Monday, 27 January 2020

கடுங்காப்பி


துக்கவிசாரணைக்கு 
இடையில்
காப்பி வந்தது

வழக்கமாக காப்பியை
மறுக்கும் யாரும்
அப்படிச் செய்யவில்லை

காப்பியை குறித்து
பேசும் எவரும்
அது பற்றி பேசவில்லை.

காப்பியும்
வழக்கம் போலிருக்கவில்லை

நாசியைச் சீண்டும்
மணமின்றி ஒளிகுன்றி

சிறுகுமிழிகள் விம்மி வெடிக்க
முகம் கறுத்து

இரண்டு கைகளுக்கும்
இடையிலொரு
கசந்த பிரார்த்தனையைப் போலிருந்தது.

குரல்வளையை இறுக்கிப்பிடிக்கும் 
இந்த திரவ துக்கம்

முன்னறையிலிருந்து ஓடோடி
படுக்கையில் விழுந்து
அழும் சிறுமியுமாயிருக்கிறது.








Thursday, 23 January 2020

பய கெளம்பீட்டான்


எப்பம்பாரு 
எதையாச்சும் மறந்துட்டு
தெருமுக்கு வரைக்கும் போயி 
திரும்பி வருவான்  குண்டிமறந்தபய

பைத்தாரப்பய வருவாம்னுதான் 
கோட்டிக்காரி
வாசல்லயே காவக் கெடக்கா

இந்த மட்டம் அந்தப்பய
ஒடம்பல்ல வச்சுட்டு போயிருக்கான்

ஆத்தீ...........
என்னமாத்தான் வருது எனக்கு

Saturday, 18 January 2020

அற்புதம்! அற்புதம்!

தன்போல சிலமடங்கு
வளர்ந்த சோடி
இலை சுமந்து
தான் நடக்கும்
சிற்றெறும்பு

அற்புதம் !அற்புதம்!

தலைபெருத்த
மூளையினை
உடல் சுமந்து
திரிவதுவும்

அற்புதம் !அற்புதம்!

தொழுமிரண்டு
கரங்களைத்தான்
தலை சுமந்து
திரியுதந்தச் சின்னவுயிர்

அற்புதம் !அற்புதம்!

அது தெரிந்து
கூத்தாடும்
இவ்வுடலும்
இக்கணமும்

அற்புதம் !அற்புதம்!

Sunday, 12 January 2020

வேளாண்மை


சோற்றைத் தூக்கி
தூக்கில் போட்டு
தூக்கைத் தூக்கி
பையிலிட்டு
பையை மகளின்
வாய்க்குள் போட்டு
மகளைத் தூக்கி
வண்டியில் போட்டு
வண்டியைத் தூக்கி
சாலையில் போட்டு
சாலையைச்சுருட்டி
பள்ளிக்குள்
போட்டு வந்தேன்.
சுருட்டிவைத்ததை
மாலையில் போய்
உதறுவேன்.



Thursday, 9 January 2020

நறுவிசு

அடுப்பைத்துடைத்து
பாண்டங்கள் கழுவி
முகம்திருத்தி
படுக்கைக்கு
வருகிறாள் பத்தினி.
அவளுள்ளும் புறமும்
அவ்வளவு நிம்மதி.

வீட்டுக்குத்திரும்பும்
தெருமுக்கில்
ஒற்றைக்காலூன்றி
நான் துலக்கிவைத்த
எனது உள்பெட்டிகளின்
அதே நிர்மலம்.

அவன் கட்சி

நாகசுரம்
நாயனம்
நாதஸ்வரம்

என்னென்ன பெயர்கள்
எத்தனையெத்தனை
விவரணைகள்

பீப்பி என்று
சொன்னான் பார்
ஒரு பாலகுரு
நான் அவன் கட்சி

கல்யாண வீட்டினிடையோடுகிற
சிறுவர்களை நிறுத்தி

என் பெயர் பீப்பி
என் பெயர் பீப்பி
என்று சொல்லிக்கொண்டேயிருக்கிறது

Wednesday, 8 January 2020

தாலேலோ

உச்சிக்
கோபுரத்தில்
பழுதுபட்ட
நட்சத்திரம்
உயரத்திலே
பழஞ்சிலுவை
முழங்காலில்
கருங்காய்ப்பு
போதகரின்
முகவொளியில்
பழையவலி
துளியுமில்லை.


அணிகலனே
ஆகி மின்னும்
ஆணிகளும்
திருநாளில்
ஆளுக்கொரு
வண்ணமிட்டு
நவச்சிலுவையாக்கி
வைக்க

உச்சிக்
கோபுரத்தில்
பழுத்திருக்கும்
நட்சத்திரம்
உயரத்திலே
புதுத்துயரம்
முழங்காலில்
செவ்வுதிரம்
போதகரின்
முகவலியில்
புதியவொளி
துளியுமில்லை.

Saturday, 4 January 2020

பூக்குரல்

00


சுணங்காது
மலர்ந்திரு.
தண்டிலோடி
முந்துகிற
இலையின் பெயரே
மலர்.


00


ஓரிருநாள்
பூரிப்புதான்
ஆயினும் என்ன?
கும்பலுள் ஒளிந்து
நிலைப்பதைக் காட்டிலும்
ஒளிர்ந்து மடி.


00



பீக்காட்டில்
பூத்தாலும்
பூ தான்
பூ.


00


மனக்குழியின்
இருள் துலக்கும்
தாவரப்பல் வெளிச்சம்


00


பைத்தியப்பூவுக்கு
சவத்தின்
மேல் கிடந்தாலும்
சிரிப்பு


00

அவள் கடுங்கோபத்தோடு கேட்டாள்.

  ஏன் இப்படி இருக்கிறாய்?  எப்போது பார்த்தாலும்  முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு  குனிந்து மண்ணையே பார்த்துக் கொண்டு அல்லது  மரக்கிளையைப் பார்...