🐦🐦
உங்கள் நண்பர்தான்.
உங்களது ராஜபோதைக்கு
செவிகளைக் கழட்டிக் கொடுப்பவர்தான்.
நீங்கள் காதலிக்கும்
இரண்டே ஆண்களில் ஒருவர்தான்.
இப்போது
அறைக்கதவின் முன் நிற்கிறார்.
உங்களுக்கும் தெரியும்.
நிற்கட்டும் என்கிறீர்கள்.
காத்திருப்பவரை
குரூரமாய் பார்த்துவிட்டு
பாசாங்கு செய்கிறீர்கள்.
உங்கள் காதலிதான்.
அவளது சிறு கேவலுக்குத்தான்
நான்கு முறை
மணிக்கட்டைக் கீறி
சமன் செய்தீர்கள்.
அவள் திசையிலிருந்து
ஒரு சொல் விடியக் காத்திருந்தீர்கள்.
இரண்டு நாட்களாக
முன்னறையிலேயே நிற்கிறாள்.
உறைந்து நிற்கும்
அவ்விரு பறவைகளையும்
பார்க்க முடியவில்லை.
நீங்கள் மனது வைத்தால்
பொன்னீலச்சிறகுகள் விரியும்.
#ஜான்சுந்தர்
No comments:
Post a Comment