ஆர்மோனிய பூதம்
எனக்கோர் ஆர்மோனியக்காரியைத் தெரியும்
அடுத்த தெருவின் அகாடெமிக்காரியையும் தெரியும்
ஆர்மோனியத்திடம் பாடுகிற குழந்தைகள் பத்துப் பதினைந்தும்
அகாடெமியிடம் ஆர்மோனியங்கள் மட்டுமே பத்துப் பதினைந்தும் இருந்தன.
எப்போதாவது மாடிக்கு வந்து வானம் பார்ப்பாள் அகாடெமிக்காரி
மூன்று மாடி ஏறி வருவது எவ்வளவு சிரமம்.
‘கானாம்ருதம் பட்டால் வானம் கரைந்தொழுகும்’ பழம்பாட்டின் சுரங்களால்
கூரையோட்டுப் பொத்தலை அடைப்பாள் ஆர்மோனியக்காரி.
எனக்கு ஆர்மோனியக்காரியின் அம்மாக்காரியையும் தெரியும்
இருள்கவியும் அந்தியினந்தியில்
அகாடெமிக்காரியின் வீட்டிலிருந்து வெளியேறி
என்னிடம் மாட்டிக்கொண்டாள்.
ஒளிந்திருக்கிற பூதத்தை
அகாடெமிக்காரியின் பாத்திரங்களில்
தேடிக்கொண்டிருப்பதைச் சொன்னாள்,
தேய்த்துத் தேய்த்து ஒருநாள் அதைப் பிடித்தும்விடுவாள்.
ஆர்மோனியக்காரி இனி எழுப்பப்போகிற மாடிகளை
துளைத்துக்கொண்டு இறங்குவது வானுக்கும்
கான்கிரீட்டைத்தாண்டி வான்தொடுவது கானாம்ருதத்திற்கும் எவ்வளவு சிரமம்
No comments:
Post a Comment