Wednesday, 30 October 2019

ஔஷதக் கூடம்





000

அப்பாவுக்கு புற்றுதானாம்.
உறுதியாகிவிட்டது.
மூப்பின் பொருட்டு இரண சிகிச்சையை 
நிராகரித்துவிட்டார் மருத்துவர்.
சங்கதி தெரியாமல்  
பேத்தியின் பிரதாபங்களில் 
தோய்கிறார் அப்பா.
கதாபிரசங்கியின் துடிமேளக்காரனாக
அப்பாவின் பேச்சுக்கெல்லாம் 
பக்கத்துப் படுக்கைக்காரர் 
முகிழ்நகை செய்கிறார்.  
அவரது தொண்டையில் 
துளையிட்டிருக்கிறார்கள்.

000

இப்போது எப்படி இருக்கிறது?
பரவாயில்லை
காற்றோட்டமில்லை .... நல்ல படுக்கையில்லை
பரவாயில்லை
செவிலியர் இல்லை ......மருந்து போதவில்லை
பரவாயில்லை..... பரவாயில்லை
வலி மிகும் சமயங்களில் மருத்துவரே இருப்பதில்லை
ஆனாலும்..... பரவாயில்லை  
நாம் கொஞ்சம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம்
இப்போதைக்கு இந்தக் கூரையின் மீது  குண்டு விழாது


000


அப்பாவுக்கு வெந்நீர் தேவை.
மருத்துவமனைக்கு வெளியே
நடுஇரவிலும் திறந்திருக்கும் 
அடுமனைகள் உண்டு.
நல்ல காபியும் சிகரெட்டும் கிடைக்கும்.
இருளில் வலுப்பெறும் 
பாடல்களை ஒலிக்கவிடுவார்கள்.
நான்கைந்து நிறுத்தங்களைத்தாண்டினால்
சந்துக்குள் ஒரு தேநீர்க்கடை இருக்கிறது.
அங்குதான் 
இளஞ்சூட்டுக் கருணை கிடைக்கும்.

000


என் மேலாளருக்கு 
எல்லாமே பொய்யாகத் தெரிகிறது.
’தலைமை மருத்துவர் 
முதல் சுற்று வரும்போது
பார்த்துவிட்டு வருகிறேன்’ என்றால்
ஒப்புக் கொள்ள மறுக்கிறார்.
பக்கத்து படுக்கைக்காரரின் மனைவி
தான் பார்த்துக் கொள்வதாகச் சொல்கிறார்.
’டாக்டரை நீங்களும் பார்க்க வேண்டுமா?’
’நேற்று மாலையே பார்த்தாகி விட்டது’
துணிகளை மடித்தபடி
’இன்று மாலை 
வீட்டுக்குப் போகிறோம் என்றார்.
அருகாமைக்கு வந்து குரலை இடுக்கி
’பெரிய டாக்டர் 
கையை விரித்துவிட்டார் தம்பி’
கணவரிடம் திரும்பி பரிவாக கேட்கிறார்
தாகமாக இருக்கிறதா ?.... 
கொஞ்சம் தண்ணீர் தரட்டுமா?

000

No comments:

அவள் கடுங்கோபத்தோடு கேட்டாள்.

  ஏன் இப்படி இருக்கிறாய்?  எப்போது பார்த்தாலும்  முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு  குனிந்து மண்ணையே பார்த்துக் கொண்டு அல்லது  மரக்கிளையைப் பார்...