Saturday, 14 September 2024

ரமணர்


என் அறையில் 

நான் மட்டும் வசித்து வந்தேன்

நான் என்னோடு  

என்னைக் குறித்துப் பேசி வந்தேன்

ரமணரின் படம் ஒன்று

எனக்குப் பரிசாகக் கிடைத்தது 

என் அறையில்

நானும் ரமணரும் வாழ்ந்து வந்தோம்

நான் ரமணருடன்

என்னைக் குறித்துப் பேசி வந்தேன்

சில நாட்களுக்குப்பிறகு

என் அறையிலிருந்து 

நான் வெளியேற வேண்டும் 

என்று ரமணர் விரும்பினார்

அது என் அறை என்பதால் 

நான் வெளியேற மறுத்தேன்

எனவே 

ரமணர் வெளியேறினார்

என் அறையில் 

ரமணரின் படங்களுடன் 

நான் மட்டும் வாழ்ந்து வருகிறேன்.

#ஜான்சுந்தர்

Wednesday, 4 September 2024

விடுதிமனிதன்

விடுதியிலிருந்து 

விடுதிக்கு மாறி

விடுதிகளிலேயே 

வாழ்ந்து வந்த

விடுதி மனிதனின் பயணம்

உள்ளூர் விடுதியில் 

துவங்கும் 

வழியூர் விடுதியில் 

தூங்கும் 

விடுதிக்கும் விடுதிக்கும் 

இடையில் கிடந்துருளும் 

அவனது நாட்கள் 

இப்படியே

சன்னலில் இருண்டு 

கதவுகளில் விடிய

விடுதி மனிதன் 

விடுதிகள் அலுத்துப்போய்

வீடு தேடிப்போனான்.

வீட்டை வைத்திருந்தோர்

சேர்ந்து வசிக்க 

பெண் வேண்டும் என்றார்கள்.

பெண்ணை வளர்த்து வந்தோர் 

சேர்ந்து வசிக்க 

வீடு வேண்டும் என்றார்கள்.

விடுதியறைகளே 

வாழ்வதற்கும் 

தேவைப்பட்டால் 

சாவதற்கும் கூட

அனுமதிக்கின்றன 

என்கிறான் விடுதி மனிதன்.

மேலுமவன் 

விடுதியில் பிறந்தவன் 

விடுதியில் தானே 

இறக்க வேண்டும் 

என்று வினவுகிறான்

புகைப்படங்களில் 

விடுதிப் பணியாளர்கள் 

அவனது உறவின் முறையினராக

முறுவலிக்கின்றனர்.


#ஜான்சுந்தர்

Tuesday, 3 September 2024

மகள்

தன்னைத்தானே

தட்டிக் கொண்டு உறங்கும் 

சிறுமியைப் பார்த்து 

உச்சு கொட்டுகிறார்கள்.

தலையில் இடி விழுந்த மறுநாளே 

மயிரையள்ளிக் கொண்டையிட்டு

செங்கல் சுமக்கப் போனவளுக்கு 

இது வியப்பில்லை

பெற்றதும் உடன்பிறந்த 

மற்றதும் உதவுமென்று

தலையைச் சொறிந்து நிற்காமல் 

தன்னைத்தானே 

சவுக்கால் விளாசிக் கொண்டு

தட்டாமாலை சுற்றுகிற 

மண்ணுருண்டையின் மகளல்லவா


#ஜான்சுந்தர்

அவள் கடுங்கோபத்தோடு கேட்டாள்.

  ஏன் இப்படி இருக்கிறாய்?  எப்போது பார்த்தாலும்  முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு  குனிந்து மண்ணையே பார்த்துக் கொண்டு அல்லது  மரக்கிளையைப் பார்...