Sunday, 11 August 2019

விகடன் தடம் - கேள்வி பதில்


1.பொதுவாக இலக்கியத்தில் நகைச்சுவையைப் பற்றிய உங்களின் பார்வை என்ன?

இலக்கியத்தில் மட்டுமல்ல. வாழ்வியல் பரப்பில் காணக்கிடைக்கிறவைகளில் கணிசமானவை நகைச்சுவை காட்சிகள்தான். இலக்கணத்தில் தேடினால் தொல்காப்பியர் நகை என்பதை மட்டுமே  எள்ளல், இளமை, பேதமை, மடன் என்று நான்கு வகையாக பிரிக்கச் சொல்கிறார். அவலத்தின் மறுமுகமே நகைச்சுவை. வாட்ஸ் அப்பில் ‘சிரித்தே செத்துவிடுவீர்கள் என்று ஓடுகிற வீடியோக்களில் பலதும் சம்மந்தப் பட்டவர்களின் அந்தரங்கத் துயரங்கள் தானே?சாப்ளினுடைய ஷூக்கள் சிரிக்கவைப்பவைதான் சந்தேகமில்லை. அவை எங்கிருந்து வந்தன எனபது தெரிந்தால் சிரித்துக் கொண்டிருக்கிற முகம் உறைந்து போகுமா இல்லையா? அப்புறம் காலம். காலத்தில் சாயம் வெளுக்கக் கூடியவைதான் அவலமும், நகைப்பும்,எல்லாமும்.  போலவே, எப்படிப் பார்க்கிறோம் என்பதையும் பொறுத்ததுதான் நகைச்சுவை. 

அஞ்சனக் குன்றம் அன்ன அழகனும்,
அழகன் தன்னை
எஞ்சல் இல் பொன் போர்த்தன்ன
இளவலும்

ராமன் மையால் செய்த சிலை போல இருக்க, இலக்குவன் அதே அச்சில் தங்க நிறத்தில் இருந்தான் என்று கம்பர் சொன்னதாக பண்டிதரான முத்தையா சொல்லச்சொல்ல, ராமன் xerox என்றால், இலக்குவன் அவனது Colour xerox போல இருந்தான் என்பதாக  நினைத்துக் கொண்டேன். கி.ரா, சுஜாதா, பாக்கியம் ராமசாமி  முதலானோர் தாக்கத்தால் இப்படியோர் எண்ணம் ஓடுகிறதோ என்னவோ?

2.நவீன இலக்கியத்துக்கும் நகைச்சுவைக்கும் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?

ஆமாம் பெரிய இடைவெளிதான் என்று என்னால் தலையாட்ட முடியவில்லை. வாசிப்பிலும் கேள்வியிலும் நானறிந்து கொண்ட வரையில் அ. முத்துலிங்கம், ஷோபா சக்தி, இசை, போகன் சங்கர், இளஞ்சேரல், வாமு.கோமு, கண்மணி குணசேகரன், சுகா, என்று ஒரு கூட்டமே இருக்கிறதே? இந்த வரிசையில் பின்னிருந்து முன்னே போனீர்கள் என்றால் வட்டார வழக்கில் இந்த ஆட்கள் செய்திருக்கும் அட்டூழியங்கள் எத்தனை தெரியுமா?

3.கடந்த 25 ஆண்டுகளில் ஒரு சிலரைத்தவிர யாரும் நகைச்சுவையான படைப்புகளை உருவாக்க முனைவதில்லையே ஏன்?

அப்படி எழுதாதவர்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி. தவிர என்ன சுவையைத் தரவேண்டுமென்று  முடிவுசெய்ய வேண்டியது கருப்பொருளும், எழுதுபவரும்தானே? மேலும், காலம்கடந்து நிற்கிற நகைச்சுவை வடிவம் ஏதேனும் இருக்கிறதா எழுத்துருவில்? இணையத்தில், கட்டுரைகளில் கிச்சுக்கிச்சு, நகைச்சுவை, அங்கதம் இப்படி படிநிலைகள் கொண்ட எழுத்துகளை பார்க்கவே செய்கிறேன். ஆனால் முழுப்படைப்பாக இருக்கிறதா? என்கிற கேள்வி எனக்கும் உண்டு.எல்லா எழுத்துகளும் (எழுத்தாளர்களும் கூட) மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டே பேசவேண்டியதில்லை என்கிற கருத்திலும் உடன்பாடு உண்டு.அப்புறம் நகலிசைக் கலைஞன் கட்டுரைத்தொகுப்புதான் இந்தக் கேள்விகளை என்னிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது என்று புரிந்து கொள்கிறேன். அதற்குள் சர்க்கரையின் சரிவிகிதத்தில் கண்ணீரையும் ஊற்றி கறுநகையை உள்ளடக்கி இருப்பதால்தான் பேசப்படுகிறது என்றும் நம்புகிறேன்.


4.தமிழ்க்கலை மரபில் சினிமா தவிர்த்து மற்ற கலைகளில் நகைச்சுவை என்பது இல்லாதொரு காலமாக தற்போது இருப்பது ஏன்?

சினிமா மாவூடகம் என்பதால் அப்படித் தெரிகிறது. மேலும் அப்படியான கலை வடிவங்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஊடகங்களும் அவலங்களுக்குத்தானே பறக்கின்றன? கேமராக்கள் காத்துக் கொண்டிருப்பது ஒரு கேலிக்கூத்துக்குத்தானே? அரசியல்கலை நாளொரு நகைச்சுவையை கேலிச்சித்திரக் காரருக்கும், மீம்ஸ் உருவாக்குபவர்களுக்கும் தந்து கொண்டுதானே இருக்கிறது. சர்வாதிகாரி சரிந்தான் என்று நீங்கள் சிரித்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் பட்டத்து யானை காரியக் கோமாளிக்கு மாலையை சூட்டிவிடுகிறது. துன்பம் வரும் வேளையிலே ஹஹ்ஹஹ்ஹா என்பதுதான்  நமது தாரக மந்திரம். தப்பிக்கும் வழியும் அதுதான்.




No comments:

அவள் கடுங்கோபத்தோடு கேட்டாள்.

  ஏன் இப்படி இருக்கிறாய்?  எப்போது பார்த்தாலும்  முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு  குனிந்து மண்ணையே பார்த்துக் கொண்டு அல்லது  மரக்கிளையைப் பார்...