Thursday, 19 March 2020

வண்டிப்புகை

ஓய்வாய் மேசையில்
படுத்துக் கிடக்கும் பேனா
இடுங்கியிடுங்கி விரியும்
குட்டிக்கண்களுக்கு
காலத்திலுறைந்த
ரயில்வண்டியாய் தெரிகிறது.
இருதயத்துக்கு
அருகாமையிலிருக்கிறது
சட்டைப்பை.
விடாமல் அதைப்பற்றிக் கொள்கிறது
காற்றிலுறைந்த 
வண்டிப்புகை.

Tuesday, 17 March 2020

எப்படி?


பதில் தருவீர்கள் தானே குருவே ?

அதில் என்ன சந்தேகம்?

சந்தேகம்தான் கேள்வியே..
சிலையாவது அப்புறம்.
கல்லாக முடிகிறதா புத்தா?








Friday, 13 March 2020

தேய்வழக்கு


கைவசம்
உள்ளவற்றில்
மகோன்னதமான
ஒன்றைத்தேர்ந்து
உங்களுக்கு
பரிசளித்துவிடத்
தேம்புகிறேன்.

கந்தலும்
பழுப்புமாய்
இதுதான்
வந்து நிற்கிறது.

நமது கிழங்களின்
மாரில்,மடியில்,
விரல்களில்,
தசைமடிப்புகளில்
தேங்கியிருந்து
நாய்க்குட்டியின்
ஊமைக்கண்ணில்
வழிகிறதும்
அரதப்பழசுமான
அதே அன்பு


Tuesday, 3 March 2020

நெடுநாள் பாரம்

நல்ல  ரசிகனவன்
சாளரம்  மறையுதென்றே
மல்லிப்பந்தல்  கொடியறுத்தான்.
முறுவலின் திரைகளென்று
உதடுகளைக் கத்தரித்தான்.

மாராப்பில் இருநிலவு
இரண்டிலும் பெருங்குறைகள்
உச்சிக்குமிழ்களில்
இத்தனை ஒழுங்கெதற்கு

அழகு செய்யப் பழுத்த பென்சில்
விரலிடையே புகை பரப்ப
மூர்க்கனவன்அருங்கலைஞன்
எனக்குத்தான் கட்டுபடியாகவில்லை.

பின்மதியப் பொழுதில்
மடியிருந்த தலையை
மெல்ல இறக்கி வைத்து
காற்று கலைத்து விடாதிருக்க
அம்மியை அதன் மேல் வைத்தேன்.






அவள் கடுங்கோபத்தோடு கேட்டாள்.

  ஏன் இப்படி இருக்கிறாய்?  எப்போது பார்த்தாலும்  முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு  குனிந்து மண்ணையே பார்த்துக் கொண்டு அல்லது  மரக்கிளையைப் பார்...