ஸ்மைலிகள்
சாவு வீட்டிலும்
சிரித்துத் தொலைத்து விடுகின்றன.
என்றாலும் அவை
கந்தலை மறைத்துக் கட்டுவதில் வல்லவை.
பெண்ணைத் தாரை வார்க்கும்போது
நடுங்கிய கரங்களின் உடல்
பேண்டுவாத்தியக்காரனுக்கு
ருத்ரமுத்திரை காட்டி
கைக்குட்டையை விசிறி விசிறி துள்ள
இங்கொரு ஸ்மைலியின் கண்ணீர்ப்பை
பொட்டித் தெறிக்கிறது.
வாளேந்திக் களமாடும்
வீர ஸ்மைலியோ
வயலின் படையணியை
சுற்றி வளைக்க விட்டு
அவற்றின் முன் மண்டியிட்டு
முதுகை குலுக்குகிறது.
உச்சப்பகடியின் உள்வலியை
யாரேனும் மோப்ப
குலைகின்றன சில.
தாயைத் தொலைத்த நாய்க்குட்டிகளுக்கு
மைதாநிலவைப் பிட்டு
ஊட்டிக் கொண்டிருந்த ஒருத்திக்கு
சடுதியில்
ஐந்தாறு மார்புகள் முளைக்கக் கண்ட
ஸ்மைலியின் துளிகளில்
நனைகிறது நெடுஞ்சாலை.
-கொம்பு
செப்டம்பர் 2015
No comments:
Post a Comment