ஏன் இப்படி இருக்கிறாய்?
எப்போது பார்த்தாலும்
முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு
குனிந்து மண்ணையே பார்த்துக் கொண்டு
அல்லது
மரக்கிளையைப் பார்க்கிறாய்
மொட்டைப்பாறை கிடைத்தால் சொல்லவே வேண்டாம்
அதை முறைத்துப் பார்க்கிறாய்
எருமையே
உன் மீது வெயில் காய்வதும்
பாம்பு ஊர்ந்து போவதும்
நான் கேள்விகள் கேட்பதும்
உனக்குத் தெரிகிறதா?
அதிசயம்!
அவன் நிமிர்ந்து பேசினான்.
இதைத்தான்
நானும் கேட்டுக் கொண்டிருந்தேன்.
இந்த
மண்ணிடமும் மரத்திடமும்
மொட்டைப் பாறையிடமும்
இதைத்தான் கேட்டுக் கொண்டிருந்தேன்.
நடப்பவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்களா?
இங்கு எத்தனை பேர் வந்திருப்பார்கள்
எத்தனை பேர் மடிந்திருப்பார்கள்
இடையில்
எவ்வளவு நடவுகள் விளைந்திருக்கும்
எவ்வளவு கொண்டாட்டங்கள்
எத்தனை கொடுமைகள் நடந்திருக்கும்
அவ்வளவையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறீர்களா?
அல்லது
ஊமை போல் இருந்து கொண்டே
சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி
நகர்த்த வேண்டியதை
நகர்த்திக் கொண்டுதான் இருக்கிறீர்களா?
பதில் சொல்லுங்கள் எருமைகளே...