Friday, 29 May 2020

தேவகுமாரன் ஒரு சல்லிப்பயல் - யோவான் மதுரையிலிருந்து எழுதிய சுவிஷேசம்

ஆத்தாளும் மயனுமா,
சாராயத்த காச்சிப்புட்டு....
ஏழவீட்டு கலியாணமுனு
சாக்கு சொன்ன சல்லிப்பய...
பொம்பள சகவாசமும்
ருசுவாயிப்போச்சு.....
தைலந்தேக்க ஒருத்தி,
இந்தா..ஏட்டையா முன்னாலயே
மொகந்தொடைச்சா இன்னொருத்தி
வேசியளுக்கு ஜாமீனா நின்ன பய,
கோயில் தெருக்கடய  ஒடச்சி
தலமறவா திரிஞ்சவந்தேன்...
அவுக அப்பன் சொத்தாம்ல?
காடுமலைகொகையெல்லாம்
ரகசிய கூட்டம் போட்டா
நக்ஸலைட்டுன்னு சொல்லாம
கொஞ்சுவாய்ங்களாக்கும்?
அவெங் கூட்டாளிப்பயக,
வாரண்டு கொண்டுவந்த
போலீசுக்காரன்  காதை
அறுத்துப்புட்டாய்ங்கம்மா....
சும்மா வுடுமா கெவுருமெண்டு?
வேற ஒரு கேசுல சோடனையப்பண்ணி
திருட்டுப்பயலுவலோட
தொங்க விட்டாய்ங்க...
செத்தானா பாவி ?
ஆயிரம் வருஷமா
அழகுபெத்தபுள்ளயா
இங்ஙனயே திர்ராம்யா...
செத்த ஆள ஏன்டா
சாகவிட மாட்றீயண்டு
எவனக்கேட்டாலும்
என்னா சொல்றாய்ங்க.... தெரிமா?
'சல்லிப்பய ஒரு மகத்தான மனுஷன்'றாக...

Monday, 27 April 2020

நான்கு சக்கரங்களில் நகரும் குட்டியானை

வெற்றிநடைபோடும் சிக்கல் வாழ்க்கையில்
ஓட்டுனர் சுமையாள் என்னும்
இருவேடங்களைத்தாங்கி
வலம்வரும் நஞ்சப்பன்

தனது குட்டி யானையின் நெற்றியில்
சிங்கம்லே
என்றெழுதி வைத்திருக்கிறார்

கடவுள்துணை என்பதாகவும்
ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் அவர்
கடவுள் தனியாக இருப்பது நல்லதல்ல எனக்கண்டு
புலிக்குட்டி எலிக்குட்டி என
பெயரன் பெயர்த்திகளின்
செல்லப்பெயர்களையும் இட்டு வைத்திருக்கிறார்

மாதத்தவணைகளில் துவங்கி
லொட்டு லொசுக்குகளில்
தொடரும் பட்டியல்
வாகனத்தின் முன் நீளுகிறதொரு
நெடுஞ்சாலையென

எத்தனையாவது ஆயிரம் கிலோமீட்டரில்
அது முடிவுறும் என்பதுதான் பெருங்கேள்வி

ஞாயிற்றுக்கிழமையின் பிற்பகலில்
அசந்துறங்கும் சிங்கத்தின் மேலேறி
வலையிழைகள் அறுந்து விழும்படிக்கு
விளையாடுகிறது சுண்டெலி.

Friday, 28 February 2020

ஹமாரா பஜாஜ்

பெட்டியை பக்கவாட்டில்
மாட்டிக்கொண்டு திரியும் பஜாஜ் CD 100-க்கு
லேடி பேர்ட்-ஐப் பார்க்கும்போதெல்லாம்
நரம்பு முறுக்கிக் கொள்ளவும்
சைக்கிளை வழிமறித்து
ஆக்டிவா மாதிரி வைத்துக் கொள்வதாக சொன்னபோது
பச்சைக்கிளிகள் ஆலோலமிட்டன.

 ஆலஞ்சடை திருகி
வெட்கிய சைக்கிளை
ஆரத்தழுவிய பொழுதுகளில்
அது றெக்கையுதறி வானுக்குத்தாவும்.

பெட்டிக்குள் காமசூத்ராவை பத்திரப்படுத்தும்போது
பார்பிபொம்மையும் தண்ணீர் துப்பாக்கியும்
இருப்பது கண்டு
நாக்கைக் கடித்துக்கொள்ளும் நமது பஜாஜ்
அப்புறமாய் விசிலடிக்கவும் செய்தது.

விதி வலுத்த நாளொன்றில்
ஆக்டிவா கருத்தபல்ஸரின் தோள்சேர்ந்த கோலங்கண்டு
அது உடலையுதறி
வானுக்குத்தாவ முடிவு செய்தது.

தினசரி வீட்டுக்குள்ளிருந்து
எழும்பி
குடிமேசையில் இறங்குமிந்த
துருவேறிய சைக்கிளின்
டம்ளரில்
கொஞ்சத்தை
சரித்துத் தொலையுங்களேன் ஜி.

Thursday, 13 February 2020

திக்கிப்பேசுகிறவன்


வெல்டிங் பணிமனையின்
வெளிச்சப் பொறி அவன் பேச்சு.
வார்த்தைகளைப் பெற்றுப்புறந்தள்ள
கர்ப்பவலி தின்னும் நெஞ்சிலிருந்து
மேடேறும் குதிரைகள் மணலில் புதைந்து திமிறுகின்றன.
கோபங்கொள்ளுகையில்
அவனது நாவுக்கு தாளம் தப்பிவிடுகிறது
வாயிலிருந்து புறப்படும் அக்கினிஅம்புகள்
பகைஞரின் காலடியில் மல்லிப்பந்துகளாய் மாறி விழ
மூர்க்கர்களும் மரணாயுதங்களை தரையிலெறிந்துவிட்டு
சிறியோனை முத்தஞ்செய்வார்கள்.
மனதுருகும் வேளைகளில் நீள்குழல்விளக்குகள்
உயிருக்குத்துடிப்பதைப்போலவே
அவன் இன்னும் அதிகமாக திக்குவான்
பொறியில் சிக்கித்துடிக்கும் பன்றியென
அந்த உதடுகள் துடித்திருக்க
துருப்பேறிய ஆணியை விழுங்குவதைப்போல
நாம் நமது எச்சிலை விழுங்க வேண்டும். 
நேற்றைக்கு அவன் என்னிடம் 
தனது அன்பைச் சொன்னான்.
மற்றவர்களுடையதைக் காட்டிலும்
கூடுதல் எடையோடிருந்த
அவனுடைய அன்பில்
எழுத்துருக்கள் திரளாயிருந்தன.
ல...லவ் யூ..... ந..நண்பா








நூற்றியெட்டை மறித்தல்


நீரோடையில் மிதக்கும்  
ஒற்றை மலர் என் வண்டி
மாலுமி  பெடலைச் சுழற்றினால்  
ஓடை பெருகி  கடலாகும்
இந்த ஆம்புலன்ஸோ
சாக்கடையின் நடுநெஞ்சில் 
ஓலமிட்டு நீந்துகிற வாத்து 
அதைப் பார்த்தாலே எனக்கு எரியும்
மாற்றுத்திறனாளியானால் என்ன
அவலங்களுக்கு எதிராக
துரும்பையாகிலும்   நகர்த்துவோம் என்கிறாள் தோழி
எனது மூன்று சக்கரத்தையும்  நகர்த்தி
அவசரவூர்தியின் குறுக்கே போடுவேன்
அதன் அலறலும்
தொடர்ந்தோடும்  வண்டிகளின் பதறலும்
தனியள் என்று என்னைப் பரிகசிப்பது போலில்லையா







தீக்குச்சி

000


தேனீர்ப்பொழுதில்
நீளும் குச்சியில்
ஓரிதழ் தாமரை.
அதைகும்பிட்டுக் கொள் 
சிகரெட்டே.


000


தீக்குச்சி
ஒரு கன்னிப்பையன்.
ஆவி தீரத்தீர
காற்றில் எழுதுகிறது
தண்ணெனக் குளிர்ந்த
கருந்துளையை.


000


பெட்டி 
தன்னிடம் சொன்னதை
அப்படியே 
கைமாற்றிவிட்டுப் போனது 
குச்சி.
சிகரெட்டால்
அதை 
ஜீரணிக்கவே 
முடியவில்லை


Friday, 7 February 2020

ஸ்விகிப்பையன்


விளக்கைத் தேய்க்க 
பூதம் வந்த கதைதான் 
ஸ்விக்கிப் பையனுடையதும்.
பதறப்பதற பொதியை வாங்கி 
கனலை அணிந்து பறக்கிறான்.
காற்று தழுவ 
சாம்பல் பறந்து 
ஒளிர்கிறது கங்கு!
'சாப்பிட நேரம் கிடைக்காது
யாரிடமோ சொல்கிறது 
பிணி தீர்க்குஞ்சிறுதெய்வம்.
ஒரு கையை 
பாக்கெட்டில் விட்டுக்கொண்டு
குழந்தை கழட்டிப் போட்டதை 
வாங்குவது போல் 
முகத்தை வைத்துக் கொள்கிறாய்.
முறுவல் என்பது 
சாத்தான் குஞ்சுகளுக்கு 
விலக்கப்பட்ட கனி .
இல்லையா?






நமக்குக் கிடைத்த பரிசு - பாவண்ணன்

’யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பது திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் இடம்பெற்றிருக்கும் வரி. நாம் அனைவருமே அவ்வரியை பல இடங்களில் கேட்...