Friday, 28 May 2021

பதினோரு மணிக்காட்சி

 




வெட்ட வெளியில் 

ஒரு  ஈ இல்லை

காக்கையும் இல்லை

மொட்டை வானம்

பளபளத்துக்  கிடக்கிறது.

வண்டிப் புழங்காமல்

கிடந்த நெடுங்காலம் 

மல்லாந்த தண்டவாளம் 

ஒருக்களித்துப் படுக்கிறது.

வெட்கம் பார்க்காமல்

அவளுங்கூட புரண்டுவிட்டால்

வெய்யில் புதர் நடுவில்

அகண்டபெரும் வெண்திரையில்

ஆயிரங்கால் பூச்சிகளின் 

ஆலிங்கனம் துவங்கிவிடும்.


Tuesday, 4 May 2021

எழுத்தாளர் எம். கோபால கிருஷ்ணன் வலைப்பூவிலிருந்து

எளியவர்களின் அன்றாடங்கள் - 

ஜான் சுந்தரின் 'பறப்பன, திரிவன, சிரிப்பன’




 
ஜான் சுந்தரின்
‘நகலிசைக் கலைஞன்’ தொகுப்பு வெளியாகி சில மாதங்கள் கழித்தே வாசிக்க நேர்ந்தது. பிரமாதமான
ஒரு நாவலுக்கான தனித்துவமான கதாபாத்திரங்களையும் புனைவுத் தருணங்களையும் கொண்டிருந்தது
அந்தக் கட்டுரைத் தொகுப்பு. இசைக் கலைஞர்களின் உல்லாசமும் கொண்டாட்டமுமான குணாம்சங்களை
துள்ளலும் துடிப்புமாக சொல்லிய ஜான் சுந்தரின் மொழி அதே வலிமையுடன் அவர்களது வாழ்க்கையின்
துயர நாட்களையும் ஆதுரத்துடன் சித்தரித்திருந்தது.

இது ஜான் சுந்தரின்
எட்டு சிறுகதைகளைக் கொண்டது இத் தொகுப்பு. இவற்றில் பல கதைகளை வெளியான சந்தர்ப்பங்களிலேயே
வாசித்திருக்கிறேன். கொங்கு பிரதேசத்துக்கேயுரிய தனித்துவமான, வக்கணையான மொழியும் சற்றே
குசும்புடன் அவற்றை சித்தரிக்கும் சொல்முறையும் இக்கதைகளை வேறுபடுத்திக் காட்டிய அம்சங்கள்.
இப்போது தொகுப்பாக வாசிக்கும்போது இக் கதைகளின் வேறு சில தன்மைகளை கவனிக்க முடிந்தது.

இவை வாசித்துப்
பழகிய, ஏற்கெனவே அறிந்த தளங்களில் எழுதப்பட்ட கதைகள் அல்ல.

சிறுவர் பிராயத்துக்
கதைகள் என இவற்றைக் குறிப்பிடலாம். ஒவ்வொருவருக்குள்ளும் சற்றும் வண்ணமிழக்காத சிறார்
பருவத்தின் வெவ்வேறு காட்சிகளை இக் கதைகள் மீட்டுத் தருகின்றன. குதூகலமும் கொண்டாட்டமுமான
தூய அந்த நாட்களின் பரவசத்தை கூடுதல் குறைவின்றி சொல்லிச் செல்கின்றன. கொங்கு பிரதேசத்துக்கேயுரிய
மொழியில் அந்தப் பருவத்தின் விளையாட்டுகள், ‘செல்ல’ப் பெயர்கள், சிறுதீனிகள் என எல்லாவற்றையும்
நினைக்கச் செய்கின்றன.

‘செல்ல’ப் பிராணிகளின்
கதைகள் என்றும் இவற்றைச் சொல்லலாம். சிறுவர் பருவத்தையும் செல்லப் பிராணிகளையும் பிரிக்க
முடியாது. கிளிகள், நாய்கள், பூனைகள், காக்கைகள், அணில்கள், ஆட்டுக்குட்டியோடு பாம்பும்
கூட கதைகளுக்கு நடுவே ஓடித் திரிகின்றன.  வீட்டில்
திரியும் வளர்ப்புப் பிராணிகளுடனான பிணைப்பை நேர்த்தியாக வார்த்துள்ளன இக்கதைகள்.

சிறுவர் பிராயத்துக்
கதைகள் அல்லது செல்லப் பிராணிகளின் கதைகள் என்று இவற்றை வகுத்துக்கொண்டாலும் இவை எளியவர்களின்
மிக எளிய வாழ்க்கையையே சித்தரித்துள்ளன என்பதே இவற்றின் சிறப்பு. ஒண்டுக் குடித்தனங்கள்,
புறம்போக்கு நிலத்தில் அமைந்த குடிசைகள், மில் தொழிலாளர்களின் குடியிருப்புகள் என இக்கதைகள்
நிகழும் களங்கள் அன்றாடம் கடந்து செல்பவை. உத்தரவாதம் அற்றவை. ஆனால் இங்குள்ள மனிதர்களுக்கு
நடுவேதான் ஆடுகளும் பூனைகளும் நாய்களும் கோழிகளும்கூட உயிர் வாழ்கின்றன. அன்றாடத்தின்
நிச்சயமின்மைக்கு நடுவே சின்னச் சின்ன சந்தோஷங்களை இச் சிறு உயிர்களே தருகின்றன. மழையோ
வேறு இயற்கைச் சீற்றமோ தாக்கும்போது அவர்களுடன் சேர்ந்து இந்த உயிர்களும் அல்லலுறுகின்றன.


எளியவர்களது வாழ்வின்
நிச்சயமற்ற அன்றாடங்களை, பாடுகளை, சிக்கல்களை, துயரம் பிழிய இடைவெளியின்றி கோர்க்கப்பட்ட
வாதைகூடிய சொற்களைக் கொண்டுதான் அழுத்தமாகச் சொல்லமுடியும் என்பதில்லை.   கிளிகளும்
பூனைகளும் நாய்களும் ஓடியாடி திரிந்திருக்கும் சிறுவர்களின் உலகத்துக்குள் அவர்களுக்கான
கோணத்தில் சொல்லும்போது இன்னும் கனம் கூடுகிறது. ‘அந்தோணி’யின் மீதான தெரஸாவின் தாயன்பையும்,
‘கிக்கி’ வளர்க்கும் மலரக்காவின் துரோகத்தையும், மில்களில் பாம்பு பிடிக்கும் சசியின்
காருண்யத்தையும் வெகு சுலபமாக இக் கதைகளின் பின்னணிகளே உணர்த்துகின்றன.

‘நகலிசைக் கலைஞர்கள்’
தொகுப்பில் கண்ட பல்வேறு கலைஞர்களைப் போலவே இத்தொகுப்பிலும் சாமி, ராணி, ஸ்ரீஜா, பிரிட்டோ
சார் போன்ற அபூர்வமான குணச்சித்திரங்களைப் பார்க்க முடிகிறது. இவர்களே நம் அன்றாடத்தின்
அரிதார சலிப்பைத் துடைப்பவர்கள்.

இத்தொகுப்பின்
இன்னொரு சுவாரஸ்யம், வாசிப்பினிடையே கேட்கக் கிடைக்கும் ‘ஓசை’கள். ஜான் சுந்தர் இசைக்
கலைஞர் என்பதால் அன்றாடத்தின் ஓசைகளை தவறவிடாமல் வாக்கியங்களுக்கிடையே கோர்த்துவிடுகிறார்.
‘அபூம்சகா’, ‘டிக்கினி டிக்கினி’ என அந்த ஓசைகளுடன் படிக்கும்போது கதையும் அந்த கதாபாத்திரமும்
இன்னும் நெருக்கமாகிவிடுகிற்து. அதேபோல, ஜோக்குட்டி, ரேக்குட்டி, கிக்கி, டிப்பி, டிக்கா
என்று கதாபாத்திரங்களுக்கு அவர் சூட்டும் பெயர்கள் விசேஷமானவை.

சுவையாகவும் நேர்த்தியாகவும்
சொல்லியுள்ள இக்கதைகளில் சில ( பேசாமடந்தை, பித்தளை நாகம்) திருத்தமாக முடிவுகளை எட்டவில்லை.
லைன்வீட்டு சந்தில் ஒரு பியானோ எனும் ஒற்றை வரியில் ஆச்சரியத்தை தரும் ‘கின்னரப்பெட்டி’யும்
‘அணில்களுக்கு மட்டுமல்ல காக்கைகளுக்கும் பசிக்கும்’ என்ற மனவெழுச்சியுடன் அமைந்த
‘பறப்பன, திரிவன, சிரிப்பன’வும் அவ்வாறான உச்சத்தை எட்டியுள்ளன.

‘பறப்பன, திரிவன,
சிரிப்பன’ என மிகப் பொருத்தமாக பெயர் சூட்டப்பட்டிருக்கும் இத்தொகுப்பு எளிய உயிர்களின்
இருப்பினால் மேன்மையுற்றிருக்கும் எளியவர்களின் அன்றாடங்களை சிறார் பருவத்துக்கேயுரிய
களங்கமற்ற பார்வையில் நேர்த்தியாகத் தந்திருக்கிறது.

0

பறப்பன, திரிவன,
சிரிப்பன ( சிறுகதைகள்)ஜான் சுந்தர்

காலச்சுவடு பதிப்பகம்

Sunday, 12 July 2020

உங்கா மரத்தின் கனி




நூல் கிளைகளின் நுனிகளில்
கொத்துக் கொத்தாய்
கனிந்திருந்த மார்புகளைப் பார்த்து
ஏங்கியழுகிறது குழந்தை.

ஐந்து ரூபாய் கொடுத்து
அதிலொன்றை கொய்து தந்தவுடன்
அம்மாவைக் கட்டிக் கொள்வது மாதிரி
அதனைக் கட்டிக் கொள்கிறது குழந்தை.

இது அம்மா தான்... இது அவளே தான்.

கண்ணாடிக் கரைசலாய்
வாயிலிருந்து ஒழுகும் அன்பில்
அபிஷேகம் செய்யப்படுகிறது
வாயு லிங்கம்.

எச்சில்சாலைகளில்
காம்பைத்தேடும் நெடும்பயணம்.
ஈறுகளால் நடந்தே இந்த உலகத்தை
சுற்றி வந்தாயிற்று ஓரிரு முறை.

தொப்புள் முடிச்சைக் கண்டதும் அத்தனை சிரிப்பு.

இது அம்மாதான்..... இது அவளேதான்.

’உங்கா’ வென குழந்தை வீறிடக்கேட்டு
முகம் சுண்டி விட்ட பலூனுக்கு
மெது மெதுவாய்..........மெது மெதுவாய்
முளைக்கத் துவங்குகிறது ஒற்றைக்காம்பு.

இப்போது...... நிஜமாகவே
இது அம்மாதான்....... இது அவளேதான்

Saturday, 11 July 2020

தேடுங்கள்

சுற்றுலா வந்த 
பிள்ளைகளின் சந்தோஷம்                                      
தேவாலயத்தின் உள்ளே 
இரைச்சலானதும்
பிரார்த்தித்துக் 
கொண்டிருந்தவர்கள் அதட்டினர்  
                  
விளையாடுகிறவர்கள் 
வெளியேறுங்கள்                                
ஜெபிப்பவர்கள் மட்டும் 
உள்ளே இருக்கலாம்.
                                
வேண்டுதல் முடித்து 
எழுந்த வாத்தியார்                                           
சுருவத்தைப் பார்த்து அதிர்ந்தார்                                                     
மாதாவின் கைகளில் 
மகன் இல்லை. 



                                       







Kalimuthu Nalla Tambi 
kannada version of the poem below: 

ಪ್ರವಾಸ ಬಂದ ಮಕ್ಕಳ ಖುಶಿ
ದೇವಾಲಯದೊಳಗೆ ಕೇಕೆಯಾಯಿತು 

ಪ್ರಾರ್ಥನೆ ಮಾಡುತ್ತಿದ್ದವರು ಗದರಿಸಿದರು 
ಆಟ ಆಡುವವರು ಹೊರಗೆ ಹೋಗಿ
ಜಪಿಸುವವರು ಮಾತ್ರ ಒಳಗಿರಬಹುದು 

ಬೇಡಿಕೆಗಳು ಮುಗಿಸಿ ಎದ್ದ ಮೇಷ್ಟ್ರು 
ಗೋಡೆ ನೋಡಿ ಘಾಬರಿಯಾದರು
ಮೇರಿ ಮಾತೆಯ ಕೈಯಲ್ಲಿ ಮಗನಿಲ್ಲ 
ಮಕ್ಕಳೊಂದಿಗೆ ಹೊರಹೋಗಿರಬಹುದೇ!

ತಮಿಳು ಮೂಲ : ಜಾನ್ ಸುಂದರ್ 
ಕನ್ನಡದಲ್ಲಿ : ನಲ್ಲತಂಬಿ

ஜென் கூர்மம்






ஓட்டமாய் ஓடிக் கொண்டிருந்த முயலுக்கு
ஆமையின் வேகத்தை நினைத்ததும்
பொத்துக் கொண்டது சிரிப்பு

பகடியைப் பகிர்ந்து கொள்ள
நண்பர்களும் பக்கத்தில இல்லை

தனிமை துரத்த
முயல் ஓடுகிறது
ஆமையை நோக்கி

சினேகத்தைப் பாடி
நடந்தன இரண்டும்

ஆமை கழற்றிக் கொடுத்த ஓட்டை
சுமந்து பார்த்த முயலுக்கு
பொத்துக் கொண்டது அழுகை

ஆமையின் பாதச்சுவடுகளை
பணிந்து தொடர்கிறது முயல்.



Monday, 6 July 2020

அழ. வள்ளியப்பா - அரைமூடி அஸ்கா





அம்மா கடைக்குப் போய்வரச் சொன்னதும், காசை வாங்கிப் பையில் போட்டுக் கொண்டு கிளம்பினான். வெகு தூரத்திலிருக்கும் முசுலியார் கடைக்கு நடந்தே போவதைக் காட்டிலும் குதிரையோட்டிக்கொண்டு போவதுதான் சரி. சுவரோரம் சாய்ந்து நின்று கொண்டிருந்த குதிரையைத் தூக்கி தோளில் மாட்டிக் கொண்டு குதிரையை பறக்கவைக்கும் கைக்கோலையும் எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தான். ’ஹா! என் லட்சியப் பயணத்தை ஒரு காட்டாறு குறுக்கிடுவதா?’ பின்பக்கம் திரும்பாமலே பின்னோக்கி நடந்தான். புலி பதுங்குவது எதற்கு? ஓடி வந்து ஒரே பாய்ச்சல்! நதியைக் கடந்து விட்டான். பாய்ந்து கடக்கிற போது தோளில் இருந்த குதிரை பயத்தில் அவனை இறுகப்பற்றிக் கொண்டது. அப்படிச் செய்ததால் அது தப்பிப் பிழைத்தது.பிடித்த கையிலேயே கைக்கோலையும் பிடித்திருந்ததால் அதுதவறி நதிக்குள் விழுந்திருக்கிறது. நதியோரத்திலேயே ஓடினான். எங்கேயோ இருக்கிற கருங்கடலைத் தேடிப் போகும் இருள் நதி. கைக்கோல் மிதந்தபடியே சுழலுகிறது. அப்படியே நதியோட்டத்தில் பயணிக்கிறது. கையை நீட்டி எடுத்து விடலாமா?
”டேய்….தம்பி! சாக்கடைக்குள்ள விழுந்துடப்போறே!”
யாரோ வழிப்போக்கன்! வழிப்போக்கன் கண்டதை அம்மாவிடம் சொல்லிவிட்டால்? அய்யய்யோ! போகட்டும் . சாகசத்தின் போது இப்படி நமது பக்கமும் இழப்புகள் ஏற்படுவது இயல்புதான். நல்ல பிள்ளையாக திரும்பி நடந்து ஆமணக்குச்செடியின் அடர்ந்த கிளைகளில் ஒன்றை முறித்து கைக்கோலாக்கிக் கொண்டான். குதிரையைத் தோளிலிருந்து இறக்கி வைத்து கோலால் ஒரு தட்டு”ஹூய்! டக்கிடி டக்கிடி டக்கிடி டக்கிடி”குதிரையிடம் இல்லாத குளம்புகளுக்கு குரல் கொடுத்த வண்ணம் ஓடுகிறான். ஒத்தை டயராக இருந்தால் லொடக்கு லொடக்கு என்று நொண்டி நொண்டித்தான் ஓடும். ஓட்டை இல்லாத டயரை சைக்கிள் கடைத் தாத்தா சும்மா கொடுப்பாரா? ஓட்டை இருக்கிற டயரையே இரண்டாக வாங்கி வந்து ஒன்றுக்குள் ஒன்றைத் திணித்து நல்ல கனமான, மதர்த்த குதிரையை தயார் செய்திருக்கிறான்.எல்லாம் சரி….அம்மா வாங்கி வரச் சொன்னதென்ன? அடப்பாவமே மறந்து விட்டதே? குதிரை நிற்காமல் ஓடுகிறது.
டக்கிடி டக்கிடி டக்கிடி டக்கிடி
குதிரைப் பாடல்களில் நினைவில் இருந்த ஒன்றின் சரணத்து வரிகள் தானாக மாறின,
“ அம்மா எதையோ வாங்கி வரச்சொன்னாள்
அதற்குள் நான் அதை மறந்தேனே…..அஅ ஆ…ஆ….
அம்மா எதையோ வாங்கி வரச்சொன்னாள்
அதற்குள் நான் அதை மறந்தேனே…..
மறுபடி போனால் திரும்பவும் கேட்டால்
உதை விழும் அய்யோ.. நான் மாட்டேன்…… ”
பல்லவி தானாக சேர்ந்து கொண்டது
”அச்சம் என்பது மடமையடா..
அஞ்சாமை திராவிடர் உடமையடா…”
எல்லாம் இந்தக் கைக்கோலால் வந்த வினை.அது மட்டும் விழாமல் இருந்திருந்தால் வாங்க வேண்டிய சாமான்களையே பாட்டாக படித்துக் கொண்டு வந்திருப்பான்… வழக்கமாக அதுதான் நடக்கும். இன்றைக்கு மறந்து போனானே?
“ஹேய்… குதிரையை எடுக்கும் போது என்னவோ முணுமுணுத்தேனே?”
”அரை மூடித் தேங்காய்…. கால் கிலோ அஸ்கா…..”
வந்துவிட்டது… நினைவுக்கு வந்துவிட்டது. நினைவு திரும்பிய மகிழ்வில்… மளிகைக் கடைக்கார முசுலியார் உடைக்கப் போகிற தேங்காயை… அதிலிருந்து வழியும் சர்க்கரைத்தண்ணீரை…. இவன் அதைக் குடிக்க வாய் பிளந்து அண்ணாந்து நிற்பதை…. முசுலியார் தனது ’கீத்து’ போடும் கத்தியும் சுத்தியலும் ஒன்றேயான ஆயுதத்தால் தேங்காயின் விரிசலை விரிப்பதை….. ஓட்டின் உள்ளிருந்து தேங்காயே அவனைப் பார்த்து சிரிப்பதை…. கழுத்து நெஞ்சு வயிறு எல்லாம் நனைய வழிந்தோடுகிற இனிப்பை…. சகலத்தையும் நினைத்து சப்புக் கொட்டிக் கொண்டான்…. கடையும் வந்து சேர்ந்தது. மறந்து போய் நினைவுக்கு வந்தது, இவ்வளவு நேரமும் சொல்லிக் கொண்டது,பாடிக் கொண்டும் வந்தது. அதை முசுலியாரிடம் சொல்லும் போது ஒரு நொடி நிலைதடுமாறி தலையும் வாலும் மாறி இருந்தது.
”கால்கிலோ தேங்காய், அரை மூடி அஸ்கா”
ஆனால் முசுலியார் அந்த விடுகதையை லகுவாக அவிழ்த்தார்
”அரை மூடித் தேங்காயா?”
முழுத்தேங்காயை எடுத்து குலுக்கியவாறே இவனைப் பார்த்தார்
” குடிக்கிறியா?....ஆ காட்டு”
வண்டியைத் திருப்பிக் கொண்டு வரும் வழியில் மீண்டும் அதே பாட்டு வரிகள் புதிது…
”அரை மூடித் தேங்காய் கால் கிலோ அஸ்கா…..”
அவரைக்காய் அதுவும் வேணும்
முழுசாத் தேங்காய், முசுலியார் உடைத்தால்,
தேங்காய் தண்ணியை நான் குடிப்பேன் ”
”ஹேய்…. அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா”
000
நோய்தொற்று பரவலைத் தடுக்க அடைவுக்குள்ளிருந்துகொண்டே குழந்தைகளுக்கு காணொலி வாயிலாக வகுப்பெடுக்கிற முயற்சிகளில் இருக்கிறாள் மழலையர்ப் பள்ளி ஆசிரியையான என் மனைவி. அவளது கைப்பேசிக்குள் ஒரு சித்திரச்சிறுமி பாடுகிறாள்…
”அணிலே, அணிலே, ஓடிவா!அழகு அணிலே ஓடிவா!
கொய்யா மரம் ஏறிவா! குண்டுப்பழம் கொண்டு வா!”
இந்தப் பாடலை இயற்றியவர் ’பிள்ளைக் கவியரசு’ அழ. வள்ளியப்பா என்பது தெரிந்து இணையத்தைத் திறந்து அவரைப் பற்றிய செய்திகளை வாசித்தேன். அதுதான் என் ரப்பர் குதிரையை திரும்பவும் ஓட்டி வந்தது. வள்ளியப்பா தனது பள்ளிக்கும் வீட்டுக்கும் இடையே இருந்த நான்கு கிலோ மீட்டரைத் தன் புது மெட்டைக் கொண்டு கடப்பாராம். கூடவே நடக்கும் நண்பர்களும் சேர்ந்து பாடுவார்களாம். அந்தக் குருவிகளின் உற்சாகம் எனக்கும் தொற்றிக்கொண்டது. இந்தத் திருக்கூட்டம் பள்ளி சென்று திரும்பும் வழியில் ஒரு சினிமாக் கொட்டகை இருந்திருக்கிறது. The lost jungle என்கிற ஆங்கிலத் திரைப்படத்தை ‘காணாத காடு’ என்று மொழிபெயர்த்து வைத்திருந்த சுவரொட்டியைப் பார்த்திருக்கிறார். உடனே,
‘காணாத காடு
கண்டுவிட்டால் ஓடு
ஒளிய இடம் தேடு’
என்று தலைவருக்குப் பாட்டு பொத்துக் கொண்டிருக்கிறது. இந்த மழலைக் கவிச்செம்மலின் பாடல்கள் பஞ்சவர்ணக் கிளிகள் அல்ல.ஒரே நிறத்திலான பச்சைக் கிளிகள் அல்லது ஊர்க்குருவிகள் அல்லது’பாதிப் பழம் உன்னிடம் பாதிப் பழம் என்னிடம்’’தங்க நிற மாம்பழம் உங்களுக்கும் வேண்டுமா?பங்கு போட்டுத் தின்னலாம்’’கிட்டு நான்கு லட்டு பட்டு நான்கு லட்டு’ஆளுக்குப் பாதி’என்றெல்லாம் பகிர்ந்து உண்ணுவதையே போதிக்கிற காகங்கள்.வள்ளியப்பா பள்ளிப்படிப்பை முடித்த கையோடு வங்கிப் பணிக்குச் சேர்ந்தார், பணிபுரிந்து கொண்டே குழந்தை இலக்கியம் சமைத்தார், தன்னைப் போன்ற குழந்தைக் கவிஞர்களை ஊக்குவித்து வந்தார், பாட்டிலே காந்தி கதை, ஈசாப் நீதிக் கதைகள் உட்பட பல நூல்கள் எழுதினார் போன்ற செய்திகள் விரவிக் கிடப்பதைப் பார்க்க முடிந்தது. வாக்கியங்கள் ஆள் நடமாட்டமில்லாத நெடுஞ்சாலைகள். கண்கள் அவைகளின் மேல் அதி வேகமாக ஓடும் வாகனத்தைப் போல கடந்து கொண்டிருக்க ‘குழந்தை இலக்கியம் பற்றி பேசிக் கொண்டிருந்த போதே மயங்கிச்சாய்ந்து பின்பு மறைந்தார்.’ ’உயிர் பிரிந்த போது அவரது கைவிரல்கள் எழுதுகோலைப் பிடித்திருத்திருந்தது போல இருந்தது’ என்கிற தகவல்கள் சற்றே உயரம் கூடுதலான வேகத்தடைகள். வண்டி நிதானித்தே கடந்தாக வேண்டும்.
குழந்தைகளுக்கான எளிய கலைவடிவங்களை, முன்னெடுப்புகளை, நீதிக்கதைகளை ஏளனம் செய்கிறவர்கள் குழந்தைகளுக்கு என்னசொல்லித் தரலாம் என்பதைச் சொல்லலாம். இங்கே குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஒரே வரிசைதான். அவர்களுக்கென்று தனிப்பாடல்கள் இல்லை. வயது வந்தோர்களுக்கான பாடல்களே குழந்தைகளுக்கும். நம்மையறியாமல் பிஞ்சுகளுக்குப் புகை போடுகிறோமா? இந்தக் கேள்விகளுக்கிடையே நாம் அழ. வள்ளியப்பாவைப் பார்க்க வேண்டும். அவரது வாழ்நாள் முழுக்கச் செய்து வைத்திருக்கிற மகத்தான பணிகள் உன்னதமானவை. வணங்குதலுக்குரியவை.
அரவிந்த் குப்தா என்கிற கலைஞர் குழந்தைகளுக்காக படைக்கிற வேடிக்கை விளையாட்டுப் பொருட்களில் ஒன்று கரணம் அடித்துக் கொண்டே இருக்கிறது. அதனுள் அவர் கோலிக் குண்டுகளை இட்டுப் பொதிந்திருக்கிறார். உள்ளிருக்கும் கோலிக்குண்டுகள் அந்தப் பொம்மையை உருளச்செய்கின்றன. வள்ளியப்பாவின் கோலிக்குண்டுகளில்தான் எத்தனை குதூகலம். குழந்தைகள் பெரியவர்களாகி விடுகிறார்கள் கோலிகள் அப்படியே அடுத்தடுத்த குழந்தைகளிடம் புத்தம் புதிதானவைகளாக மிளிர்ந்து கொண்டே இருப்பது எப்படி? ”அம்மா இங்கே வா…வா ஆசை முத்தம் தா..தா” என்பது பழைய பாடலா ? இசையும் மொழியும் எளிய வடிவில் எப்போதும் சுரந்தேயிருக்கும் இதுதான் ’என்றும் புதிய’தின் தன்மையா? ஓசையின் தித்தித்திப்பும் தாளகதியின் அடிப்படையும் இயல்பாக உள்ளோடியிருக்கும் இதுதான் எளிமையின் பிரம்மாண்டமா? இரண்டாயிரம் ரூபாய் நோட்டிலும் ஒரு அரையாடைதான் புன்னகைக்கிறதா? தேவாலயத்தில் அத்தனை பேரும் கூடித்தொழுவது உச்சியில் தொங்கும் கிழிபட்ட ஆட்டிடையனின் கோவணத்தைத் தானா?

Friday, 29 May 2020

தேவகுமாரன் ஒரு சல்லிப்பயல் - யோவான் மதுரையிலிருந்து எழுதிய சுவிஷேசம்

ஆத்தாளும் மயனுமா,
சாராயத்த காச்சிப்புட்டு....
ஏழவீட்டு கலியாணமுனு
சாக்கு சொன்ன சல்லிப்பய...
பொம்பள சகவாசமும்
ருசுவாயிப்போச்சு.....
தைலந்தேக்க ஒருத்தி,
இந்தா..ஏட்டையா முன்னாலயே
மொகந்தொடைச்சா இன்னொருத்தி
வேசியளுக்கு ஜாமீனா நின்ன பய,
கோயில் தெருக்கடய  ஒடச்சி
தலமறவா திரிஞ்சவந்தேன்...
அவுக அப்பன் சொத்தாம்ல?
காடுமலைகொகையெல்லாம்
ரகசிய கூட்டம் போட்டா
நக்ஸலைட்டுன்னு சொல்லாம
கொஞ்சுவாய்ங்களாக்கும்?
அவெங் கூட்டாளிப்பயக,
வாரண்டு கொண்டுவந்த
போலீசுக்காரன்  காதை
அறுத்துப்புட்டாய்ங்கம்மா....
சும்மா வுடுமா கெவுருமெண்டு?
வேற ஒரு கேசுல சோடனையப்பண்ணி
திருட்டுப்பயலுவலோட
தொங்க விட்டாய்ங்க...
செத்தானா பாவி ?
ஆயிரம் வருஷமா
அழகுபெத்தபுள்ளயா
இங்ஙனயே திர்ராம்யா...
செத்த ஆள ஏன்டா
சாகவிட மாட்றீயண்டு
எவனக்கேட்டாலும்
என்னா சொல்றாய்ங்க.... தெரிமா?
'சல்லிப்பய ஒரு மகத்தான மனுஷன்'றாக...

குறுமக்கள் கொட்டாரம் - நூல் குறித்து ஒடியன் லட்சுமணன்

  ஒரு குழந்தை சக வகுப்பு குழந்தைகள் எது கேட்டாலும் வெங்காயம் என்கிறது. மாணவர் மட்டுமில்லை டீச்சர்களிடத்திலும் அப்படித்தான். கண்டித்துப் ...