள்
பரோட்டாக்களாக உருமாறுகின்றன
(சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் பரோட்டா பேடா இவருக்கு வெள்ளை ரோஜாவாகத்தெரிகிறது.)

கை விரல்களால்
சமதளப்படிகளில் நடக்கும்  
வித்தையறிந்திருக்கிறான்
பியானோ கலைஞன்!”.

இவ்வரிகள் மெலும் ஒரு சிறந்த உதாரணம்.

ஒவ்வொரு கவிஞனும் இயல்பில் வேறுபட்ட கலாச்சாரத்தை, தொழிலை, அரசியலை கொண்டவனாக இருக்கிறான். அவன் விரும்பாவிடினும் அவை கவிஞனின் வரிகளில் மிக நுட்பமாக அமர்ந்து கொண்டுவிடும். மேலும் ஒரு கவிஞனை இவை தனித்து அடையாளப்படுத்தவும் கூடும். இவ்வகையில் ஜான் சுந்தரின் தொழிலான இசை ஓரளவு இவரை தனித்து அடையாளப்படுத்திக்காட்டுகிறது.
தொகுப்பில் நான் மிகவும் ரசித்துப்படித்த கவிதையான “கள்ளூரும்சுனையை இங்கு வாசிக்க விரும்புகிறேன்.

(பக்கம்: 26)


இக்கவிதையில் தமிழ் சினிமாவின் அலங்கரிக்கப்பட்ட பரிசல்களும் அது சார்ந்த பாடல்களின் துவக்க ஆலாபனைகளுமாக விரிந்து செல்கின்றன. ஜான் சுந்தருக்கு நிறையும் குறையுமாக சொல்வதற்கு இக்கவிதையே எனக்கு போதுமானதாக இருக்கிறது. இன்னும் கவனமாக செய்யப்பட்டிருக்க வெண்டிய கவிதை இது. ஆனாலும்”

“சுழலில் சிக்கிய பரிசலென
சுற்றத்தொடங்குகிறது கிராமபோன் தட்டு

என்ற இறுதி வரிகளும் பின்னான ஆலாபனையும் நமக்குள் அளவில்லா உற்சாகத்தைக் கடத்தி விடுகிறது.         

பொதுவாக இத்தொகுப்பின் கவிதைகள் மூன்று விதமான வாழ்வை பேசுகின்றன. 1. குழந்தைகளின் உலகு. 2. குடும்ப, சமூக வாழ்வுலகம். மற்றும் 3. ஜான் சுந்தரின் இசை உலகம். இது ஒரு புரிதலுக்கான வகைப்பிரித்தல் மட்டுமே. இம்மூன்றுலகும் கவிதைகளில் பிரிக்க இயலாதவாறு பின்னிப்பிணைந்திருக்கின்றன. அது அப்படியே இருக்கக் கடவது.  

ஜான் சுந்தருக்கு சொல்லவெண்டிய சில விசயங்கள் இருக்கின்றன. குழந்தைகளின் உலகம் பேசப்படும் இடங்களிலெல்லாம் செண்டிமெண்ட்சற்று தூக்கலாக இருக்கிறது. குழந்தைகள் பெரும்பாலும் உங்கள் குழந்தைகளாக இருக்கிறார்கள். செனல் (4, காட்சிபிழைகள் கவிதைகள் தவிர்த்து.) குழந்தைகளின் உலகை எழுதியவர்களில் எனக்கு பிடித்தமான முகுந்த் தனது கவிதைகளில் அழகான காட்சிகளை படம்பிடித்து தருவார். அனால் பெரும்பாலும் அவர் ஃப்ப்ரேமுக்குள் வரமாட்டார். உங்கள் கவிதைகளில் நீங்கள் அதிகமாக ஃப்ப்ரேமுக்குள் வந்திருப்பதாக உணர்கிறேன்.

இறுதியாக

உனவின்றி, மருந்தின்றி, பாதுகாப்பின்றி சில நொடிகளுக்கு ஒரு குழந்தை என மரணித்துக்கொண்டிருக்கும் உலகில்... போர் என்ற பெயரில் பல்லாயிரக் கணக்கான குழந்தைகளின் தலையில் வெடிகுண்டு வீசப்படும் உலகில்... வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!.

இந்நேரம் அவர்களை முன்னிலைப் படுத்தும் ஒரு கவிதை தொகுப்பை நான் வாழ்த்துகிறேன்.

எல்லா வலிகளிலிருந்தும் வெளியேற ஒரு குழந்தையின் புன்னகையின் முன் நாம் மண்டியிடுவோம். 

ஜான் சுந்தர் வரிகளில் சொல்வதென்றால்,

குழந்தைகளின் சொந்தரயில்
புறப்பட்டு நிற்கிறது...
ததீம் ததீம் திக்கு ததா  ததா....
ததா ததா திக்கு ததீம் ததீம்


ஆசிர்வதிக்கப்பட்டவர்களே உள்ளே வாருங்கள் !

No comments:

அவள் கடுங்கோபத்தோடு கேட்டாள்.

  ஏன் இப்படி இருக்கிறாய்?  எப்போது பார்த்தாலும்  முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு  குனிந்து மண்ணையே பார்த்துக் கொண்டு அல்லது  மரக்கிளையைப் பார்...