நமது கற்பிதங்களின்படி இல்லை
புதையல் காக்கும்
பூதங்களின் வாழ்வு
கற்பகவிருட்சத்தின் மறைவில்
ஒரு வேதாளம்
பொத்தல் பனியனோடு
சட்டையை மடித்துக் கொண்டிருக்கிறது
நரக்கறி சீந்தாது
போசியும் பருக்கையுமாய்
பதுங்கிய
சைவக்காட்டேரியைப் பார்த்தேன்
பெட்டிக்கடை
அடைக்கப்படுமுன்
நெருப்புக் குச்சிகளை
சேகரித்துக் கொள்ளும் பிசாசின்
வாயினுள் கொள்ளியில்லை.
நுரையீரல் கோத்த நீர்
நாசிக்காற்றில்
சலசலக்கும் சிறு நதியென.
பூதங்கள் அனாதைகளல்ல
நிறுவனமிருக்கிறது
சீருடையிருக்கிறது
ஷூக்கள் இருக்கின்றன
விடை தர
ரப்பர் வளைக்கரங்களிருக்கின்றன
அவைகளுக்கு
குழப்பங்களும் கேள்விகளும் இருக்கின்றன
வருபவனெல்லாம்
ராஜனாயிருக்கிறான்
ராஜாக்கள் எல்லோருக்கும்
சங்கேதம் தெரிந்திருக்கிறது.
செய்தித்தாளை
மனனம் செய்வதற்கும்
கதவை மெதுவாக திறக்கும்படி
வேண்டிக் கொள்ளவுந்தான்
காவல் பூதங்கள் படைக்கப்பட்டனவா
ராப் பகலாய் காத்திருந்தும்
கண் கொண்டு பார்ப்பதில்லை
இந்தப் பணங்காய்ச்சி
யாவர்க்கும் கொட்டித்தீருமதன்
சுருளாத் தளிரிலைகள்
பர்ஸுகளில் நிரம்பப் பார்த்து
மூச்சை நெருப்பாய் விடுவதுதான்
பூதங்களின் வேலையா
ஆனந்த விகடன் 18.11.15
1 comment:
வணக்கம்
கவிதை நன்று ஆனந்த விகடனில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment