Friday, 7 February 2020

தைரியத்திருவாளன்


காவல்காரத் தாத்தனின்
புகை வளையல்களில் 
கை நுழைக்கிறாள் 
அரூபப்பேத்தி.
நூற்றுக்கணக்கில் 
விதைத்தும் 
சொற்ப மணிகளே 
அறுவடையாகும் 
ஹாலோ பிளாக் 
அவென்யூக்களில் 
சல்யூட் பண்ணும் 
எலியின் சர்க்கஸ் 
பழைய சாகஸம்
வீடு கைவிட்டாலும்
அடைக்கலந்தரும் 
வாசல்கள் உண்டே 
என்கிறது 
எழுந்து நிற்கும் சவப்பெட்டி
ஒருக்களித்த 
வாழ்வுக்கும்
ஜால்ரா போட 
ஒரு சைக்கிள்
வேலைமுடிந்து 
வருகையில் 
பூ வாங்கித் திரும்புவது 
ஒருகாலம்.
கீரைக்கட்டுகளுடன்
வளைக்குள் சேர்கிறாய்.
அகாலத்தில் 
இப்படி கை நீட்டுகிறவனை
சந்தேகமாக பார்க்காதே 
வாட்சுமேன் தாத்தா
நரைநெஞ்சத்தணலின் 
கொஞ்சத்தை
இந்த பீடிக்கு நெருப்பாக்கு
ஒன்று சொல்லவா
உலோக மரங்களின் 
ஒற்றைக் காய்களும்
பழுத்து ஒழுகும் 
இந்தப் பொழுதின் 
ராயன் நீதான்
சும்மா
கோலை சுழற்றி 
சுவற்றில் அடி 
எந்த நாய் வருமென்று 
நான் பார்க்கிறேன்.






Thursday, 6 February 2020

அப்பாடா


ம்மாவின் பழைய காதல்
பந்தல் வரை வந்து நிற்க
வாசலில் இருந்த மகள்
தயங்கித் தயங்கி ‘நல்வரவு’ என்றாள்.
படியேறி அது இவளைக் கடந்தபோது
ஆசுவாசத்திலொரு வார்த்தை சொன்னாள்.
போன உயிர் திரும்பி வந்தது.
உயிரின் முகத்தில் தளும்புமிரு குளங்களிருந்தன.
குட்டிப்பையன் பன்னீர் செம்பால் மழை செய்தான்.



பூக்காடு

யோசித்து
யோசித்துப் பின்பு
மகளுக்கொரு பேர் வைத்தேன்
ரோஜா

அண்டை வீடுகளுக்கு என் மனைவி
ரோஜாம்மா- ஆகிப் போனாள்
ரோஜா அப்பா என் பெயரானது
மகனும் ஆனான் ரோஜாண்ணா

ரோஜா பொம்மை
ரோஜா வீடு
ரோஜா பென்சில்
ரோஜா ரப்பர்

எங்கள் வீட்டுத் தொட்டியிலிருந்த
பெயர் தெரியாப் பூவுங்கூட      
ரோஜாப்பூவானது அவர்களுக்கு

ஒரேயொரு பெயரை மட்டுந்தான்
நட்டு வைத்தேன் நான்                                                                  
என் வீடு மெள்ள மெள்ள 
உருமாறிக் கொண்டிருக்கிறது                                                    
கரும்பச்சை இலைகளும்
இளஞ்சிவப்பு மலர்களுமாக                   
முட்களேதுமில்லாத
பெரியதொரு ரோஜாவனமாய்.















Tuesday, 4 February 2020

ம்ப்ப்ப்ரூம்ம்ம்ம்ம்.....

நடிகர்களுக்கு
குரல் கொடுப்பவர்
விருந்துக்கு வந்திருந்தார்
வீட்டுச்சிறுவன்
பெரிதாக அவரை
கண்டுகொள்ளவில்லை
தினசரி
வானூர்திக்கும்
புகைவண்டிக்குமே
குரல் கொடுப்பவன் அவன்.





Monday, 27 January 2020

கடுங்காப்பி


துக்கவிசாரணைக்கு 
இடையில்
காப்பி வந்தது

வழக்கமாக காப்பியை
மறுக்கும் யாரும்
அப்படிச் செய்யவில்லை

காப்பியை குறித்து
பேசும் எவரும்
அது பற்றி பேசவில்லை.

காப்பியும்
வழக்கம் போலிருக்கவில்லை

நாசியைச் சீண்டும்
மணமின்றி ஒளிகுன்றி

சிறுகுமிழிகள் விம்மி வெடிக்க
முகம் கறுத்து

இரண்டு கைகளுக்கும்
இடையிலொரு
கசந்த பிரார்த்தனையைப் போலிருந்தது.

குரல்வளையை இறுக்கிப்பிடிக்கும் 
இந்த திரவ துக்கம்

முன்னறையிலிருந்து ஓடோடி
படுக்கையில் விழுந்து
அழும் சிறுமியுமாயிருக்கிறது.








Saturday, 18 January 2020

அற்புதம்! அற்புதம்!

தன்போல சிலமடங்கு
வளர்ந்த சோடி
இலை சுமந்து
தான் நடக்கும்
சிற்றெறும்பு

அற்புதம் !அற்புதம்!

தலைபெருத்த
மூளையினை
உடல் சுமந்து
திரிவதுவும்

அற்புதம் !அற்புதம்!

தொழுமிரண்டு
கரங்களைத்தான்
தலை சுமந்து
திரியுதந்தச் சின்னவுயிர்

அற்புதம் !அற்புதம்!

அது தெரிந்து
கூத்தாடும்
இவ்வுடலும்
இக்கணமும்

அற்புதம் !அற்புதம்!

Thursday, 9 January 2020

அவன் கட்சி

நாகசுரம்
நாயனம்
நாதஸ்வரம்

என்னென்ன பெயர்கள்
எத்தனையெத்தனை
விவரணைகள்

பீப்பி என்று
சொன்னான் பார்
ஒரு பாலகுரு
நான் அவன் கட்சி

கல்யாண வீட்டினிடையோடுகிற
சிறுவர்களை நிறுத்தி

என் பெயர் பீப்பி
என் பெயர் பீப்பி
என்று சொல்லிக்கொண்டேயிருக்கிறது

நமக்குக் கிடைத்த பரிசு - பாவண்ணன்

’யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பது திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் இடம்பெற்றிருக்கும் வரி. நாம் அனைவருமே அவ்வரியை பல இடங்களில் கேட்...