Thursday, 21 May 2015

அலைமுழங்கிய கடல் : இசை முரசு ஹனீஃபா அஞ்சலிக் கட்டுரை

    






விடியற்காலை ஆறரை மணிக்கெல்லாம் ஹாஜியார் எங்கள் வீட்டிற்கு வந்துவிடுவீர்கள். குழந்தைகளைத் தூங்கவைப்பதொரு கலையென்றால் தூக்கத்திலிருந்து வலிக்காமல் பிரித்து எழவைப்பது வேறொரு வகை. விழி மூடிக்கிடக்கும் எங்கள் செவியுள்ளிறங்கி,

திருமறையின் அருள்மொழியில் விளைந்திருப்பது என்ன?
இறைத்தூதர் நபி பொன்மொழியில் குவிந்திருப்பது என்ன?
அறிவில் உருவாகி அன்பில் நிறைவதென்ன?

    என்றெல்லாம் நீங்கள் கேட்கக்கேட்க ராணியம்மாவோடு சேர்ந்து பதில் சொல்லும் முனைப்பில் நீரிருக்கும் தாமரை போல் நெஞ்சம் மலர எழுவோம். படுக்கையிலிருந்து நகைமுகமாய் எழுந்துகொள்ள உங்களைப் போன்றவர்களின் வரவுதான் மிகச்சரியான வழியாக இருக்க முடியுமென்று பக்கத்துவீட்டு லத்தீப்பின் உம்மாவும்  கோயமுத்தூர் வானொலி நிலையக்காரர்களும் சேர்ந்து முடிவு செய்தது  எங்கள் வரமானது. நீங்கள் விடுப்பு எடுத்துக் கொண்ட ஒரு சில நாட்களில் வேறு வேறு பாவாக்கள் பாமாலையில் வந்தாலும்  உண்மையில் எங்கள் பள்ளிப்பருவத்து விடியல்களை சாம்பிராணிப் புகைமுழக்கி  ரட்சித்தவர்  நீங்களல்லவா ஷாஹென்ஷா?
                      
                                          கோலிக்குண்டு விளையாடும்போதோ, பம்பரம் சுற்றி தில்லான் எடுத்து விட்டாலோ, தோற்றவன் உம்மென்றிருக்க லத்தீப்பு பெண்குரலுக்கு மாறி மவ்வுனம் ம்ஹீஹீஹீம் மவ்வுனம் என்பான். மௌனத்தை மவ்வுனம் என்று அவன் சொல்வதைப் பார்த்தால் அழகிதழகென்று சொல்லத்தோன்றும். அதைவிட அழகாய் சுரேஷ் மேண்டலின் மியூசிக்கை டிடி டிடிடிடி டிடிடிங் என்று வாயில் வாசிக்க அலீமக்கா வீட்டு வாசலில் பச்சையும் மஞ்சளும் ரத்தச்சிவப்புமாய் பழுத்த இலைகளைக் கொட்டும் பாதாணிமரத்திலிருந்து டெய்லரப்பா வீட்டு சீனிப்புளியாங்காய் மரத்தணுப்பு வரைக்கும் இளங்கோவின்  பம்பரம் திருமறையின் அருள்மொழியோடு பயணமாகும்.லத்தீப்பின் வாப்பா குப்பாயத்தை அவிழ்த்து வைத்துவிட்டு வலைப்பனியனும் பர்ஸ் வைத்த பெல்ட்டுமாக டெல்லி செட்டைக் குடைந்து சால்டெரிங்கெல்லாம் வைத்து ஒரே பாட்டை திரும்பத் திரும்ப ஓட்டினால் அன்று முழுக்க அந்தப் பாட்டையும் இசைத்துணுக்குகளையும் விளையாட்டினூடே செர்பியை சவைப்பது மாதிரி சவைப்பதுதான் லத்தீப்பின் வேலை.எதைப் பாடினாலும் சுரேஷ் வாயிலிருந்து மீஜிக் வரும். காற்றைக் கொப்பளித்து முன்வரிசைப்பற்களோடு மோதவிட்டால் மொராக்கோஸ்,கப்பாஸ். உதடுகளையும் நாக்கையும் மடித்து விரித்தால் டேப் ரிதம், மூக்குவழியாக முனகினால் மோர்சிங் என்றவன் விளையாட்டாய் செய்து காட்டியதையெல்லாம் இப்போது தொலைக்காட்சியில் வெளிநாட்டு ராப் இசைக் கலைஞர்கள் கார்ட்லெஸ் மைக்கில் செய்ய வீடே ஆச்சரியப் படுகிறது.  நான் மெல்ல வெளியேறி சுரேஷுக்கு அந்த ஞானத்தை வழங்கிய மூலப்பொருள் என்ன?வென்று யோசித்தால் வண்டி நாகூரில் நிற்கிறது.பின்புலத்தில் பச்சைக்கொடி பறக்க நீங்கள் கையசைக்கிறீர்கள்.

மாதாக்கட்சிக்காரன் ஒருத்தன் பால்யத்தின் பேதமையில் ரொம்ப நாளாக ஓடிவருகிறான் உதயசூரிய’’னை  ’’’’அல்லாக்கட்சி பாட்டு என்றே நினைத்திருந்தான். லத்தீப்பின் வாப்பாதான் அவனை அப்படி நம்பச்செய்தார். அப்படி நம்பச்செய்தது அவரா அல்லது பாட்டுக்கு இஸ்லாமிய நிறஞ்சேர்க்கும் மேண்டலின், ஹார்மோனியம், புல்புல் தாரா, டெனர் பேஞ்ஜோ, ஷெனாய், டேப், டோலி, தப்லா முதலான வாத்தியங்ளுள் ங்கள் குரல்வளையும் ஒன்று என அவன் நம்பக் காரணமாயிருந்த தாங்களா ஜனாப் ?  கம்பீரந்தொனிகளைப் பற்றிப் பேச்செழுந்தால் ஆசானே உங்கள்நாற்காலியைத் துடைத்து வைக்காமல் நகர்ந்துவிட முடிந்திருக்கிறதாஉச்சஸ்தாயியைத் தொடப்போகும் வழியில் சன்னமாகிக் கொண்டே போய் பெண்மையைத் தொட்டுக்கரைந்துவிடும் குரல்களுக்கு  நடுவில் அடிமரம் துவங்கி கொடிபறக்கிற வரையில் வண்ணங்குறையா தூணல்லவா உம்முடையஅசலான  ஆண்குரல்?.

//அருள்மழை பொழிவாய் ரஹ்மானே
ஆலமெல்லாம் படைத்தோனே
அண்ணல் நபியைத் தந்தோனே//

1925-ல் கிறிஸ்துமஸ் தினத்தன்று மரியம் பீவிக்கு மகனாக பிறந்திருக்கிறீர்கள் என்கிற சேதி என்னை பின்னோட்டத்தில் இழுத்துச்செல்லும் வேறெங்கோ. கிறிஸ்துமஸ் கேரல்ஸ் போகும்போது கூடவே வருகிற சௌகத்தும், ஷகீலும், கஃபூரும் கூப்பிட்டார்களென்று கோட்டைமேட்டுக்குசஹரெழுப்பப் போனேன். உங்கள் பாடல்கள் ஒன்றிரண்டு தெரியுமென்கிற தைரியந்தான். வருடந்தோறும் ரம்ஜான் பக்ரீத் பண்டிகைகளில் ப்ரியத்தை அரைத்தூற்றிய தால்சாவில் என்னை முழுக வைத்துக்கொண்டிருக்கின்றன அந்த இரண்டு பாடல்களும்.
                  
’‘அதிகாலை நேரம் சுபுஹுக்கு பின்னே அண்ணல் நபி வரும் போது
இன்னல் செய்தாள் ஒரு மாது பாடலின் சரணத்தில்.
தினமும் காத்திருப்பாளே தீயவள் மாடியின் மேலே
குண நபிநாதர் வருகின்ற போது குப்பையை கொட்டிடுவாளே........ 
என்று உச்சாணிக் கொம்பேறி தொடுவானந்தொட்ட பின்னும் 
‘கோமான் ரசூல் தலைமேலே’’ ‘ என்கிற வரியில் கோமானுக்கு முன்னதாக உங்கள் காத்திரத்தொனிகலங்கரை விளக்கமென தடித்து மெலெழுகையில் உயிர் ஒரு நொடி காணாமலாகிறது. இஸ்லாத்தில் ஹராம் என்று தடை செய்யப்பட்டதாக சொல்லப்படும் இசைதான் இஸ்லாத்தோடு எங்களை கைகுலுக்கச் செய்தது.கட்டியணைக்கவும் சொல்கிறது இஸ்லாத்தினை நான் ஏற்றேன்என்றவர் கரம் பிடித்தழும் அவளோடு ஒரு கணம் சேர்ந்தழச் செய்வதும் அதுதான்.
                    
                   நாபியிலிருந்து எழும் நாதம் கேட்கும் உயிர்களைத் தொட்டே விடுகிறது என்கிறார்கள். அரை நூற்றாண்டுக்கும் மேலாக  எங்களைக் கட்டி வைத்திருக்கும் ரகஸியமும் அதுவேதானா? அப்படியானால்  நமக்குள் இருப்பதும் தொப்புள் கொடி உறவு தானா ? உங்கள் நாபிக்கமலம் மலர்த்தி நபிக்கமலம் சேர்ந்தீரா ?

//கஸ்தூரி மணம் கமழும் தங்கள் மேனியை
இந்தக் கண்களாலே பருகுகின்ற ஆவல் தளும்புதே
புஷ்பங்களின் மகரந்தமாம் மதினப் புழுதியில்
புரள வேண்டும் உருளவேண்டும் போலிருக்குதே
(அண்ணல் நபி பொன்முகத்தை) //

கல்லில் செதுக்கியெடுத்த கனத்தோடும் கலையழகோடும் மிளிரும் இந்தப் பாடல்கள் மலைவாழைப்பழங்கள் . வாயாரத் தின்பது போலல்லாது பாடிவிடமுடியுமா அதன் முழக்கத்தை? பதில் சொல் எங்கள் பாரதிதாசன் சங்கே..

//தலைவாரிப் பூச்சூடி உன்னை
பாடசாலைக்குப் போவென்று
சொன்னாள் உன் அன்னை
சிலைபோல ஏனங்கு நின்றாய்- நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்//

பாடகருக்கான பாவனைகள் இல்லாத, கண்டிப்பான வாத்தியாரின் இறுக்கமான முகத்தோடு தோற்றமளிக்கும் நீங்கள் உண்மையில் ஒரு குழந்தை மாதிரி என்று சத்தார் பாய் சொன்னதாக சொல்லக் கேட்டேன். தமிழ்தேசத்தின் ஊடகங்களில் செய்திவாசிப்போரும் உலக அளவில் செல்லக்குரல்களைத் தேடும் தொகுப்பாளர்களும் குழந்தைகளுக்கு கதை சொள்வோரும் திரையுலக பொயட்டுகளும் அவர்தம் கிண்ணாரக்காரர்களும் ஜிப்ரீஷ் நவீனக்கவிகளும் உங்களைக் கேட்டு டண்ணகரத்தையும், றன்னகரத்தையும், வல்லின றகரத்தையும் இடையின ரகரத்தையும் உச்சரிக்கக் கற்றுத் தேர்வார்களாக.

// உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்
உருவமற்ற  இறைவனுக்கு உண்மையானவர்  //

இந்த இரண்டு வரிகள் மட்டுமே மேற்சொன்ன  நான்கு எழுத்துகளின் உச்சரிப்பையும் கற்றுக்கொடுக்க வல்லவை. அந்தவகையில்  நிஜமாகவே கண்டிப்பான அதேசமயம் இலகுவான தமிழ் வாத்தியாராக எக்காலத்துக்கும் நீங்கள் நிலைபெற்றிருப்பீர்கள். இந்தப் பாடலில் மேலும் ஒரு சிறப்பு இருப்பதாக நினைக்கிறேன். வந்தவர், தந்தவர், காவலர், நாயகர் இப்படி எல்லாவரிகளும் ரகர ஒற்றில் முடிகிறது. ரகர ஒற்றை அரை மாத்திரையில் உச்சரித்து முடித்துவிடவேண்டுமென்கிறது மொழி. நீண்டு பின் மெலிந்து அடங்கும் மெட்டுக்குள் அதை கடைபிடிப்பது எவ்வளவு சிரமம்.ஒரு சாதாரண ரசிகனுக்கு இப்படியொரு காட்டாற்றைக் கயிறு கட்டிக் கடந்தீர்கள் என்பது தெரியப்போவதே இல்லை.அவவளவு திறமையாக பற்சக்கரங்களுக்கு மசகு பூசிவிட்டிருக்கிறீர்கள்.

// கோடிக் கோடி செல்வம் வந்த போதிலும்
கொண்ட கொள்கை மாறிடாமல் நின்றவர்
ஆடையின்றி பெண்களந்த நாளிலே
அலைந்திருந்த மடமை தீர்த்து வென்றவர்
ஈடில்லாத போதகர் நபிகள் நாயகர்
உருவமற்ற  இறைவனுக்கு உண்மையானவர்
(உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்) //

  இறைவனிடம் கையேந்துங்கள்.. அவன் இல்லையென்று சொல்லுவதில்லை...இந்த ஏப்ரலின் எட்டாம் ராத்திரியைக் கடக்கமுடியாத மனவுளைச்சலில் உருண்டு புரண்டு அரைகுறையாக தூங்கிய பின்னிரவின் கனவில் அவனிடம் இன்னொரு இசைமுரசை கேட்டு கையேந்தினால் கையை விரிக்கிறான்.

- காலச்சுவடு மே 2015


Wednesday, 4 March 2015

அந்த மரம் பஸ்ஸுக்குக் காத்திருக்கிறது


ஊரோடு கோபித்துக்கொண்டு
ஒதுங்கி நிற்கும் அந்த மரம்
தலைமயிரை அள்ளிக்கட்டி
கண்ணீரை அவிழ்த்துவிட்டு
தாய் வீட்டின் வழியேகும்
அபலையென
பஸ்ஸுக்குக் காத்திருக்கிறது..

தூக்கத்திலிருந்ததை தட்டியெழுப்பி
நெடுஞ்சாலை  விரிவாக்கம்
உறுதியென்று
பொக்லைன் சொன்ன நாள் முதலாய்
உடல் நடுங்குமது
ஆளண்டாப் பெருவனஞ்சேர்க்கும்
பேருந்து வரப்பார்க்கிறது.

பச்சைக்குருதிப்புண்ணை
ஃப்ளெக்ஸ் பருந்து கொத்திக் குடைய
பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு
அடுத்து வரும் வண்டியை மறித்து
கையை நீட்டுகிறதம்மரம்

நான்கு அங்குலத்தூரிகை

தினமொரு நிறக்குழம்பில்
முங்கித்திளைக்கும் பெயிண்ட் பிரஷ்
பிரபஞ்சத்தின்
திக்கெட்டுக்கும்
வண்ணம் பூசிவிட முடிவெடுத்து
விடியற்காலை ஐந்துமணிக்கெல்லாம்
பொள்ளாச்சியிலிருந்து பஸ்ஸைப்பிடித்து விடுகிறது.
எப்பேர்பட்ட அவமானத்தையும்
துடைத்தெடுத்துவிடும் டர்பைன்டாயில்
தன்வசம் இருப்பதாக பீற்றிக் கொள்ளும்
அந்த நாலு இன்ச் பிரஷ்
நாள்பட்ட காயங்களை
சுரண்டியெறியும் பட்டித்தகடு ஒன்றையும் உள்ளாடைக்குள் ஒளித்து வைத்திருக்கிறது.
பிரஷுக்கொரு கைப்பேசியும்
கைப்பேசிக்குள்ளொரு வரவேற்பறையும்
வரவேற்பறைக்குள்ளொரு சிப்பந்தியுமுண்டு
சிப்பந்தி இளையராஜாவுக்கு மாதம் பதினைந்து ருபாய் சம்பளம்.
வாடிக்கையாளர்களுக்கு இடைவிடாது பொன்னோவியத்தை வரைந்து காட்டப்பணிக்கப்பட்டிருக்குமந்த அடிமைக்கு
ஆண்டையும் அடிமை.
ஞெகிழியுறைக்குள் பத்திரப்படுத்தியிருக்கும்
குட்டி பிரஷ் வரைந்த சிறுவர்மலர் பக்கத்தை
காட்டும்போது துளித்தண்ணீர் சொட்டுகிறது பிரஷிலிருந்து.
சிற்றுளியும்
பொடித்தூரிகையும்
மயிற்பீலியும்
உண்டுறையுமிப்பேருலகில்
ஒரு நான்கு அங்குலம்
காலியில்லையா
நீலவண்ணா

_ மணல்வீடு





Tuesday, 3 March 2015

பட்டினத்தார் காலத்தில் லெகின்ஸ் பயன்பாட்டில் இல்லை


முன்னோடும் வண்டியின்
பின்னிருக்கை திரட்சிக்கு
கால்களுக்கிடையிருந்து
முன்னோக்கிப்பாயும்
நமது ஸ்ப்ளெண்டர்
நமது ஸ்ப்ளெண்டராயில்லை பட்டினத்தாரே

மதன்மித்ரா பீமபுஷ்டி
பல்ஸராகிப் பாய்கிறதே
பட்டினத்தாரே

_காலச்சுவடு183
மார்ச்2015

தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து கசியும் பாடல்



கர்ப்பிணிப் பெண்ணின்
முலைகளென
பூரித்த கருணையோடு
அரவணைத்துக்கொள்கிறது
நோய்மை
இந்தக்கதகதப்பு
தனிமையில் உறைந்த
விரல்களுக்கு
எத்தனை ஆதூரமாயிருக்கிறது
உறக்கத்திற்கும்
மரணத்திற்கும்
தியானத்திற்கும்
ஊடான
குறுக்குவெட்டுப்பாதையில்
பயணிப்பது
பரமசுகம் இல்லையா
உன்னோடு பேசுவதை
உளறல் என்றால்
வா நாம் கோமாவுக்குப் போவோம்
வினோதமாய்
நிறம் மாறும்
இவர்களிடையே
என்னை
மீளக்கையளித்துவிடாதே
என் அன்பே

_காலச்சுவடு183
மார்ச் 2015

Saturday, 14 February 2015

வஞ்சிரத்துண்டு

பச்சை வாசம்
நிரவிக்கிடக்கும்
வாசல் உன்னது.

ஊழிமீனைக்
கையாளுவதை
பார்த்துக்
கொண்டிருந்தபோதுதான்
தொண்டைச்சங்கில்
இறங்கியது தூண்டிமுள்.


நானேதான்
இப்பவும்
மாருக்கிடையில்
பாசிமணி டாலரில்
செவுள் கிழியத்
தொங்குவது.

யாரும் பார்த்திராத
உதடுகளால்
நீ சொன்னதைத்தான்
மூச்சுக்கு தவிக்கும்
இந்தக் கெண்டைகளும்
சொல்கின்றன.

ஒருகை
நீரள்ளித்தெளித்து
விடவா

ரொம்பத்
தூண்டுகிறது
இந்த
வஞ்சிரத்துண்டு

Tuesday, 4 November 2014

சிகெரெட் என்பது சிகெரெட் அல்ல


சிகரெட் என்பது
கைக்குட்டை
போர்த்திக்கொள்ளப் பார்க்கிறேன்

சிகரெட் என்பது
சாயுந்தோள்
கண்ணீர் திரள்கையில்
தேடுகிறேன்

சிகரெட் என்பது
சினேகிதச்சங்கிலி
பாதியில்
அறுத்து வீசுகிறேன்

சிகரெட் என்பது
இடைவேளை
பெருமூச்சை
வெளிவிடப் போகிறேன்


சிகரெட் என்பது
நித்தியத்துள்
மெல்லப்படியிறக்கும்
சம்மனசு

சிகரெட் என்பது
முத்தம் அல்ல

சிகரெட் என்பது
நீளிரவு

சிகரெட் என்பது
நிழல் மரம்
தேநீர்
அருந்தப்போகிறேன்

சிகரெட் என்பது
தோழமை
பதட்ட நெஞ்சை
நீவுந்தோழி

சிகரெட் என்பது
தாய்மடி

சிகரெட் என்பது

ஆதூரங்கசியும்
மார்க்காம்பு





நமக்குக் கிடைத்த பரிசு - பாவண்ணன்

’யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பது திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் இடம்பெற்றிருக்கும் வரி. நாம் அனைவருமே அவ்வரியை பல இடங்களில் கேட்...