ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெற்றிலை பாக்கும், எச்சில் துப்பும் பித்தளைக் கோளாம்பியுமாகத் தெரிவாள். அலுமினிய டப்பியில் சுண்ணாம்பு. சிவந்து வருகையில் புகையிலையில் ஒரு கிள்ளு. புங்கை மர நிழலில் கிழவியும் கிழவியின் நிழலில் கோழிக்குஞ்சுகளும் திரிந்து கொண்டிருந்தது பழையகதை. இப்போது கூடவே ஒரு ஆடும் சேர்ந்து கொண்டதே.. அது அந்தோணி. கிழவி படுகிற பாட்டை, பார்த்துப் பொறுக்காமல் பாதிரியார் இந்தக் குட்டியை வாங்கிக் கொடுத்தார். தின்று தீர்க்கிற தானங்களை விடவும் ’வெச்சுப்பொழைக்க’ உதவுகிற தானங்கள் மேலானவை. தெரஸாக்கிழவிக்கு இந்த ஒத்தாசை பெரிய பலம். உயிரோடு கூடவே உலவுகிற ஒரு ஆள். அந்தோணியின் கழுத்தில் தொங்கும் ஜெபமாலை போலவே நெல்லி மரத்தின் அடித்தண்டில் அந்தோணி அசை போடுவதற்கு குலை தொங்கும். பெட்டையின் கூடுதல் மேவுக்கு பெட்டிக்கடைகளில் அட்டைப் பெட்டி வைத்து அதில் சேகரமாகும் வாழைப்பழத்தோல்களை சுமந்து வருவாள். கிழவி வெற்றிலையை மெல்லும்போது பக்கத்திலேயே முன்னங்காலை நீட்டி மடக்கிப் படுத்தபடி எதையாவது அரைத்துக் கொண்டிருக்கும். தூரத்திலிருந்து பார்த்தால் இரண்டு கிழவிகள் வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருப்பதாக தெரியும். அந்தோணி ’அம்மே’ என்று குரல் கொடுத்தால் தண்டவாளத்துக்கு அந்தப்புறமிருந்து கிழவி ’வருகிறேன் மோளே’ என்பாள் மெல்லிய குரலில். அந்தோணி கறுப்பும் வெளுப்புமாயிருந்தது. ஒரு பக்கக் கண்ணை மூடிய கறுப்பை மீறி, கனிந்த வெயில் நிறத்தில் உண்டியல் கண்கள். வாடித் தொங்கும் இலைகளாக நரம்போடும் காதுகள். அந்தோணியை காலையில் அவிழ்த்து விட்டால் மாலையில் தானே வீடு வந்து சேர்ந்துவிடும். அதன் போக்கும் வரவும் தண்டவாளத்தின் மீது என்பதை நினைத்து கிழவி திகிலாவாள். ’வழியிலிருந்தால் இறங்கிவிடு மகளே’கிழவி தனக்குத்தானே முனகிக் கொள்வாள். அந்தோணி ரயில் எழுப்பும் ஊளைச் சத்ததிற்கு அனிச்சையாக இறங்கி விடும். சத்தமில்லாமல் கடக்கிற கூட்ஸ் வண்டிகளைப் பார்த்தால் கிழவியின் நெஞ்சு கிடுகிடுக்கும்.
இத்துணூண்டு இடம் கிடைத்தாலும் ஏதாவது ஒரு நாத்தையோ விதையையோ ஊன்றி வைத்துவிடுவதுதான் தெரஸாக் கிழவியின் வழக்கம். புறம்போக்கு இடத்தில் குடியிருப்பதும், எப்போது வேண்டுமானாலும் ரயில்வேக்காரன் காலி செய்யச்சொல்லி விடுவான் என்பதும் தெரியும். அப்படிச்சொல்லும்போது சனங்களோடு சனங்களாக நகர்ந்து போகவேண்டியதுதான். செடி வைப்பதையோ கொடியூன்றிக் கம்பு நட்டு வைப்பதையோ மாற்றிக்கொள்ளவேயில்லை. ரயிலோடும் தண்டவாள மேட்டிலிருந்து கீழே இறங்கும் பள்ளத்தில் கழிவு நீர் ஓடும் கால்வாய். அதையொட்டி ஓடாமல் நிற்கிற ரயில்பெட்டிகள் மாதிரி வரிசை வீடுகள். அதிலொன்று தெரஸாவினுடையது. அவளுக்கு மலைத்தொடருக்கும் சிற்றோடைக்கும் அடுத்து குடியிருப்பது போல ஒரு மனவிரிப்பு. மேட்டுக்கும் வீட்டுக்குமான இடைவெளியை அவரை, பாகல், பசலை என்று பச்சையைப் பரப்பி வைத்திருந்தாள். சாக்கடையின் ஈரத்துக்குச் செழித்த கொடிகள் அடர்த்தியாகப் படர்ந்திருக்க, வீட்டுப்பொடுசுகள் விளையாடியபடியே வாயில் அதக்கிக் கொள்ள அரைநெல்லியோ, பப்பாளியோ வாசலில் உதிர்ந்து கிடக்கும். மூன்று அறைகள் கொண்ட ஓட்டு வீடு. மூன்று மக்களுக்கும் ஒவ்வொரு அறை. பெரிய மகளுக்கு ஐந்து, மகன் பெற்றது இரண்டு, சின்னவளுடையது இரணடு. இப்படி சிட்டும் சில்லையுமான உருப்படிகள் மட்டுமே ஒன்பது. பேத்திமார் பெற்றது,மற்றது எல்லாம் சேர்த்தால் கிழவியின் மந்தையில் பதினெட்டு, இருபது உருப்படிகள். மகனின் அறைக்குள் கிழவியின் பெட்டி. சந்துக்குள் படுக்கை. மழை வந்தால் கிழவியில் காலடியில் அந்தோணி. சாக்குப்பைக்குள் அந்தோணியை நுழைத்து விட்டால் போர்த்த வேண்டியதில்லை. தலையை மட்டும் உயர்த்தி அசைபோட்டபடி இருக்கும். கிழவி எப்போதாவது உதிர்க்கும் ஒற்றைச் சொல்லுக்கு குரல் கொடுக்கும். கிழவிக்கும் ஆட்டுக்குமிடையில் சின்னவளின் மகன் வந்து சுருண்டுகொள்வான்.
கிழவிக்கு இப்போது சுருட்டு தேவைப்படுகிறது. அடிக்கிற காற்றைப் பார்த்தால் நிச்சயமாக மழை வரும். இதற்கு முன்பு மழை எப்போது வந்தது என்பதைவிட வீட்டுக்குள் எவ்வளவு வெள்ளம் வந்தது என்பதுதான் யோசனை. சுவற்றில் தண்ணீர் தேங்கியிருந்த கறை நீண்டிருந்தது. பழைய கறைகளைக் காட்டிலும் உயரம். நின்று பார்த்தால் வயிறு மட்டம். அந்த மழைக்கு அந்தோணி இருந்திருந்தால் கஷ்டம்தான். கடவுளே! ஏன் இப்படி ஒரு நினைப்பு வந்தது? நினைப்பின் மீதே இடி விழுந்தது போல மழை வந்தே விட்டது. கூரையில் தடதடவென்று சத்தம் தொடங்கி, பெருத்து தோணி இடுக்கில் தண்ணீர் ஒழுகியது. கிழவி வெளியே போய் ஆட்டை அவிழ்த்துக் கொண்டு வந்தாள். எவ்வளவு அறிவான ஜீவன்! அவ்வளவு இருட்டிலும் பையனை மிதிக்காமல் ஒதுங்கி நிற்கிறது. ’கொஞ்ச நேரத்தில் ஓய்ந்து விடும்’ என்று பார்த்தால் அதிகமாகிறதே? கிழவி தயங்கித் தயங்கி மகன் வீட்டின் படலைத்தட்டினாள். குழந்தை எழுந்து உட்கார்ந்து விட்டான். சொல்லி வைத்தாற் போல சிறுசுகள் ஒவ்வொன்றாய் அழத்துவங்க, பெண்களின் கூச்சலும் சேர்ந்து இழவு வீட்டு ஒப்பாரி போல கேட்டது.
நின்று பெய்கிற மழை. மண்ணை நனைத்து, சேறாக்கி, அலசி, அமிழ்த்தி, பள்ளங்களில் சேர்ந்து மெதுவாய்ப் பெருகி, கைநீட்டி, மற்ற பள்ளங்களோடு கோர்த்துக் கொண்டு பெரிதாக நகருகிற விளையாட்டு. நல்ல ஆசிர்வாதமான பெருந்துளிகள். இதைத் தாங்குகிற மாதிரி வலுவுள்ள வீடு இல்லாததுதான் குறை. மேட்டிலிருந்து இறங்குகிற வேகத்துக்கு சீக்கிரமாய் வெள்ளம் சேர்ந்து விட்டது. வீட்டுக்கு உள்ளே புகுந்த தண்ணீர் மரஅலமாரிக்குள் போவதும் வருவதுமாக இருக்கிறது. நாதாங்கியை சரிசெய்து வைக்கச்சொல்லி ஒருபாடு புலம்பியும் யாரும் காது கொடுக்கவில்லை. ஒழுகுமிடங்களில் வைத்த பாத்திரங்கள் மிதந்து வெளியேறுவதை பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை. குஞ்சுக் குளுவான்களை எல்லாம் குறுக்குச்சுவர்களின் உச்சியிலும், அலமாரிகளின் மேலும் ஏற்றி விட்டு பாத்திரங்களில் கோரிக்கோரி ஊற்றினாலும் தண்ணீர் குறையாது. அதற்காக சும்மா இருக்க முடியுமா? உடலில் நல்ல முறுக்கத்தோடிருந்த பேரன் வர்கீஸும் கிழவியின் மகன் ஜோசப்பும் தண்ணீரை வெளியேற்றுவதற்கான முயற்சியில் இருந்தார்கள்.பெரியவளின் மருமகன் ஒத்தாசையாக கூட நின்றான். ஒன்றும் நடக்காது. கிழவி ஆட்டை மாரோடு சேர்த்துக் கொண்டு அலமாரியோடு ஒண்டிக்கொண்டாள். தலைக்குமேல் பொட்டுப்பொட்டாய் தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கிறது. இடுப்பு உயரத்திற்கு ஏறிவிடும். மழைச்சத்தத்தினூடே பெருத்த அலறலோடு ஒரு ரயில் வண்டி கடந்து போனது. பற்கள் கிடுகிடுவென அடித்துக் கொள்ள, அந்தோணி ஃபிர்ர்ர் ஃபிர்ரென்று இரண்டுமுறை முகத்துக்கு நேராய் தும்மியது. செடி கொடிகள் என்னவாயிற்றோ? நினைக்கும்போதே அடிவயிறு உள்ளிழுத்து வலியெழும்புகிறது கிழவிக்கு.
அந்தக் காலத்திலேயே தெரஸாவுக்கு விவரம் போதாது என்பார்கள். கணவர் பவுலோஸும் அதையேதான் சொல்வார். தெரஸா யாரோடும் பெரிதாக பேசுவதில்லை. ஏதாவது கேட்டால் ஒன்றிரண்டு வார்த்தைகள்தான். கணவனுக்கு எது வேண்டுமென்று தெரியும். அவர் கேட்குமுன்பே கட்டங்காப்பியோ, மரவள்ளிக் கிழங்கோ, சுடுகஞ்சியோ தயாராக இருக்கும். எப்படித்தான் தெரிந்து கொள்வாளோ ஆச்சரியம்தான். ஆனாலும் அக்கம்பக்கத்து மனிதர்களிடம் பேச்சு வளர்க்காத ஒரு பொம்பளை இருப்பாளா? எப்போதும் செடிகளும், துணிகளும் மட்டுமே போதுமா ஒருத்திக்கு? பிள்ளைகளிடம் கூட பெரிதாக பேசாத ஒருத்தி! ஓராயிரம் தடவை கேட்டாலும் பதில் கிடைக்காது. கடைசியில் அவர் புரிந்து கொண்டார் தெரஸா ஒரு ’மிண்டாப்பிராணி’ தெரஸாவுக்கு ஆணும் பெண்ணுமாய் இரண்டைத்தவிர இப்போது வயிற்றில் ஒன்று. ஏழுமாதம். மிண்டாப்பிராணியையும் குட்டிகளையும் கூட்டிக் கொண்டு கேரளத்திலிருந்து கோயமுத்தூருக்கு வந்தார் பவுலோஸ். இரண்டொரு மாதங்கள் வேலைபார்த்துக் கொண்டே வயிற்றுவலிக்கு பெரியாஸ்பத்திரியில் மருத்துவம் பார்த்துவிட்டு ஊருக்குத்திரும்பி விடலாம் என்பது திட்டம். கடைச்சோறு பழுதான வயிற்றுக்கு ஆகாது. பிள்ளைகளை அணைத்துக் கொண்டு பிள்ளைத்தாய்ச்சி அழுவதைப் பார்க்க மனமில்லையோ என்னவோ இரண்டாவது தடவை ஆஸ்பத்திரிக்குள் போன மனிதன் வெளியே வந்த பிறகு தெரஸாவைப் பார்க்கவுமில்லை. பேசவுமில்லை. உலுக்கி உலுக்கிப்பார்த்து ஓய்ந்து போனாள் தெரஸா. கூடிவிட்ட சனங்கள் அங்கலாய்ப்பாய் விசாரிக்க அடிவயிறு சுருண்டு வலியெடுத்தது.
காலையில் அரசுப் பள்ளியில் தங்கிக்கொள்ள அனுமதிக்கிறார்கள் என்று ரேடியோவில் சொன்னார்களாம். மயிலாத்தாள் வந்து சொல்லிவிட்டுப்போனாள். விடிய விடிய பெய்து இன்னும் ஓயாத மழையில் முன்னறையின் கூரை ஒரு பக்கச்சுவரோடு சரிந்து விழுந்து விட்டது. போனால் போய்த் தொலைகிறது. பிள்ளைகள் தப்பித்ததே புண்ணியம். ஆரம்பப் பாட சாலையின் கதவைத் திறந்து விட்டிருந்தார்கள். துணி மூட்டைகளும். ஐந்தாறு பாத்திரங்களுமாக சனங்கள் கிடைத்த இடத்தில் ஒண்டிக்கொண்டார்கள். சின்னவளின் மகன் மற்ற யாரையும் உள்ளே விடாமல் தடுத்துக் கொண்டிருந்தான். அவனுடைய வகுப்பாம். யாரோ போய் வாட்சுமேனிடம் முறையிட, அவன் வந்து பெரிய மனுசத் தோரணையில் எதையோ துவங்க, கிழவி வகுப்பறையின் மூலைகளைக் காட்டினாள். அதற்குள் பெஞ்சுகளை ஓரங்கட்டிவைத்துவிட்டு நான்கைந்து குடும்பங்கள் பாயை விரித்து முடங்கியிருந்தன. எல்லோரையும் பார்த்து வெளியேறத் திரும்பியவனின் பார்வையில் அந்தோணி பட்டுவிட்டது. அதுவும் மூத்திரம் பெய்தவாறு. சுற்றிலும் பத்துப்பனிரெண்டு புழுக்கைகள். வெளியே கட்டச்சொல்லிவிட்டுப் போனான். தெரஸாக் கிழவிக்கு முகம் ஊதிக் கொண்டது. இப்படி கட்டன்ரைட்டாகச் சொல்லிவிட்டுப் போகிறானே? ஊற்றுகிற மழையில் சினையாக இருக்கிற மகளை எங்கே போய்க் கட்டுவேன். புலம்பியபடியே சுற்றி முற்றிப் பார்த்துவிட்டு கீழே மைதானத்தைத்தாண்டி அவனுடைய கூண்டுக்கு அருகிலிருந்த அசோக மரத்திலேயே கட்டிவிட்டு வந்தாள்.”அம்மே அம்மே” என்று சிணுங்கிக் கொண்டேயிருந்தது அந்தோணி. மரத்தின் அடியில் என்றாலும் ஈரத்தில்தான் நிற்க வேண்டும். மற்ற இடங்களுக்கு இதுதான் கொஞ்சம் பரவாயில்லையாக இருந்தது. ’கொஞ்சம் பொறுத்துக் கொள் மகளே நாளை வெயில் வந்துவிடும்’
டெம்போவில மஞ்சளாய் சோறு கொண்டு வந்தார்கள். ஆளாளுக்குத் தட்டை தூக்கிக் கொண்டு ஓடியதை கிழவி அங்கலாய்ப்பாக பார்த்தாள். அவள் வீட்டுக் குஞ்சுகளும்தான். எங்கே சின்னவளின் மகனைக் காணவில்லை? ஏதாவது தின்னக் கொடுத்தால் மற்றவர்களை அரட்டி, மிரட்டி தள்ளிவிட்டு முந்தி வருகிறவன் அவன்தான். காணோமே! போய்ப் பார்த்தால் குழந்தை சுருண்டிருந்தது. சின்னவள் கழுத்தில் புறங்கையை வைத்துக் காட்டி உடம்பு சுடுகிறது என்றாள். மகளை சோறு வாங்க அனுப்பி விட்டு குழந்தையின் அருகில் உட்கார்ந்தாள். தலையைக் கோதிவிடும்போது கண்ணீர் திரண்டு வந்தது. பையன் சூட்டுக்கு அனத்தத் துவங்கியிருந்தான். சோறு வாங்கிக் கொண்டு வந்த பிள்ளைகள் அப்படியே உட்கார்ந்து அள்ளிப் போட்டுக் கொண்டன. அந்தோணியின் குரல் தூரத்தில் கேட்கிறது. ”அம்மே அம்மே” மகள் ஒரு கையில் சோறும் மறு கையில் தைலப் புட்டியுமாக வந்தாள். கிழவி தைலத்தை வாங்கி பையன் முதுகு முழுவதும் சூடுபறக்கத்தேய்த்து விட்டு கைகளை முகர்ந்து கொண்டாள். ரெண்டாங்கிளாஸிலிருந்து பெருத்த கூச்சல் வந்தது. திபுதிபுவென ஒரு கூட்டம் இவர்கள் இருந்த வகுப்பறைக்குள் நுழைந்தது. அங்கே பாம்பு வந்து விட்டது என்றார்கள். கிழவி பேரனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
இரவு முழுவதும் மழை விடாது பெய்து கொண்டிருந்தது. பத்து மணிக்கு மேலாகியும் குழந்தைகள் பள்ளி வராந்தாவில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ரயில்பாதைப் பள்ளத்தில் மின்சாரம் கிடையாது. இருட்டும் வரை விளையாடிக் கொண்டிருந்துவிட்டு ஆறேழு மணியானால் அடங்கிவிடும் பிள்ளைகள், இவ்வளவு வெளிச்சத்தையும் விஸ்தாரமான இடத்தையும் பார்த்ததும் உறசாகமாக விளையாடுகின்றன. பள்ளத்தில் கழிவறைகளும் கிடையாது. கடைக்கோடி முள்ளுக்காட்டின் மறைவில் போகவேண்டியதுதான். ரயில் வண்டிகள் கடக்கும்போதெல்லாம் பெண்கள் எழுந்து நிற்க வேண்டியிருக்கும். ஆண்களுக்கு என்ன கவலை? ’மயிரே போச்சுடா மாரப்பா’ தான். இங்கே அத்தனை கக்கூஸுகளைக் கட்டி விட்டிருக்கிறார்கள். தொட்டி நிறைய தண்ணீர்! வகுப்பறைகளுக்குள்ளே செங்கற்களைக் கூட்டி அடுப்பு மூட்டி கஞ்சி காய்ச்சிக் கொள்ளவும் முடிகிறது. ஏதோவொரு நிம்மதியில் வகுப்பறைகளின் வாசல்களில் பெண்களும் ஆண்களுமாய் குத்தவைத்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அங்கங்கே தாயக்கட்டை உருளுகிறது. சாக்பீஸ் துண்டுகளில் வரைந்த ஆடு புலியாட்டம், பரமபதம் எல்லாம் உண்டு. பாக்கெட் ரேடியோவெல்லாம் வைத்திருக்கிறவன் காசு புரளுகிறவனாயிருக்கும். ”அம்மே” அந்தோணி கத்திக் கொண்டே இருக்கிறது. நனைந்தபடியே கஞ்சியை கொண்டு போய் வைத்துவிட்டு வந்த கிழவி மைதானத்து ஓரத்திலிருந்து எடுத்து வந்திருந்த உருளைக்கல்லால் வெறும்பாக்கை தரையில் வைத்துப் பொடித்து அள்ளி வாயில் போட்டுக் கொண்டாள்.
மறு நாளும் பையனுக்கு உடம்பு சுட்டது. சட்டையை அவிழ்த்துப் பார்த்தால் முதுகெல்லாம் பொரிப்பொரியாக சிவந்து எழும்பியிருந்தது. இந்த மழையில் எங்கே கூட்டிப் போவது. ’இது அம்மை மாதிரித் தெரிகிறதே தேவமாதாவே என்ன செய்வேன்?’ மகள் அழுவதைப் பார்க்க முடியவில்லை. கிழவி மெல்ல எழுந்து கம்பி வழியே பார்த்தாள். இப்படி இரண்டு நாட்களாக தொடர்ந்து அந்தோணிக்குப் பக்கத்தில் கூட போக முடியாமல் இருப்பதை நினைத்து பெருமூச்சு விட்டாள். வாட்சுமேன் அந்தோணியை மரத்திலிருந்து அவிழ்த்து தன்னுடைய கூண்டருகே கட்டிப்போட்டிருந்தார். பக்கத்தில் ஒரு அலுமினியத்தட்டு. நல்லாயிருக்கட்டும். பையன் அனத்திக்கொண்டே இருக்கிறான். இடையிடையே எச்சிலைக்கூட்டித் துப்புகிறான். வாய்க்கசந்து வரும் போலிருக்கிறது. கிழித்து வைத்திருந்த சேலைத்துண்டில் தண்ணீரை நனைத்து நெற்றியில் போட்டால் இரண்டே நிமிடங்களில் காய்ந்து விடுகிறது. தைலப்புட்டி தீர்ந்து விட்டது. காலையில் இரண்டு இட்லித்துண்டுகளை சர்க்கரைத் தொட்டு விழுங்க வைப்பதற்குள் வாந்தி. பொரிப்பொரியாக இருந்ததெல்லாம் தீக்குச்சித்தலைகளாக நீண்டு வெளியே வந்திருந்தது. அம்மையேதான். ரங்கநாயகி வந்து பார்த்துவிட்டு வேப்பிலையை அரைத்து கொடுக்கச்சொன்னாள். ரங்கநாயகிக்கு கொஞ்சம் கைவைத்தியம் தெரியும். எதையோ கொடுத்தனுப்புகிறேன் என்று சின்னவளை கூடவே கூட்டிகொண்டு போனாள். மழையில் இறங்கிப் போனார்கள். கிழவிக்கு பயத்தில் பேதியாகிவிடுவது போல அடிவயிறு சுருண்டு வலித்தது. துணுக்கு மெழுகு திரியை சுவற்றின் ஓரம் ஏற்றி வைத்து வாய்விட்டுப் புலம்ப ஆரம்பித்துவிட்டாள்.
”என்டெ கர்த்தாவே………… தேவ மாதாவே………………… ரெட்சிக்கணமே……………. என்டெ மக்களெ ரெட்சிக்கணமே……… ஈசோயே……. நின்டெடத்து…… ஞான் சாம்பத்திகம் ச்சோதிச்சில்லா……… ருஜியுள்ள ஆகாரம் ச்சோதிச்சில்லா…… எங்ஙனெயெங்கிலும்……. ஜீவனோடிருந்நால்… மதியானே….. கர்த்தாவே…பாவப்பட்ட பிஞ்ஞுங்களானே….. ச்செறிய குஞ்ஞுகளானே…..தேவ மாதாவே……..என்டெ மக்களெ… ரெட்சிக்கணமே ……புலம்பித் தீர்த்தாள். ராத்திரி முழுவதும் சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள். திரும்பத்திரும்ப திரும்பத்திரும்ப சலிக்காது சொல்லிக் கொண்டே இருந்தாள். அவளது வலக்கையில் ஜெபமாலை மணிகள் எறும்புகள் ஊர்வது போல சிலுவையை இழுத்துக் கொண்டு ஊர்ந்து புறங்கையில் ஏறி இறங்கியது.
அதிசயம்தான்! காலையில் காய்ச்சல் விட்டிருந்தது. பையன் எழுந்து தைலப்புட்டியை தரையில் சுழற்றி சுழற்றி விளையாடிக் கொண்டிருந்தான். இனி பயமில்லை. இளநீரும் பனங்கற்கண்டுமாக கொடுத்து உடம்புச்சூட்டை இறக்கிவிட்டு அம்மைக்குத் வேப்பிலைத்தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம். மழை ஓய்ந்திருந்தது. கருக்கல் இன்னும் முழுதாய் வெளுத்திருக்கவில்லை. பையனுக்கு பாலை ஆற்றிக் கொடுத்த சின்ன மகள் இன்னொரு தம்ளரைத் தூக்கிக் கொண்டு படுத்திருந்த கிழவியை நோக்கி நகர்ந்தாள். அசைவில்லாது இருந்தவளை உலுக்கினாள். திடுக்கிடலாக எழுந்த கிழவிக்கு தொண்டை காய்ந்து போய் நெஞ்சுக்குள் ஏதோ நெருடலாய் உருள்கிறது. சில்லிட்டிருந்த கைகளில் தம்ளரை ஏந்திக்கொண்டு உலர்ந்த உதடுகளிடம் கொண்டு செல்லுகையில் வாட்சுமேன் ஓட்டமும் நடையுமாக வந்தார்.
”தெர்ஸாம்மா அந்தோணி போயிருச்சு”
கிழவி விக்கித்துப்போனாள். அடிவயிற்றிலிருந்து சுருண்ட வலி துக்கமாக பீறிட்டுக் கிளம்ப பள்ளிக்கட்டிடம் அதிர குரலெழுப்பினாள்.
“ஈ…………மோளே……அந்தோணீ……… ஈ…………………”
வாட்சுமேன் கூண்டருகில் காகங்கள் கரைந்தபடி இருந்தன. திறந்த கண்களில் ஈக்கள் மொய்க்க உப்பிப்பெருத்த வயிறோடு சரிந்து கிடந்தது அந்தோணி. வாட்சுமேன் அவரது குடையை அந்தோணிக்கு அருகில் விரித்து வைத்திருந்தார். கிழவியின் வயிறு தீயாய் பற்றிக் கொண்டு எரிய எதையெதையோ நினைத்துக் கொண்டு அழுதாள். எவ்வளவு சுயநலம் எனக்கு? பேரனுக்கு உடம்பு சரியில்லாமல் போனதும் என் ரத்தம் மட்டும் முக்கியமாக பட்டுவிட்டதா? அந்தோணியைப் பற்றிய நினைவே இல்லாமல் போனதா? கடவுளே! என்னுடைய பிரார்த்தனையில் அந்தோணியை சேர்க்கவில்லையோ?
”அய்யோ… மோளே….தெய்வம் சதிச்சல்லோ…மோளே… நீ என்டெ …மோளில்லியோ….. அந்தோணீ……..”
மனதுக்குள் ’மகளே தண்டவாளத்திலிருந்து இறங்கிவிடு’என்று நினைத்துக் கொண்டாலே இறங்கி விடுகிற அந்தோணிக்கு அம்மாவை விட்டுவிட்டுப் போகிறோமே என்கிற நினைப்பே வரவில்லையா?
அல்லது அம்மாவின் வேதனையைத் தீர்த்துவைக்க, தானே பலியாகி விட்டதா?
“ நீ.. வெச்ச கஞ்சியத்தான் குடிச்சது.. என்னன்னே தெரியலையே பூச்சி கீச்சி தொட்டிருக்குமோ?”
கவிழ்ந்த தலையை நிமிர்த்தாமல் ஆட்டையே வெறித்துக்கொண்டு கேட்டார் வாட்சுமேன்.
சின்னவள் வந்து கிழவியைக் கட்டிக் கொண்டு ஒப்பாரி வைத்தாள்.
வாட்சுமேன் கொஞ்சப் பணத்தை கிழவியின் மகன் கையில் வைத்து திணித்தபடி ”ஆனது ஆயிப்போச்சு… கையில வெச்சுக்க… போயி….குதிரை வண்டி எதையாவது கொண்டுவந்து எடுக்கற வழியப் பாரு ஜோசை”என்றார்.
அந்தோணியை உலுக்கி உலுக்கிப் பார்த்தாள் கிழவி. உப்பிய வயிற்றை தொட்டுத்தொட்டு அலறினாள்.
”அய்யோ குஞ்ஞுகளே…. என்டெ குஞ்ஞுகளே”
கிழவியின் மகன் சோர்வாய் நடந்து வெளியேறிப் போனான். அழுதுகொண்டிருந்த கிழவியின் சின்னமகளை தொட்டு ”அம்மாவ கூட்டிக்கிட்டு போம்மா.. ஒங்கண்ணன் வந்தா மேக்கொண்டு ஆற காரியத்த நாங்க பாத்துக்கறோம். அம்மாவ கூட்டிகிட்டு போ…”
கிழவியை மகள் வற்புறுத்தலாக கூட்டிக் கொண்டு போனாள். அவர்கள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த வாட்சுமேன் கூண்டுக்குள்ளிருந்த பழைய செய்திதாள்களை எடுத்துக் கொண்டுவந்தார். கூண்டுக்கு பின்பக்கமாக போய் கீழே சிதறிக்கிடந்த மஞ்சள் பருக்கைகளை மண்ணோடு சேர்த்து அள்ளி அலுமினியத் தட்டில் கிடந்த சோற்றோடு சேர்த்து கொட்டி, தாள்களால் மூடி, மொத்தத்தையும் கொண்டு போய் சாக்கடையில் கொட்டிவிட்டு, தட்டை குழாயில் சுத்தமாய்க் கழுவி கொண்டுவந்து கூண்டுக்குள் கவிழ்த்து வைத்தார். தொங்கிக் கொண்டிருந்த சட்டைப் பையிலிருந்து பீடியைத் துழாவி எடுத்து பற்ற வைத்துக் கொண்டார். ஆழமான மூன்றாவது இழுப்புக்குப் பிறகு அங்கலாய்ப்பாக ஆட்டை பார்த்து ஒரு முறை தலையிலடித்துக் கொண்டார்.
”நாய்க்கும் பூனைக்கும் வெக்கறாப்புலதான சோறு வெச்சேன்…. எனக்கு வெவரந்தெரியலயே? ”
வானம் கருக்கத் துவங்கியது. வாயிற்கதவைத் திறந்து விட்டு குதிரை வண்டிக்குக் காத்திருந்தார். மறுபடியும் மழை பிடித்துக் கொண்டது. அவரது காக்கிச்சட்டை மெல்லமெல்ல நனைந்து ஈரமேறி கனத்தது.
No comments:
Post a Comment