Thursday, 29 August 2024

மடி

 

பொய்யாக தலையை வைத்துப் படுக்கிறாள்

குழந்தையின் மடியில் 

மெய்யாகவே அவளைத் தாலாட்டுகிறது குழந்தை

சின்னஞ்சிறு மடியில் 

அன்னையின் தலை நிரம்பி

தரையில் வழிகிறது கூந்தல்

அதை வாரி வாரி 

மடியிலிட்டுக்கொள்கிறது குழந்தை 

பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு

இடப்புறம் கிடந்த மீதவுடலும்

மயிரெனச் சுருண்டு மடியேறுகிறது.


#ஜான்சுந்தர்

Tuesday, 27 August 2024

வாட்ஸப்பில் இரு பறவைகள்

 


🐦🐦


உங்கள் நண்பர்தான்.

உங்களது ராஜபோதைக்கு

செவிகளைக் கழட்டிக் கொடுப்பவர்தான்.

நீங்கள் காதலிக்கும் 

இரண்டே ஆண்களில் ஒருவர்தான்.

இப்போது 

அறைக்கதவின் முன் நிற்கிறார். 

உங்களுக்கும் தெரியும்.

நிற்கட்டும் என்கிறீர்கள்.

காத்திருப்பவரை 

குரூரமாய் பார்த்துவிட்டு 

பாசாங்கு செய்கிறீர்கள்.


உங்கள் காதலிதான்.

அவளது சிறு கேவலுக்குத்தான்

நான்கு முறை 

மணிக்கட்டைக் கீறி 

சமன் செய்தீர்கள்.

அவள் திசையிலிருந்து 

ஒரு சொல் விடியக் காத்திருந்தீர்கள்.

இரண்டு நாட்களாக 

முன்னறையிலேயே நிற்கிறாள்.


உறைந்து நிற்கும் 

அவ்விரு பறவைகளையும்

பார்க்க முடியவில்லை.

நீங்கள் மனது வைத்தால்

பொன்னீலச்சிறகுகள் விரியும்.


#ஜான்சுந்தர்

செங்கொன்றைகள் மிதந்துவருகின்றன

 

பட்டாம்பூச்சிகள் வந்து போவதை

பீற்றிக்கொள்கிற வீடு

விருந்தாள் வராத நாட்களில் 

தன் திறப்புகளை மூடிக்கொள்கிறது 

பட்டாம்பூச்சிகள் வந்தால் 

காத்தாடியைப் போட முடியாது 

கதவைத் தட்டித்தட்டி ஓயாத 

பட்டாம்பூச்சிகள் 

தினந்தோறும் 

ஒரு விருந்தாளியைத் தூக்கிக் கொண்டு 

உள்ளே வருகின்றன.

உந்திச்சுழி

 பிள்ளைகளைக்குறித்து

அழும்போதும்

பிள்ளைகளைச்சொல்லி

சிரிக்கும்போதும்

அவளோடு அவளது

உந்திச்சுழியோ

தொந்திச்சதையோ

குலுங்கியடங்குகிறது

அம்மா 

அடிவயிற்றிலிருந்து 

அரற்றுகிறாள்  

அடிவயிற்றிலிருந்தே 

மணக்கிறாள்

இப்போதும் 

அடிவயிற்று முந்திக்குள்

துயரப் பொதிகளை

மறைத்து வைத்திருக்கிறாள்.

கணங்களின் அதிபதி

 

அள்ளித்தந்த விநாயகருக்கு

தேங்காய் உடைத்தால் 

எல்லாம் சரியாகிவிடும் என்றார்கள். 


சிதறுகாய் பட்டுவிடப் போகிறதென்று 

என்னுடைய தேங்காய்க்கும் 

ஏதோ ஒரு குழந்தைக்கும் 

இடையில் வந்து பதறி நின்றாள் 

எவளோ ஒருத்தி


பராக்கு பார்த்துக் கொண்டிருந்த பிள்ளையார்

எனக்கென்று ஒதுக்கி வைத்த 

அருட்கணத்தை 

அவள் திசைக்குத் திருப்பி வைத்தார். 

                                              

அவள் கடுங்கோபத்தோடு கேட்டாள்.

  ஏன் இப்படி இருக்கிறாய்?  எப்போது பார்த்தாலும்  முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு  குனிந்து மண்ணையே பார்த்துக் கொண்டு அல்லது  மரக்கிளையைப் பார்...