Friday, 7 August 2026

கனவில் வந்த இரவு



🍀

படுக்கையை விட்டு எழுந்தவுடன் 
இரவில் வந்த கனவை 
தந்தையிடம் விவரிக்கிறாள் மகள் மதிப்பெண் சான்றிதழை வாங்க 
நீயும் நானும் பள்ளிக்குப் போனோமா உன்னை மரத்தடியில் 
காத்திருக்கச் சொல்லிவிட்டு 
நான் மட்டும் உள்ளே போனேனா மதிப்பெண்களைப் பார்த்துவிட்டு 
வெளியே போகக் கூடாது என்று 
ஆசிரியர் சொன்னாரா 
அப்போது பழுப்பில் ஒன்றும் 
கருப்பு வெள்ளையில் ஒன்றுமாக 
இரண்டு நாய்க் குட்டிகள் வந்தனவா அதிலொன்று பூனையாக மாறிவிட்டது. அந்தப் பூனை தண்ணீர்த் தொட்டிக்குள் விழுந்துவிட்டதா 
காப்பாற்றி எடுத்துவந்து துவட்டினால் 
அது அப்பாவாக மாறிவிட்டது. 
மரத்தடியில் காத்திருக்கும் 
தன் கதி என்னவென்று 
குழம்பிய தந்தையிடத்தில் 
நான்தான் அதற்குள் விழித்துக்கொண்டேனே 
நீ கவலைப்படாமல் 
தேநீரை அருந்து என்கிறாள்.
தகப்பனின் 
தேநீர்க் குவளைக்குள்ளிருந்து 
தலை துவட்டியபடியே 
வெளியே வந்த ஆசிரியர் 
பூனைக்கு அடியில் 
ஒரு மரம் காத்திருக்கிறதே 
அது உங்களுடையதா என்று கேட்டார். அப்போது பூனையைப் போல அசையாமலிருக்கத்தான் 
நினைத்தார் தகப்பன் 
ஆனால் அதற்குள் 
மரத்தின் வால் 
அசைந்ததைக் கவனித்துவிட்டார் ஆசிரியர். அவரிடமிருந்து தப்புவதற்கு 
மகளைத் தேடின நாய்க்குட்டிகள் 
அவளோ நல்ல உறக்கத்திலிருக்கிறாள். இனிமேற்கொண்டு 
இரவில் கனவு வராமலிருக்க 
கனவில் ஒரு இரவு வருமல்லவா 
அதற்குள் நுழைந்து 
உறங்கிவிட வேண்டும் என்று 
முடிவு செய்தது மதிப்பெண் சான்றிதழ்.

🍀



அரும்பு இதழ்

துடிமேளக்காரன்
தொகுப்பு 



 

No comments:

குறுமக்கள் கொட்டாரம் - நூல் குறித்து ஒடியன் லட்சுமணன்

  ஒரு குழந்தை சக வகுப்பு குழந்தைகள் எது கேட்டாலும் வெங்காயம் என்கிறது. மாணவர் மட்டுமில்லை டீச்சர்களிடத்திலும் அப்படித்தான். கண்டித்துப் ...