ஒட்டகம்
என் தையல் இயந்திரம்
நானும்
என் ஒட்டகமும்
இந்தப் பாலையை மூடும்
கூடாரத்தை நெய்து வருகிறோம்
எங்கள் இரவுக்கு
ஆயிரத்து நானூறு
ஒட்டகங்களின்
நீளம்
பாலைக்கும்
பாலைக்கும் இடையில்
நிறுத்தங்கள் கிடையாது
பனிக்காலத்தில்
சிசுக்களை பொதிந்து வைக்கும்
துவாலையை
தைத்துக் கொண்டிருந்தேன்
அக்காலங்களில்
எனக்கான துவாலை ஒன்றை
ஆயத்தம் செய்ய
நாளாந்தமும் வாஞ்சித்திருந்தேன்
நனைந்த
பாறைத்துகளை
உடைந்த சீசாவுக்குள் வைத்திருக்கிறேன்
தற்காலம் அதில் படிந்து வருகிற
பாசி வளர்ந்து
செழித்துப் பூஞ்சோலையானதும் சீசாவினுள் இறங்கி
சுகமாகப் படுத்து
உறங்குவேன்.
(திருப்பூர் தையற்கலைஞர்களுக்கு)
No comments:
Post a Comment