Friday, 7 August 2026

குறுமக்கள் கொட்டாரம் - நூல் குறித்து ஒடியன் லட்சுமணன்

 



ஒரு குழந்தை சக வகுப்பு குழந்தைகள் எது கேட்டாலும் வெங்காயம் என்கிறது. மாணவர் மட்டுமில்லை டீச்சர்களிடத்திலும் அப்படித்தான். கண்டித்துப் பார்த்துவிட்டு எல்லா டீச்சர்களும் இது தேறாது என்று நகர்ந்துவிட்டனர் அவிலா டீச்சர் அப்படி நகர்ந்துபோய்விடவில்லை எப்படியாவது அவனை மாற்றிவிடவேண்டுமென்ற முனைப்பு தோன்றுகிறது 

ஒரு நாள் வகுப்புக்குள் நுழைந்த அவிலா டீச்சர் 

ஏன் வீட்டுப்பாடம் எழுதவில்லை என்று அந்தக்குழந்தையின் நோட்டைப்பார்த்துக்கேட்கிறார்.

வெங்காயம் ....என்கிறது குழந்தை .

’ஏன் பட்டனை போடலை’ என்று அவிலா டீச்சர் கேட்கிறார். 

வெங்காயம் ....

நல்லாப்படிக்கனும் இப்படி அசமந்தமா இருக்கக்கூடாது என்று ஆலோசனை சொல்லி முடிப்பதற்க்குள்... 

வெங்காயம் என்கிறது அக்குழந்தை .

வெங்காயம் என்பது வசைசொல் அல்ல. ஆனால் அந்தக்குழந்தை அப்படி எல்லாவற்றிருக்கும் அதை ஒரு வசைச்சொல்லாகவே பயன்படுத்துகிறது என்பதால் அவிலா டீச்சர் யோசிக்கிறார். ஒரு சதித்திட்டம் தீட்டுகிறார் 

அடுத்த நாள் வகுப்பு தொடங்குகிறது.

இரட்டை வரி நோட் ஏன் எழுதலை?

’வெங்காயம்’ என்கிறது அந்தக்குழந்தை.

கடைசி பெஞ்சிலிருந்து ஒரு குழந்தை எழுந்து ’கத்தரிக்காய்’ என்கிறது

இரண்டாம் பெஞ்சிலிருந்து ஒரு குழந்தை எழுந்து ’கத்தரிக்காய்’ என்கிறது. 

முதல் பெஞ்சிலிருந்து எழுந்து இன்னொரு குழந்தை ’தக்காளி’ என்கிறது.

குழந்தை எல்லா காய்கறிகளையும் திரும்பித்திரும்பி பார்க்கிறது. 

ஏன் ஷூ- வை சரியாகப்போடலை ?

வெங்காயம் என்கிறது குழந்தை . மறுபடியும் மூன்றாம் பெஞ்சில் பீட்ரூட் முளைக்கிறது . ஏழாம் பெஞ்சில் முட்டைக்கோஸ் முளைக்கிறது. நான்காம் பெஞ்சிலிருந்து கேரட் விளைகிறது. வகுப்பறையே காய்கறித்தோட்டமாகிப்போகிறது .மூன்று நாட்கள் இப்படி நடந்தபின் அந்தக்குழந்தை வெங்காயத்தை கைவிட்டுவிடுகிறது.


அவிலா டீச்சர் அதை பெரிய சாதனையாக எடுத்துக்கொள்ளாமல் அடுத்த குழந்தைக்கு தாவி விடுகிறார். ஒருவருட கால சித்திரவதைக்கு சட்டென அவிலா டீச்சரால் எப்படி தீர்வு தரமுடிகிறது என்கிற யோசனையில் தலைமை ஆசிரியர் மோவாயை சொறியத்தொடங்குகிறார்.

இப்படி பல்வேறு ஆசிரிய அணுகுமுறைகளை குறுமக்கள் கொட்டாரம் நம்மோடு பகிர்ந்துகொள்கிறது.

ஒரு வகுப்பறையில் ஆசிரியர் என்பவர் வெறும் அறிவைப் பகிரும் அதிகாரம் பெற்ற நபர் அல்ல; அவர் குழந்தையின் உணர்ச்சி மேலாண்மையைத் தீர்மானிக்கும் ‘பாதுகாப்பான புகலிடம்’ . ஆசிரியர் தனது சொந்தக் கவலைகள், சமூக அழுத்தம் மற்றும் அதிகார மனப்பான்மை போன்ற ‘ஆசிரிய உளவியல் சிக்கல்களைக்’ கடந்து, குழந்தையின் உணர்ச்சி நிலையில் நின்று யோசிக்கும்போதே உண்மையான கற்பித்தல் நிகழ்கிறது.இப்படி தன் அதிகாரப் படிநிலையைக் கழற்றிவிட்டு, குழந்தைகளுக்காகத் தன்னையே ஒரு பாதுகாப்பான புகலிடமாக மாற்றிக்கொண்ட அவிலா டீச்சரின் அற்புதம் நிறைந்த தருணங்களை, சுவாரசியமாக பதிவு செய்திருக்கிறார் ஜான் சுந்தர்.

இந்நூல் வெறும் வகுப்பறை அனுபவங்களின் பதிவோ அல்லது ஒரு கல்வியாளரின் ஆவணக் குறிப்போ அல்ல; மொழியாலும், மனித ஆன்மாவைத் தொடும் உணர்ச்சிச் செறிவாலும் தேர்ந்த கலைவடிவமாக, நிற்கிறது. அவிலா டீச்சர் தான் சந்தித்த குழந்தைகளை மேலோட்டமான மாணவர்களாகப் பார்க்காமல், அவர்களின் ஆன்மாவின் ஆழத்தில் போய் அமர்ந்துகொண்ட ஒரு தேவதையாக ஒவ்வொரு பக்கமும் உருப்பெறுகிறார்.குழந்தைகளின் உலகம் நாம் சாதாரணமாக நினைத்துக்கொண்டிருப்பது போல வெறும் அறியாமையாலும் விளையாட்டாலும் மட்டுமே நிரம்பியது அன்று. அதில் நாம் அறியாத பேரொளியும், வெளிப்படுத்த முடியாத அடர்ந்த துயரங்களும், பேரன்பும் ஒருசேர உறைந்திருக்கின்றன. உயிருள்ளவை, உயிரற்றவை என்ற செயற்கையான வகைப்பாடுகளை எல்லாம் தாண்டி, பிரபஞ்சத்தின் சகலப் பொருட்களுக்குள்ளும் உயிரையும் வலியையும் உணர்வையும் தரிசிக்கும் அபாரமான பேரன்பு குழந்தைகளுடையது. குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ள பொம்மைகளுக்கும், மரங்களுக்கும், பொருட்களுக்கும் உயிர் இருப்பதாகவே நம்புகிறார்கள். இது வெறும் அறியாமை அல்ல, பிரபஞ்சத்தின் எல்லாவற்றோடும் தம்மை இணைஒரு குழந்தை  சக வகுப்பு குழந்தைகள்   எதுகேட்டாலும் வெங்காயம் என்கிறது. மாணவர் மட்டுமில்லை டீச்சர்களிடத்திலும் அப்படித்தான்.  கண்டித்துப் பார்த்துவிட்டு  எல்லா டீச்சர்களும் இது தேறாது என்று நகர்ந்துவிட்டனர் அவிலா   டீச்சர் அப்படி நகர்ந்துபோய்விடவில்லை  எப்படியாவது அவனை  மாற்றிவிடவேண்டுமென்ற முனைப்பு தோன்றுகிறது 


ஒரு நாள் வகுப்புக்குள் நுழைந்த அவிலா டீச்சர் 


ஏன் வீட்டுப்பாடம் எழுதவில்லை என்று அந்தக்குழந்தையின் நோட்டைப்பார்த்துக்கேட்கிறார்.


வெங்காயம் ....என்கிறது குழந்தை .


’ஏன் பட்டனை போடலை’ என்று அவிலா டீச்சர் கேட்கிறார். 


வெங்காயம் ....


நல்லப்படிக்கனும் இப்படி அசமந்தமா இருக்கக்கூடாது  என்று ஆலோசனை சொல்லி முடிப்பதற்க்குள்... 


 வெங்காயம்  என்கிறது அக்குழந்தை .


வெங்காயம் என்பது வசைசொல் அல்ல. ஆனால் அந்தக்குழந்தை அப்படி எல்லாவற்றிருக்கும்  அதை ஒரு வசைச்சொல்லாகவே பயன்படுத்துகிறது என்பதால் அவிலா டீச்சர் யோசிக்கிறார். ஒரு சதித்திட்டம் தீட்டுகிறார் 


அடுத்த நாள் வகுப்பு தொடங்குகிறது.


இரட்டை வரி நோட்  ஏன் எழுதலை?


’வெங்காயம்’ என்கிறது அந்தக்குழந்தை.


கடைசி பெஞ்சிலிருந்து ஒரு குழந்தை எழுந்து  ’கத்தரிக்காய்’ என்கிறது


 இரண்டாம் பெஞ்சிலிருந்து ஒரு குழந்தை எழுந்து ’கத்தரிக்காய்’ என்கிறது. 


முதல் பெஞ்சிலிருந்து எழுந்து இன்னொரு  குழந்தை ’தக்காளி’ என்கிறது.


குழந்தை எல்லா காய்கறிகளையும் திரும்பித்திரும்பி பார்க்கிறது. 


ஏன்  சூவை சரியாகப்போடலை ?


வெங்காயம் என்கிறது குழந்தை .                        மறுபடியும் மூன்றாம் பெஞ்சில்   பீட்ரூட் முளைக்கிறது .  ஏழாம் பெஞ்சில் முட்டைக்கோஸ் முளைக்கிறது.  நான்காம் பெஞ்சிலிருந்து  கேரட் விளைகிறது.  வகுப்பறையே காய்கறித்தோட்டமாகிப்போகிறது .மூன்று நாட்கள் இப்படி நடந்தபின் அந்தக்குழந்தை வெங்காயத்தை கைவிட்டுவிடுகிறது.

அவிலா டீச்சர் அதை பெரிய சாதனையாக எடுத்துக்கொள்ளாமல் அடுத்த குழந்தைக்கு தாவிவிடுகிறார்.  ஒருவருட கால சித்திரவதைக்கு  சட்டென அவிலா டீச்சரால் எப்படி தீர்வு தரமுடிகிறது என்கிற யோசனையில் தலைமை ஆசிரியர் மோவாயை சொறியத் தொடங்குகிறார்.

இப்படி பல்வேறு ஆசிரிய அணுகுமுறைகளை  குறுமக்கள் கொட்டாரம் நம்மோடு பகிர்ந்துகொள்கிறது.

ஒரு வகுப்பறையில் ஆசிரியர் என்பவர் வெறும் அறிவைப் பகிரும் அதிகாரம் பெற்ற நபர் அல்ல; அவர் குழந்தையின் உணர்ச்சி மேலாண்மையைத் தீர்மானிக்கும் ‘பாதுகாப்பான புகலிடம்’ . ஆசிரியர் தனது சொந்தக் கவலைகள், சமூக அழுத்தம் மற்றும் அதிகார மனப்பான்மை போன்ற ‘ஆசிரிய உளவியல் சிக்கல்களைக்’ கடந்து, குழந்தையின் உணர்ச்சி நிலையில் நின்று யோசிக்கும்போதே உண்மையான கற்பித்தல் நிகழ்கிறது.

இப்படி தன் அதிகாரப் படிநிலையைக் கழற்றிவிட்டு, குழந்தைகளுக்காகத் தன்னையே ஒரு பாதுகாப்பான புகலிடமாக மாற்றிக்கொண்ட அவிலா டீச்சரின் அற்புதம் நிறைந்த தருணங்களை, சுவராசியமாக பதிவு செய்திருக்கிறார் ஜான் சுந்தர்.





இந்நூல் வெறும் வகுப்பறை அனுபவங்களின் பதிவோ அல்லது ஒரு கல்வியாளரின் ஆவணக் குறிப்போ அல்ல; மொழியாலும், மனித ஆன்மாவைத் தொடும் உணர்ச்சிச் செறிவாலும் தேர்ந்த கலைவடிவமாக, நிற்கிறது. அவிலா டீச்சர் தான் சந்தித்த குழந்தைகளை மேலோட்டமான மாணவர்களாகப் பார்க்காமல், அவர்களின் ஆன்மாவின் ஆழத்தில் போய் அமர்ந்துகொண்ட ஒரு தேவதையாக ஒவ்வொரு பக்கமும் உருப்பெறுகிறார்.

குழந்தைகளின் உலகம் நாம் சாதாரணமாக நினைத்துக்கொண்டிருப்பது போல வெறும் அறியாமையாலும் விளையாட்டாலும் மட்டுமே நிரம்பியது அன்று. அதில் நாம் அறியாத பேரொளியும், வெளிப்படுத்த முடியாத அடர்ந்த துயரங்களும், பேரன்பும் ஒருசேர உறைந்திருக்கின்றன. உயிருள்ளவை, உயிரற்றவை என்ற செயற்கையான வகைப்பாடுகளை எல்லாம் தாண்டி, பிரபஞ்சத்தின் சகலப் பொருட்களுக்குள்ளும் உயிரையும் வலியையும் உணர்வையும் தரிசிக்கும் அபாரமான பேரன்பு குழந்தைகளுடையது. குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ள பொம்மைகளுக்கும், மரங்களுக்கும், பொருட்களுக்கும் உயிர் இருப்பதாகவே நம்புகிறார்கள். இது வெறும் அறியாமை அல்ல, பிரபஞ்சத்தின் எல்லாவற்றோடும் தம்மை இணைத்துப் பார்க்கும் தூய அன்பின் வெளிப்பாடு என்பார் சுவிஸ்சை சேர்ந்த உளவியலாளர் ஜான் பியாஜே .

குழந்தைகளின் இந்த நுட்பமான அக உலகத்தை ஒரு சாதாரணப் பயிற்சிப் பட்டறையாலோ, வெறும் பாட்டுச் சொல்லிக் கொடுக்கும் எந்திரத்தனமான கற்பித்தலாலோ புரிந்துகொள்ள முடியாது. அதற்கு , பெரியவர்கள் தங்கள் அகந்தையைக் கழற்றி வைத்துவிட்டு, அவர்களின் உலகத்திற்குள் இறங்கிச் செல்ல வேண்டும்; நமக்குள்ளே தேங்கியிருக்கும் 'பெரிய மனிதத்தன'த்தை அகற்றித் தூய்மையடைய வேண்டும்.

குழந்தைகளிடம் பணியாற்றுபவர்கள், அவர்களின் சிக்கலான அக உலகத்தைப் புரிந்துகொள்ளத் திணறும் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் என எல்லோருக்குமான அழுத்தமான உளவியல் திறவுகோல்களை இந்நூல் தன்னகத்தே வைத்திருக்கிறது.

குழந்தைகளின் அக உலகின் ஆச்சரியங்களை தரிசிப்பதற்கான வாய்ப்பைத் தரும் குறுமக்கள் கொட்டாரம்,குழந்தை, பெற்றோர் மூவருக்கிடையே ஒரு பாலத்தைக்கட்டும் முயற்சியாகவும் இலக்கியமாகவும் நம்மை வசீகரிக்கிறது.




#அன்புள்ளஜான்சுந்தர்

 

 


🍀


Thomas Aquinas

02. 04. 2018


எங்கீப்பா  இருந்தெ ஜானு இத்னெ நாளா. நகலிசை கலைஞனுக்கப்புரம்  இப்பதான்  மார்ச் காலச்சுவடுல  பாக்கறன். நெறயா எழுதுப்பா.


JohnSundar

02. 04. 2018

நல்லதுங்க... நன்றி!


🍀


Thomas Aquinas

12. 01. 2019


நேரத்திலேயே படிச்சுடேன். உடனே எழுத முடியலை. குஷ்டநோயாளி கைல பஞ்சு, செல்லோ டேப்பிலிருந்து வரும் சத்தம், புனித செசிலியம்மாள் reference இதெல்லாம்   ச்சே something unique, level with life.


@Kalachuvadu பூனை, பியானோ, பிரிட்டோ Short story 


Wishes.

Happy new year.


JohnSundar

12. 01. 2019


ரொம்ப சந்தோஷம். 

ரொம்ப சந்தோஷம். உற்சாகப்படுத்தியமைக்கு நன்றி!


🍀


Thomas Aquinas

28. 06. 2019


தூளிக்குழந்தை ஒண்ணுக்கு போனது மாதிரி கீழே ஒரு நீர் கோலம்,

பொரி வறுத்து வீடே மங்கலமா

மணக்க,


@Vikatan கிக்கி Short story 


சூப்பர் சுந்தர்.......


JohnSundar

28. 06. 2019

ரொம்ப நன்றிங்க.


🍀


Thomas Aquinas

15.11.2019


Toy maker, music teacher, origami trainer, story teller......why story writer is left out?.


@The Hindu article


Good job. Kudos.


JohnSundar

15.11.2019


.....................


🍀


JohnSundar

06.06.2024


அன்புள்ள தாமஸ்!


உங்களது நிஜப்பேர் என்னவென்று தெரியாது. என் நண்பர்களில் யாரோ ஒருவர் என்னை தொடர்ந்து உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார், இது ஒரு விளையாட்டு என்று நினைத்திருந்தேன்.  அகழ் மின்னிதழில் ஒரு கதை எழுதி இருக்கிறேன். வழக்கம்போல உங்களிடம் இருந்து மின்னஞ்சல் வரும் என்று காத்திருந்தேன். காத்திருக்கிறேன். 


🍀


JohnSundar 

24.01.25


அன்புள்ள தாமஸ்!

தொற்று நோய்க்கால அடைவு முடிந்த பிறகு உங்களிடமிருந்து மின்னஞ்சல் எதுவுமில்லை....தாமஸ்.... எங்கே  இருக்கிறீர்கள்? இருக்கிறீர்கள் தானே?


🍀






கனவில் வந்த இரவு



🍀

படுக்கையை விட்டு எழுந்தவுடன் 
இரவில் வந்த கனவை 
தந்தையிடம் விவரிக்கிறாள் மகள் மதிப்பெண் சான்றிதழை வாங்க 
நீயும் நானும் பள்ளிக்குப் போனோமா உன்னை மரத்தடியில் 
காத்திருக்கச் சொல்லிவிட்டு 
நான் மட்டும் உள்ளே போனேனா மதிப்பெண்களைப் பார்த்துவிட்டு 
வெளியே போகக் கூடாது என்று 
ஆசிரியர் சொன்னாரா 
அப்போது பழுப்பில் ஒன்றும் 
கருப்பு வெள்ளையில் ஒன்றுமாக 
இரண்டு நாய்க் குட்டிகள் வந்தனவா அதிலொன்று பூனையாக மாறிவிட்டது. அந்தப் பூனை தண்ணீர்த் தொட்டிக்குள் விழுந்துவிட்டதா 
காப்பாற்றி எடுத்துவந்து துவட்டினால் 
அது அப்பாவாக மாறிவிட்டது. 
மரத்தடியில் காத்திருக்கும் 
தன் கதி என்னவென்று 
குழம்பிய தந்தையிடத்தில் 
நான்தான் அதற்குள் விழித்துக்கொண்டேனே 
நீ கவலைப்படாமல் 
தேநீரை அருந்து என்கிறாள்.
தகப்பனின் 
தேநீர்க் குவளைக்குள்ளிருந்து 
தலை துவட்டியபடியே 
வெளியே வந்த ஆசிரியர் 
பூனைக்கு அடியில் 
ஒரு மரம் காத்திருக்கிறதே 
அது உங்களுடையதா என்று கேட்டார். அப்போது பூனையைப் போல அசையாமலிருக்கத்தான் 
நினைத்தார் தகப்பன் 
ஆனால் அதற்குள் 
மரத்தின் வால் 
அசைந்ததைக் கவனித்துவிட்டார் ஆசிரியர். அவரிடமிருந்து தப்புவதற்கு 
மகளைத் தேடின நாய்க்குட்டிகள் 
அவளோ நல்ல உறக்கத்திலிருக்கிறாள். இனிமேற்கொண்டு 
இரவில் கனவு வராமலிருக்க 
கனவில் ஒரு இரவு வருமல்லவா 
அதற்குள் நுழைந்து 
உறங்கிவிட வேண்டும் என்று 
முடிவு செய்தது மதிப்பெண் சான்றிதழ்.

🍀



அரும்பு இதழ்

துடிமேளக்காரன்
தொகுப்பு 



 

பிங்கியின் பயணம்


2015 முதல் கோவை பூ.சா.கோ  கலை அறிவியல் கல்லூரியின் வகுப்பறைகளில் உலவி வரும் பிங்கி, மகாராஷ்டிர மாநிலத்திலும் காணப்படுகிறது.






 

Wednesday, 6 November 2024

கண்ணே என் கீரைத்தண்டே

 கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நான் சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன். இரவு 11 மணி இருக்கலாம். நண்பர் செல்வேந்திரன் அலைபேசியில் கூப்பிட்டார். பெருமதிப்பிற்குரிய கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் 'மத்தகம்' இணையத் தொடரில் இடம்பெற்ற 'கண்ணே என் கீரைத்தண்டே' தாலாட்டுப்பாடலை கேட்டதாகவும். 'பாடல்வரிகளை கவனித்தீர்களா?' என்று செல்வேந்திரனுக்கு அனுப்பிக் கேட்டதாகவும், 'இஞ்சி இடுப்பழகி'யைச் சொல்லி நாட்டார் பாடல்கள் குறித்துப் பேசியதாகவும், அதற்கு செல்வேந்திரன், 'அவர் கோவையைச் சேர்ந்த நண்பர்தான், RKFI - 54 வது தயாரிப்புக்காக நமது அலுவலகத்தில் இருந்த குழுவில் அவரும் இருந்தார், உங்களையும்கூட சந்தித்துப் பேசினார்கள்' என்று நினைவுறுத்திச் சொல்ல அதற்கு அவர் 'இப்படித்தான் ப.சிங்காரம் சந்திப்பு நடந்தது' என்று சொல்லி, நேரில் சந்திக்க விரும்புவதாகவும் சொன்னதாகச் சொன்னார். சென்னை வந்த பிறகு சொல்லுங்கள் என்றார். இளவரசு அண்ணன் வீட்டுத் திருமணத்திற்கு மீண்டும் சென்னை போனபோது சொன்னேன். அவர் நேர நெருக்கடியில் இருந்ததை செல்வா சொன்னார். அதன்பிறகு தொந்தரவு செய்வதில் எனக்கும் உடன்பாடு இல்லை. அது உறுதியாக நடக்கும் என்று ஆழ்மனதில் ஏதோ ஒரு நம்பிக்கை. நண்பருக்கு நினைவுறுத்துவதை விட்டுவிட்டேன். ஏனெனில், முதன்முதலாக திரைத்துறையில் எழுதியதற்கான காசோலையை கலைஞானியாரின் அலுவலகத்தில் இருந்து மரியாதைக்குரிய சகோதரர் திரு.மகேந்திரன் அவர்களின் கரங்களில் இருந்துதான் பெற்றுக் கொண்டேன். கடந்த 2022 வருடம், இதே நவம்பர் மாதம் பதினைந்தாம் தேதி என் வாழ்வில் மிக முக்கியமான நாள். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்து வழங்கும் திரைக்கதையின் கருத்துருவாக்கம் குறித்த தகவல் பரிமாற்றம். கலைஞானி கமல்ஹாசன் அவர்களை நேரில் சந்தித்து, இயக்குனர் பிரசாத், எழுத்தாளர் ஜேபி சாணக்யா, லாவண்யா ஆகியோர் பேசினோம். அன்புக்குரிய நண்பர் டிஸ்னி அவர

20 நிமிடங்கள் வரை இருக்கலாம் என்று குறிப்பிட்ட அந்த சந்திப்பு எதிர்பாராத சுமார் 75 நிமிடங்கள் வரை நீடித்தது. உற்சாகமான பேச்சு. ஏராளமான தகவல்கள். எத்தனை திறப்புகள்! கலைஞர்களின் தலைவன்! என் புதிய மகிழ்ச்சியும் அதுதான். இத்தனைக்கும் என் பாடல் திரைப்படப்பாடல் கூட அல்ல.. இணையத் தொடரில் இடம்பெற்ற ஒரு நிமிடப் பாடல். இசைக்கோர்ப்பு இல்லாத கச்சாவான அந்த வரிகள் இந்தியக் கலையுலகின் உச்சக்கலைஞரின் கவனத்தைப் பெற்றது என்கிற தகவல் மட்டுமே போதாதா எனக்கு? இந்த மனிதர் எப்படி அவருடைய உலகத்தை கண்காணித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. கோவை சிறைச்சாலைக்குள் இசை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறேன். சின்னச்சின்ன வழக்குகளில் உள்ளே வரும் பிக்பாக்கெட் ஆட்கள் பெரிய ரவுடிகளை கடக்கும் போது உடலை ரொம்பவும் கூழைக் கும்பிடு போட்டு குறுக்காமல் அதேசமயம் புறங்கையைத் திருப்பி உள்ளங்கையைக் காட்டி

வெகுமரியாதையாக ஒரு வணக்கம் வைப்பார்கள். எங்கள் சண்டப்பிரசண்டனுக்கு நான் பிறந்தநாள் வாழ்த்துகளை அப்படியே சொல்ல விரும்புகிறேன்.


'ராஜூ.....செரீங்....ராஜூ!'



Saturday, 14 September 2024

ரமணர்


என் அறையில் 

நான் மட்டும் வசித்து வந்தேன்

நான் என்னோடு  

என்னைக் குறித்துப் பேசி வந்தேன்

ரமணரின் படம் ஒன்று

எனக்குப் பரிசாகக் கிடைத்தது 

என் அறையில்

நானும் ரமணரும் வாழ்ந்து வந்தோம்

நான் ரமணருடன்

என்னைக் குறித்துப் பேசி வந்தேன்

சில நாட்களுக்குப்பிறகு

என் அறையிலிருந்து 

நான் வெளியேற வேண்டும் 

என்று ரமணர் விரும்பினார்

அது என் அறை என்பதால் 

நான் வெளியேற மறுத்தேன்

எனவே 

ரமணர் வெளியேறினார்

என் அறையில் 

ரமணரின் படங்களுடன் 

நான் மட்டும் வாழ்ந்து வருகிறேன்.

#ஜான்சுந்தர்

Wednesday, 4 September 2024

விடுதிமனிதன்

விடுதியிலிருந்து 

விடுதிக்கு மாறி

விடுதிகளிலேயே 

வாழ்ந்து வந்த

விடுதி மனிதனின் பயணம்

உள்ளூர் விடுதியில் 

துவங்கும் 

வழியூர் விடுதியில் 

தூங்கும் 

விடுதிக்கும் விடுதிக்கும் 

இடையில் கிடந்துருளும் 

அவனது நாட்கள் 

இப்படியே

சன்னலில் இருண்டு 

கதவுகளில் விடிய

விடுதி மனிதன் 

விடுதிகள் அலுத்துப்போய்

வீடு தேடிப்போனான்.

வீட்டை வைத்திருந்தோர்

சேர்ந்து வசிக்க 

பெண் வேண்டும் என்றார்கள்.

பெண்ணை வளர்த்து வந்தோர் 

சேர்ந்து வசிக்க 

வீடு வேண்டும் என்றார்கள்.

விடுதியறைகளே 

வாழ்வதற்கும் 

தேவைப்பட்டால் 

சாவதற்கும் கூட

அனுமதிக்கின்றன 

என்கிறான் விடுதி மனிதன்.

மேலுமவன் 

விடுதியில் பிறந்தவன் 

விடுதியில் தானே 

இறக்க வேண்டும் 

என்று வினவுகிறான்

புகைப்படங்களில் 

விடுதிப் பணியாளர்கள் 

அவனது உறவின் முறையினராக

முறுவலிக்கின்றனர்.


#ஜான்சுந்தர்

Tuesday, 3 September 2024

மகள்

தன்னைத்தானே

தட்டிக் கொண்டு உறங்கும் 

சிறுமியைப் பார்த்து 

உச்சு கொட்டுகிறார்கள்.

தலையில் இடி விழுந்த மறுநாளே 

மயிரையள்ளிக் கொண்டையிட்டு

செங்கல் சுமக்கப் போனவளுக்கு 

இது வியப்பில்லை

பெற்றதும் உடன்பிறந்த 

மற்றதும் உதவுமென்று

தலையைச் சொறிந்து நிற்காமல் 

தன்னைத்தானே 

சவுக்கால் விளாசிக் கொண்டு

தட்டாமாலை சுற்றுகிற 

மண்ணுருண்டையின் மகளல்லவா


#ஜான்சுந்தர்

Thursday, 29 August 2024

மடி

 

பொய்யாக தலையை வைத்துப் படுக்கிறாள்

குழந்தையின் மடியில் 

மெய்யாகவே அவளைத் தாலாட்டுகிறது குழந்தை

சின்னஞ்சிறு மடியில் 

அன்னையின் தலை நிரம்பி

தரையில் வழிகிறது கூந்தல்

அதை வாரி வாரி 

மடியிலிட்டுக்கொள்கிறது குழந்தை 

பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு

இடப்புறம் கிடந்த மீதவுடலும்

மயிரெனச் சுருண்டு மடியேறுகிறது.


#ஜான்சுந்தர்

Tuesday, 27 August 2024

வாட்ஸப்பில் இரு பறவைகள்

 


🐦🐦


உங்கள் நண்பர்தான்.

உங்களது ராஜபோதைக்கு

செவிகளைக் கழட்டிக் கொடுப்பவர்தான்.

நீங்கள் காதலிக்கும் 

இரண்டே ஆண்களில் ஒருவர்தான்.

இப்போது 

அறைக்கதவின் முன் நிற்கிறார். 

உங்களுக்கும் தெரியும்.

நிற்கட்டும் என்கிறீர்கள்.

காத்திருப்பவரை 

குரூரமாய் பார்த்துவிட்டு 

பாசாங்கு செய்கிறீர்கள்.


உங்கள் காதலிதான்.

அவளது சிறு கேவலுக்குத்தான்

நான்கு முறை 

மணிக்கட்டைக் கீறி 

சமன் செய்தீர்கள்.

அவள் திசையிலிருந்து 

ஒரு சொல் விடியக் காத்திருந்தீர்கள்.

இரண்டு நாட்களாக 

முன்னறையிலேயே நிற்கிறாள்.


உறைந்து நிற்கும் 

அவ்விரு பறவைகளையும்

பார்க்க முடியவில்லை.

நீங்கள் மனது வைத்தால்

பொன்னீலச்சிறகுகள் விரியும்.


#ஜான்சுந்தர்

Tuesday, 28 May 2024

இஸ்திரிக்காரன்

கொந்தளிக்கிற அலைகளை

குறி வைத்து

இல்லாமலாக்குகிறது இரும்புக்கப்பல்


கடந்து போகும் வரை 

பதுங்கி இருக்கச்சொல்கிறது

ஒரு கருணைக்கரம்


ஒரு கையால் அதிகாரத்தை நகர்த்திக்கொண்டே

இன்னொரு கையால்

நைஸ் பண்ணுகிறான் இஸ்திரிக்காரன்.

மேய்ப்பன்

ஒற்றைக்காலுள்ள 
ஒட்டகம் 
என் தையல் இயந்திரம் 

நானும் 
என் ஒட்டகமும் 
இந்தப் பாலையை மூடும் 
கூடாரத்தை நெய்து வருகிறோம்

எங்கள் இரவுக்கு 
ஆயிரத்து நானூறு 
ஒட்டகங்களின் நீளம் 

பாலைக்கும் 
பாலைக்கும் இடையில்
நிறுத்தங்கள் கிடையாது

பனிக்காலத்தில் 
சிசுக்களை பொதிந்து வைக்கும்
துவாலையை 
தைத்துக் கொண்டிருந்தேன் 

அக்காலங்களில் 
எனக்கான துவாலை ஒன்றை 
ஆயத்தம் செய்ய 
நாளாந்தமும் வாஞ்சித்திருந்தேன்

நனைந்த பாறைத்துகளை 
உடைந்த சீசாவுக்குள் வைத்திருக்கிறேன் 
தற்காலம் அதில் படிந்து வருகிற 
பாசி வளர்ந்து 
செழித்துப் பூஞ்சோலையானதும் சீசாவினுள் இறங்கி 
சுகமாகப் படுத்து உறங்குவேன்‌.


 (திருப்பூர் தையற்கலைஞர்களுக்கு)

Sunday, 8 May 2022

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெற்றிலை பாக்கும், எச்சில் துப்பும் பித்தளைக் கோளாம்பியுமாகத் தெரிவாள். அலுமினிய டப்பியில் சுண்ணாம்பு. சிவந்து வருகையில் புகையிலையில் ஒரு கிள்ளு. புங்கை மர நிழலில் கிழவியும் கிழவியின் நிழலில் கோழிக்குஞ்சுகளும் திரிந்து கொண்டிருந்தது பழையகதை. இப்போது கூடவே ஒரு ஆடும் சேர்ந்து கொண்டதே.. அது அந்தோணி. கிழவி படுகிற பாட்டை, பார்த்துப் பொறுக்காமல் பாதிரியார் இந்தக் குட்டியை வாங்கிக் கொடுத்தார். தின்று தீர்க்கிற தானங்களை விடவும் ’வெச்சுப்பொழைக்க’ உதவுகிற தானங்கள் மேலானவை. தெரஸாக்கிழவிக்கு இந்த ஒத்தாசை பெரிய பலம். உயிரோடு கூடவே உலவுகிற ஒரு ஆள். அந்தோணியின் கழுத்தில் தொங்கும் ஜெபமாலை போலவே நெல்லி மரத்தின் அடித்தண்டில் அந்தோணி அசை போடுவதற்கு குலை தொங்கும். பெட்டையின் கூடுதல் மேவுக்கு பெட்டிக்கடைகளில் அட்டைப் பெட்டி வைத்து அதில் சேகரமாகும் வாழைப்பழத்தோல்களை  சுமந்து வருவாள்.  கிழவி வெற்றிலையை மெல்லும்போது பக்கத்திலேயே முன்னங்காலை நீட்டி மடக்கிப் படுத்தபடி எதையாவது அரைத்துக் கொண்டிருக்கும். தூரத்திலிருந்து பார்த்தால் இரண்டு கிழவிகள் வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருப்பதாக தெரியும். அந்தோணி ’அம்மே’ என்று குரல் கொடுத்தால் தண்டவாளத்துக்கு அந்தப்புறமிருந்து கிழவி ’வருகிறேன் மோளே’ என்பாள் மெல்லிய குரலில். அந்தோணி கறுப்பும் வெளுப்புமாயிருந்தது. ஒரு பக்கக் கண்ணை மூடிய கறுப்பை மீறி, கனிந்த வெயில் நிறத்தில் உண்டியல் கண்கள். வாடித் தொங்கும் இலைகளாக  நரம்போடும் காதுகள். அந்தோணியை காலையில் அவிழ்த்து விட்டால் மாலையில் தானே வீடு வந்து சேர்ந்துவிடும். அதன் போக்கும் வரவும் தண்டவாளத்தின் மீது என்பதை நினைத்து கிழவி திகிலாவாள். ’வழியிலிருந்தால் இறங்கிவிடு மகளே’கிழவி  தனக்குத்தானே முனகிக் கொள்வாள். அந்தோணி ரயில் எழுப்பும் ஊளைச் சத்ததிற்கு அனிச்சையாக இறங்கி விடும். சத்தமில்லாமல் கடக்கிற கூட்ஸ் வண்டிகளைப் பார்த்தால் கிழவியின் நெஞ்சு கிடுகிடுக்கும்.


 


இத்துணூண்டு இடம் கிடைத்தாலும் ஏதாவது ஒரு நாத்தையோ விதையையோ ஊன்றி வைத்துவிடுவதுதான் தெரஸாக் கிழவியின் வழக்கம். புறம்போக்கு இடத்தில் குடியிருப்பதும், எப்போது வேண்டுமானாலும் ரயில்வேக்காரன் காலி செய்யச்சொல்லி விடுவான் என்பதும் தெரியும். அப்படிச்சொல்லும்போது சனங்களோடு சனங்களாக நகர்ந்து போகவேண்டியதுதான். செடி வைப்பதையோ கொடியூன்றிக் கம்பு நட்டு வைப்பதையோ மாற்றிக்கொள்ளவேயில்லை. ரயிலோடும் தண்டவாள மேட்டிலிருந்து கீழே இறங்கும் பள்ளத்தில் கழிவு நீர் ஓடும் கால்வாய். அதையொட்டி ஓடாமல் நிற்கிற ரயில்பெட்டிகள் மாதிரி வரிசை வீடுகள். அதிலொன்று தெரஸாவினுடையது. அவளுக்கு மலைத்தொடருக்கும் சிற்றோடைக்கும் அடுத்து குடியிருப்பது போல ஒரு மனவிரிப்பு. மேட்டுக்கும் வீட்டுக்குமான இடைவெளியை அவரை, பாகல், பசலை என்று பச்சையைப் பரப்பி வைத்திருந்தாள். சாக்கடையின் ஈரத்துக்குச் செழித்த கொடிகள் அடர்த்தியாகப் படர்ந்திருக்க, வீட்டுப்பொடுசுகள் விளையாடியபடியே வாயில் அதக்கிக் கொள்ள அரைநெல்லியோ,  பப்பாளியோ வாசலில் உதிர்ந்து கிடக்கும். மூன்று அறைகள் கொண்ட ஓட்டு வீடு. மூன்று மக்களுக்கும் ஒவ்வொரு அறை. பெரிய மகளுக்கு ஐந்து, மகன் பெற்றது இரண்டு, சின்னவளுடையது இரணடு. இப்படி சிட்டும் சில்லையுமான உருப்படிகள் மட்டுமே ஒன்பது. பேத்திமார் பெற்றது,மற்றது எல்லாம்  சேர்த்தால் கிழவியின் மந்தையில் பதினெட்டு, இருபது உருப்படிகள். மகனின் அறைக்குள் கிழவியின் பெட்டி. சந்துக்குள் படுக்கை. மழை வந்தால் கிழவியில் காலடியில் அந்தோணி. சாக்குப்பைக்குள் அந்தோணியை நுழைத்து விட்டால் போர்த்த வேண்டியதில்லை. தலையை மட்டும் உயர்த்தி அசைபோட்டபடி இருக்கும். கிழவி எப்போதாவது உதிர்க்கும் ஒற்றைச் சொல்லுக்கு குரல் கொடுக்கும். கிழவிக்கும் ஆட்டுக்குமிடையில் சின்னவளின் மகன் வந்து சுருண்டுகொள்வான்.


கிழவிக்கு இப்போது சுருட்டு தேவைப்படுகிறது. அடிக்கிற காற்றைப் பார்த்தால்  நிச்சயமாக மழை வரும்.  இதற்கு முன்பு மழை எப்போது வந்தது என்பதைவிட வீட்டுக்குள் எவ்வளவு வெள்ளம் வந்தது என்பதுதான் யோசனை. சுவற்றில் தண்ணீர் தேங்கியிருந்த கறை நீண்டிருந்தது. பழைய கறைகளைக் காட்டிலும் உயரம். நின்று பார்த்தால் வயிறு மட்டம். அந்த மழைக்கு அந்தோணி இருந்திருந்தால் கஷ்டம்தான். கடவுளே!  ஏன் இப்படி ஒரு நினைப்பு வந்தது? நினைப்பின் மீதே இடி விழுந்தது போல மழை வந்தே விட்டது. கூரையில் தடதடவென்று சத்தம் தொடங்கி, பெருத்து தோணி இடுக்கில் தண்ணீர் ஒழுகியது. கிழவி வெளியே போய் ஆட்டை அவிழ்த்துக் கொண்டு வந்தாள். எவ்வளவு அறிவான ஜீவன்! அவ்வளவு இருட்டிலும் பையனை மிதிக்காமல் ஒதுங்கி நிற்கிறது. ’கொஞ்ச நேரத்தில் ஓய்ந்து விடும்’ என்று பார்த்தால் அதிகமாகிறதே? கிழவி தயங்கித் தயங்கி மகன் வீட்டின் படலைத்தட்டினாள். குழந்தை எழுந்து உட்கார்ந்து விட்டான். சொல்லி வைத்தாற் போல சிறுசுகள் ஒவ்வொன்றாய் அழத்துவங்க, பெண்களின் கூச்சலும் சேர்ந்து இழவு வீட்டு ஒப்பாரி போல கேட்டது.


                              நின்று பெய்கிற மழை. மண்ணை நனைத்து, சேறாக்கி, அலசி, அமிழ்த்தி, பள்ளங்களில் சேர்ந்து மெதுவாய்ப் பெருகி, கைநீட்டி, மற்ற பள்ளங்களோடு கோர்த்துக் கொண்டு பெரிதாக நகருகிற விளையாட்டு. நல்ல ஆசிர்வாதமான பெருந்துளிகள். இதைத்  தாங்குகிற மாதிரி வலுவுள்ள வீடு இல்லாததுதான் குறை. மேட்டிலிருந்து இறங்குகிற வேகத்துக்கு சீக்கிரமாய் வெள்ளம் சேர்ந்து விட்டது. வீட்டுக்கு உள்ளே புகுந்த தண்ணீர் மரஅலமாரிக்குள் போவதும் வருவதுமாக இருக்கிறது. நாதாங்கியை சரிசெய்து வைக்கச்சொல்லி ஒருபாடு புலம்பியும் யாரும் காது கொடுக்கவில்லை. ஒழுகுமிடங்களில் வைத்த பாத்திரங்கள் மிதந்து வெளியேறுவதை பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை. குஞ்சுக் குளுவான்களை எல்லாம் குறுக்குச்சுவர்களின் உச்சியிலும், அலமாரிகளின் மேலும் ஏற்றி விட்டு பாத்திரங்களில் கோரிக்கோரி ஊற்றினாலும் தண்ணீர் குறையாது. அதற்காக சும்மா இருக்க முடியுமா? உடலில்  நல்ல முறுக்கத்தோடிருந்த பேரன் வர்கீஸும் கிழவியின் மகன் ஜோசப்பும் தண்ணீரை வெளியேற்றுவதற்கான  முயற்சியில் இருந்தார்கள்.பெரியவளின் மருமகன் ஒத்தாசையாக கூட நின்றான். ஒன்றும் நடக்காது.  கிழவி ஆட்டை மாரோடு சேர்த்துக் கொண்டு அலமாரியோடு ஒண்டிக்கொண்டாள். தலைக்குமேல் பொட்டுப்பொட்டாய் தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கிறது. இடுப்பு உயரத்திற்கு ஏறிவிடும். மழைச்சத்தத்தினூடே பெருத்த அலறலோடு ஒரு ரயில் வண்டி கடந்து போனது. பற்கள் கிடுகிடுவென அடித்துக் கொள்ள, அந்தோணி ஃபிர்ர்ர் ஃபிர்ரென்று இரண்டுமுறை  முகத்துக்கு நேராய் தும்மியது. செடி கொடிகள் என்னவாயிற்றோ? நினைக்கும்போதே அடிவயிறு உள்ளிழுத்து வலியெழும்புகிறது கிழவிக்கு.


அந்தக் காலத்திலேயே தெரஸாவுக்கு விவரம் போதாது என்பார்கள். கணவர் பவுலோஸும் அதையேதான் சொல்வார். தெரஸா யாரோடும் பெரிதாக பேசுவதில்லை. ஏதாவது கேட்டால் ஒன்றிரண்டு வார்த்தைகள்தான். கணவனுக்கு எது வேண்டுமென்று தெரியும். அவர் கேட்குமுன்பே கட்டங்காப்பியோ, மரவள்ளிக் கிழங்கோ, சுடுகஞ்சியோ தயாராக இருக்கும். எப்படித்தான் தெரிந்து கொள்வாளோ ஆச்சரியம்தான். ஆனாலும் அக்கம்பக்கத்து மனிதர்களிடம் பேச்சு வளர்க்காத ஒரு பொம்பளை இருப்பாளா? எப்போதும் செடிகளும், துணிகளும் மட்டுமே போதுமா ஒருத்திக்கு? பிள்ளைகளிடம் கூட பெரிதாக பேசாத ஒருத்தி! ஓராயிரம் தடவை கேட்டாலும் பதில் கிடைக்காது. கடைசியில் அவர் புரிந்து கொண்டார் தெரஸா ஒரு ’மிண்டாப்பிராணி’ தெரஸாவுக்கு ஆணும் பெண்ணுமாய் இரண்டைத்தவிர இப்போது வயிற்றில் ஒன்று. ஏழுமாதம். மிண்டாப்பிராணியையும் குட்டிகளையும் கூட்டிக் கொண்டு கேரளத்திலிருந்து கோயமுத்தூருக்கு வந்தார் பவுலோஸ். இரண்டொரு மாதங்கள் வேலைபார்த்துக் கொண்டே வயிற்றுவலிக்கு பெரியாஸ்பத்திரியில் மருத்துவம் பார்த்துவிட்டு ஊருக்குத்திரும்பி விடலாம் என்பது திட்டம். கடைச்சோறு பழுதான வயிற்றுக்கு ஆகாது. பிள்ளைகளை அணைத்துக் கொண்டு பிள்ளைத்தாய்ச்சி அழுவதைப் பார்க்க மனமில்லையோ என்னவோ இரண்டாவது தடவை ஆஸ்பத்திரிக்குள் போன மனிதன் வெளியே வந்த பிறகு தெரஸாவைப் பார்க்கவுமில்லை. பேசவுமில்லை.  உலுக்கி உலுக்கிப்பார்த்து ஓய்ந்து போனாள் தெரஸா. கூடிவிட்ட சனங்கள் அங்கலாய்ப்பாய் விசாரிக்க அடிவயிறு சுருண்டு வலியெடுத்தது.


                    காலையில் அரசுப் பள்ளியில் தங்கிக்கொள்ள அனுமதிக்கிறார்கள் என்று ரேடியோவில் சொன்னார்களாம். மயிலாத்தாள் வந்து சொல்லிவிட்டுப்போனாள்.  விடிய விடிய பெய்து இன்னும் ஓயாத மழையில் முன்னறையின் கூரை ஒரு பக்கச்சுவரோடு சரிந்து விழுந்து விட்டது. போனால் போய்த் தொலைகிறது. பிள்ளைகள் தப்பித்ததே புண்ணியம். ஆரம்பப் பாட சாலையின் கதவைத் திறந்து விட்டிருந்தார்கள். துணி மூட்டைகளும். ஐந்தாறு பாத்திரங்களுமாக சனங்கள் கிடைத்த இடத்தில் ஒண்டிக்கொண்டார்கள். சின்னவளின் மகன்  மற்ற யாரையும் உள்ளே விடாமல் தடுத்துக் கொண்டிருந்தான். அவனுடைய வகுப்பாம். யாரோ போய் வாட்சுமேனிடம் முறையிட, அவன் வந்து பெரிய மனுசத் தோரணையில்  எதையோ துவங்க, கிழவி வகுப்பறையின் மூலைகளைக் காட்டினாள். அதற்குள் பெஞ்சுகளை ஓரங்கட்டிவைத்துவிட்டு நான்கைந்து குடும்பங்கள் பாயை விரித்து முடங்கியிருந்தன. எல்லோரையும் பார்த்து வெளியேறத் திரும்பியவனின் பார்வையில் அந்தோணி பட்டுவிட்டது. அதுவும் மூத்திரம் பெய்தவாறு. சுற்றிலும் பத்துப்பனிரெண்டு புழுக்கைகள். வெளியே கட்டச்சொல்லிவிட்டுப் போனான்.  தெரஸாக் கிழவிக்கு முகம் ஊதிக் கொண்டது. இப்படி கட்டன்ரைட்டாகச் சொல்லிவிட்டுப் போகிறானே? ஊற்றுகிற மழையில் சினையாக இருக்கிற  மகளை எங்கே போய்க் கட்டுவேன். புலம்பியபடியே சுற்றி முற்றிப் பார்த்துவிட்டு கீழே மைதானத்தைத்தாண்டி அவனுடைய கூண்டுக்கு அருகிலிருந்த அசோக மரத்திலேயே கட்டிவிட்டு வந்தாள்.”அம்மே அம்மே” என்று சிணுங்கிக் கொண்டேயிருந்தது அந்தோணி. மரத்தின் அடியில் என்றாலும் ஈரத்தில்தான் நிற்க வேண்டும். மற்ற இடங்களுக்கு இதுதான் கொஞ்சம் பரவாயில்லையாக இருந்தது. ’கொஞ்சம் பொறுத்துக் கொள் மகளே நாளை வெயில் வந்துவிடும்’  


டெம்போவில மஞ்சளாய் சோறு கொண்டு வந்தார்கள். ஆளாளுக்குத் தட்டை தூக்கிக் கொண்டு ஓடியதை கிழவி அங்கலாய்ப்பாக பார்த்தாள். அவள் வீட்டுக் குஞ்சுகளும்தான். எங்கே சின்னவளின் மகனைக் காணவில்லை? ஏதாவது தின்னக் கொடுத்தால் மற்றவர்களை அரட்டி, மிரட்டி தள்ளிவிட்டு முந்தி வருகிறவன் அவன்தான். காணோமே! போய்ப் பார்த்தால் குழந்தை சுருண்டிருந்தது. சின்னவள் கழுத்தில் புறங்கையை வைத்துக் காட்டி உடம்பு சுடுகிறது என்றாள். மகளை சோறு வாங்க அனுப்பி விட்டு குழந்தையின் அருகில் உட்கார்ந்தாள். தலையைக் கோதிவிடும்போது கண்ணீர் திரண்டு வந்தது. பையன் சூட்டுக்கு அனத்தத் துவங்கியிருந்தான். சோறு வாங்கிக் கொண்டு வந்த பிள்ளைகள் அப்படியே உட்கார்ந்து அள்ளிப் போட்டுக் கொண்டன. அந்தோணியின் குரல் தூரத்தில் கேட்கிறது. ”அம்மே அம்மே”  மகள் ஒரு கையில் சோறும் மறு கையில் தைலப் புட்டியுமாக வந்தாள். கிழவி தைலத்தை வாங்கி பையன் முதுகு முழுவதும் சூடுபறக்கத்தேய்த்து விட்டு கைகளை முகர்ந்து கொண்டாள். ரெண்டாங்கிளாஸிலிருந்து பெருத்த கூச்சல் வந்தது. திபுதிபுவென ஒரு கூட்டம் இவர்கள் இருந்த வகுப்பறைக்குள் நுழைந்தது. அங்கே பாம்பு வந்து விட்டது என்றார்கள். கிழவி பேரனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.


இரவு முழுவதும் மழை விடாது பெய்து கொண்டிருந்தது. பத்து மணிக்கு மேலாகியும் குழந்தைகள் பள்ளி வராந்தாவில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.  ரயில்பாதைப் பள்ளத்தில் மின்சாரம் கிடையாது. இருட்டும் வரை விளையாடிக் கொண்டிருந்துவிட்டு ஆறேழு மணியானால் அடங்கிவிடும் பிள்ளைகள், இவ்வளவு வெளிச்சத்தையும் விஸ்தாரமான இடத்தையும் பார்த்ததும் உறசாகமாக விளையாடுகின்றன. பள்ளத்தில் கழிவறைகளும் கிடையாது. கடைக்கோடி முள்ளுக்காட்டின் மறைவில் போகவேண்டியதுதான். ரயில் வண்டிகள் கடக்கும்போதெல்லாம் பெண்கள் எழுந்து நிற்க வேண்டியிருக்கும். ஆண்களுக்கு என்ன கவலை? ’மயிரே போச்சுடா மாரப்பா’ தான். இங்கே அத்தனை கக்கூஸுகளைக் கட்டி விட்டிருக்கிறார்கள். தொட்டி நிறைய தண்ணீர்! வகுப்பறைகளுக்குள்ளே செங்கற்களைக் கூட்டி அடுப்பு மூட்டி கஞ்சி காய்ச்சிக் கொள்ளவும் முடிகிறது. ஏதோவொரு நிம்மதியில் வகுப்பறைகளின் வாசல்களில் பெண்களும் ஆண்களுமாய் குத்தவைத்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அங்கங்கே தாயக்கட்டை உருளுகிறது. சாக்பீஸ் துண்டுகளில் வரைந்த ஆடு புலியாட்டம், பரமபதம் எல்லாம் உண்டு. பாக்கெட் ரேடியோவெல்லாம் வைத்திருக்கிறவன் காசு புரளுகிறவனாயிருக்கும். ”அம்மே”  அந்தோணி கத்திக் கொண்டே இருக்கிறது. நனைந்தபடியே கஞ்சியை கொண்டு போய் வைத்துவிட்டு வந்த கிழவி மைதானத்து ஓரத்திலிருந்து எடுத்து வந்திருந்த உருளைக்கல்லால் வெறும்பாக்கை தரையில் வைத்துப் பொடித்து அள்ளி வாயில் போட்டுக் கொண்டாள்.


மறு நாளும் பையனுக்கு உடம்பு சுட்டது. சட்டையை அவிழ்த்துப் பார்த்தால் முதுகெல்லாம் பொரிப்பொரியாக சிவந்து எழும்பியிருந்தது. இந்த மழையில் எங்கே கூட்டிப் போவது. ’இது அம்மை மாதிரித் தெரிகிறதே தேவமாதாவே என்ன செய்வேன்?’ மகள் அழுவதைப் பார்க்க முடியவில்லை. கிழவி மெல்ல எழுந்து கம்பி வழியே பார்த்தாள். இப்படி இரண்டு நாட்களாக தொடர்ந்து அந்தோணிக்குப் பக்கத்தில் கூட போக முடியாமல் இருப்பதை நினைத்து பெருமூச்சு விட்டாள். வாட்சுமேன் அந்தோணியை மரத்திலிருந்து அவிழ்த்து தன்னுடைய கூண்டருகே கட்டிப்போட்டிருந்தார். பக்கத்தில் ஒரு அலுமினியத்தட்டு.  நல்லாயிருக்கட்டும். பையன் அனத்திக்கொண்டே இருக்கிறான். இடையிடையே எச்சிலைக்கூட்டித் துப்புகிறான். வாய்க்கசந்து வரும் போலிருக்கிறது. கிழித்து வைத்திருந்த சேலைத்துண்டில் தண்ணீரை நனைத்து நெற்றியில் போட்டால் இரண்டே நிமிடங்களில் காய்ந்து விடுகிறது. தைலப்புட்டி தீர்ந்து விட்டது. காலையில் இரண்டு இட்லித்துண்டுகளை சர்க்கரைத் தொட்டு விழுங்க வைப்பதற்குள் வாந்தி. பொரிப்பொரியாக இருந்ததெல்லாம் தீக்குச்சித்தலைகளாக நீண்டு வெளியே வந்திருந்தது. அம்மையேதான். ரங்கநாயகி வந்து பார்த்துவிட்டு வேப்பிலையை அரைத்து கொடுக்கச்சொன்னாள். ரங்கநாயகிக்கு கொஞ்சம் கைவைத்தியம் தெரியும்.  எதையோ கொடுத்தனுப்புகிறேன் என்று சின்னவளை கூடவே கூட்டிகொண்டு போனாள். மழையில் இறங்கிப் போனார்கள். கிழவிக்கு பயத்தில் பேதியாகிவிடுவது போல அடிவயிறு சுருண்டு வலித்தது.  துணுக்கு மெழுகு திரியை சுவற்றின் ஓரம் ஏற்றி வைத்து வாய்விட்டுப் புலம்ப ஆரம்பித்துவிட்டாள்.


”என்டெ கர்த்தாவே………… தேவ மாதாவே………………… ரெட்சிக்கணமே……………. என்டெ மக்களெ ரெட்சிக்கணமே……… ஈசோயே…….  நின்டெடத்து…… ஞான் சாம்பத்திகம் ச்சோதிச்சில்லா……… ருஜியுள்ள ஆகாரம் ச்சோதிச்சில்லா…… எங்ஙனெயெங்கிலும்……. ஜீவனோடிருந்நால்… மதியானே….. கர்த்தாவே…பாவப்பட்ட பிஞ்ஞுங்களானே….. ச்செறிய குஞ்ஞுகளானே…..தேவ மாதாவே……..என்டெ மக்களெ… ரெட்சிக்கணமே ……புலம்பித் தீர்த்தாள். ராத்திரி முழுவதும் சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள். திரும்பத்திரும்ப திரும்பத்திரும்ப சலிக்காது சொல்லிக் கொண்டே இருந்தாள். அவளது வலக்கையில் ஜெபமாலை மணிகள் எறும்புகள் ஊர்வது போல சிலுவையை இழுத்துக் கொண்டு ஊர்ந்து புறங்கையில் ஏறி இறங்கியது.


                   அதிசயம்தான்! காலையில் காய்ச்சல் விட்டிருந்தது.  பையன் எழுந்து தைலப்புட்டியை தரையில் சுழற்றி சுழற்றி விளையாடிக் கொண்டிருந்தான். இனி பயமில்லை. இளநீரும் பனங்கற்கண்டுமாக கொடுத்து உடம்புச்சூட்டை இறக்கிவிட்டு அம்மைக்குத் வேப்பிலைத்தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம். மழை ஓய்ந்திருந்தது. கருக்கல் இன்னும் முழுதாய் வெளுத்திருக்கவில்லை. பையனுக்கு பாலை ஆற்றிக் கொடுத்த சின்ன மகள் இன்னொரு தம்ளரைத் தூக்கிக் கொண்டு படுத்திருந்த கிழவியை நோக்கி நகர்ந்தாள். அசைவில்லாது  இருந்தவளை உலுக்கினாள். திடுக்கிடலாக எழுந்த கிழவிக்கு தொண்டை காய்ந்து போய் நெஞ்சுக்குள் ஏதோ நெருடலாய் உருள்கிறது. சில்லிட்டிருந்த கைகளில் தம்ளரை ஏந்திக்கொண்டு உலர்ந்த உதடுகளிடம் கொண்டு செல்லுகையில் வாட்சுமேன்  ஓட்டமும் நடையுமாக வந்தார்.


”தெர்ஸாம்மா அந்தோணி போயிருச்சு”


கிழவி விக்கித்துப்போனாள். அடிவயிற்றிலிருந்து சுருண்ட வலி துக்கமாக பீறிட்டுக் கிளம்ப  பள்ளிக்கட்டிடம் அதிர குரலெழுப்பினாள்.


“ஈ…………மோளே……அந்தோணீ……… ஈ…………………”


வாட்சுமேன் கூண்டருகில் காகங்கள் கரைந்தபடி இருந்தன. திறந்த கண்களில் ஈக்கள் மொய்க்க உப்பிப்பெருத்த வயிறோடு சரிந்து கிடந்தது அந்தோணி. வாட்சுமேன் அவரது குடையை அந்தோணிக்கு அருகில் விரித்து வைத்திருந்தார். கிழவியின் வயிறு தீயாய் பற்றிக் கொண்டு எரிய எதையெதையோ நினைத்துக் கொண்டு அழுதாள்.  எவ்வளவு சுயநலம் எனக்கு? பேரனுக்கு உடம்பு சரியில்லாமல் போனதும் என் ரத்தம் மட்டும் முக்கியமாக பட்டுவிட்டதா? அந்தோணியைப் பற்றிய நினைவே இல்லாமல் போனதா? கடவுளே! என்னுடைய பிரார்த்தனையில் அந்தோணியை சேர்க்கவில்லையோ?


 ”அய்யோ… மோளே….தெய்வம் சதிச்சல்லோ…மோளே… நீ என்டெ …மோளில்லியோ….. அந்தோணீ……..”


மனதுக்குள் ’மகளே தண்டவாளத்திலிருந்து இறங்கிவிடு’என்று நினைத்துக் கொண்டாலே இறங்கி விடுகிற அந்தோணிக்கு அம்மாவை விட்டுவிட்டுப் போகிறோமே என்கிற நினைப்பே வரவில்லையா?


அல்லது அம்மாவின் வேதனையைத் தீர்த்துவைக்க, தானே பலியாகி விட்டதா?


“ நீ.. வெச்ச கஞ்சியத்தான் குடிச்சது.. என்னன்னே தெரியலையே பூச்சி கீச்சி தொட்டிருக்குமோ?”


கவிழ்ந்த தலையை நிமிர்த்தாமல் ஆட்டையே வெறித்துக்கொண்டு கேட்டார் வாட்சுமேன்.


சின்னவள் வந்து கிழவியைக் கட்டிக் கொண்டு ஒப்பாரி வைத்தாள்.


வாட்சுமேன் கொஞ்சப் பணத்தை கிழவியின்  மகன் கையில் வைத்து திணித்தபடி ”ஆனது ஆயிப்போச்சு… கையில வெச்சுக்க… போயி….குதிரை வண்டி எதையாவது கொண்டுவந்து எடுக்கற வழியப் பாரு ஜோசை”என்றார்.


அந்தோணியை உலுக்கி உலுக்கிப் பார்த்தாள் கிழவி. உப்பிய வயிற்றை தொட்டுத்தொட்டு அலறினாள்.


”அய்யோ குஞ்ஞுகளே…. என்டெ குஞ்ஞுகளே”


கிழவியின் மகன் சோர்வாய் நடந்து வெளியேறிப் போனான். அழுதுகொண்டிருந்த கிழவியின் சின்னமகளை தொட்டு ”அம்மாவ கூட்டிக்கிட்டு போம்மா.. ஒங்கண்ணன் வந்தா மேக்கொண்டு ஆற காரியத்த நாங்க பாத்துக்கறோம். அம்மாவ கூட்டிகிட்டு போ…”


கிழவியை  மகள் வற்புறுத்தலாக கூட்டிக் கொண்டு போனாள். அவர்கள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த வாட்சுமேன் கூண்டுக்குள்ளிருந்த பழைய செய்திதாள்களை எடுத்துக் கொண்டுவந்தார். கூண்டுக்கு பின்பக்கமாக போய் கீழே சிதறிக்கிடந்த  மஞ்சள் பருக்கைகளை மண்ணோடு சேர்த்து அள்ளி அலுமினியத் தட்டில் கிடந்த சோற்றோடு சேர்த்து கொட்டி, தாள்களால் மூடி, மொத்தத்தையும் கொண்டு போய் சாக்கடையில் கொட்டிவிட்டு, தட்டை குழாயில் சுத்தமாய்க் கழுவி கொண்டுவந்து கூண்டுக்குள் கவிழ்த்து வைத்தார். தொங்கிக் கொண்டிருந்த சட்டைப் பையிலிருந்து பீடியைத் துழாவி எடுத்து பற்ற வைத்துக் கொண்டார். ஆழமான மூன்றாவது இழுப்புக்குப் பிறகு அங்கலாய்ப்பாக ஆட்டை பார்த்து ஒரு முறை தலையிலடித்துக் கொண்டார்.


”நாய்க்கும் பூனைக்கும் வெக்கறாப்புலதான சோறு வெச்சேன்….  எனக்கு வெவரந்தெரியலயே? ”


வானம் கருக்கத் துவங்கியது. வாயிற்கதவைத் திறந்து விட்டு குதிரை வண்டிக்குக் காத்திருந்தார். மறுபடியும் மழை பிடித்துக் கொண்டது.  அவரது காக்கிச்சட்டை மெல்லமெல்ல நனைந்து ஈரமேறி கனத்தது.

Monday, 11 April 2022

சக்கரைக் குட்டி

கிழவனை

சாகவிடக்கூடாது

இன்னொரு

கிழவனின் ஜெபமணிகள்

சிலுவையை

மலையேற்றுகின்றன

மருத்துவரும் எங்களோடு

ஆகாசத்தைப் பார்க்கிறார்

'அப்பன் சொரியன்

ஆத்தாள் சடைச்சி

பிள்ளைகள் 

சக்கரைக்குட்டிகள்'

விடுகதை சொல்லி 

வளர்த்த கைகளை

பலாச்சுளைகளோடு

புதைத்தோம்.

சிற்றுயிர்க்கும்

சிறகுடைப் பிராணிகட்குமாய்

கிளைத்தெழுந்தது மதுர மரம்

இப்பவும் 

கிழவன் குழிமேட்டில்

இனித்துக்கிடக்கும்

சக்கரைக் குட்டிகள்.

கடல் வரும்


ஒரு கையில் 

எறும்புப் பொடியும்

மற்றதில் 

அரிசி மாவும் இருக்கிறது


வீட்டு வாசலுக்கு 

கடலை

இழுத்து வருவது பற்றி 

யோசிக்கிறேன்.


என் கூரையில்

பறவையின் 

நிழல் விழலாம்.


யானைக் கூட்டம் 

வீட்டினுள் புகுந்து

வெளியேறலாம்


அடிவாரத்தை 

இதுவரை குனிந்து 

பார்க்காத நீலமலை

என் குடிசையின் மீது 

சரிந்து படுக்கலாம்.


வாசலில் 

முளைத்திருக்கும்

சின்னஞ்சிறு புற்றின்மேல்

எதைத் தூவுகிறேனோ

அதைப் பொறுத்து 

கடல் வரும் நகர்ந்து

Sunday, 6 February 2022

உன்னைப் போலவே

 உன்னைப்போலவே 

குருதியைச் சிந்துகிறாள்

உன்னைப்போலவே

வலியைத் தின்னுகிறாள்

என்னும் பரிதவிப்பிலே

பேணுகிறாய் மகளை

உதிரத்தின் அடர்த்தி 

வியர்வைக்கு இல்லைதான் 

ஏக்கத்திலென்ன பேதம்  

உன்னிரு முலைகளில் 

ஒன்றாகிலும் 

எனக்குரியதில்லையா அம்மா

நனைந்த கண்களை 

வெறித்த பின்

இதயப்பக்கம் இருந்ததை 

மறைத்து

மற்றதைத் திறக்கிறாய்

அடுத்த முறை 

பிறக்கும்போது

பெண் என்கிற பொத்தானை 

கவனமாய் அழுத்துவேன்.




Saturday, 5 February 2022

மூன்று மொழிகளில்


'தேடுங்கள்' என்கிற தலைப்பிலான 

எனது கவிதையை

கன்னடத்தில் மொழிபெயர்த்த காளிமுத்து நல்லதம்பி  

ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஸ்ரீவத்ஸா 

மலையாளத்தில் மொழிபெயர்த்த  ஜெகதி பிரேம்தாஸ்

மூவருக்கும் அன்பும் நன்றியும். 


*


தேடுங்கள்


சுற்றுலா வந்த 

பிள்ளைகளின் சந்தோஷம்

தேவாலயத்தின் உள்ளே 

இரைச்சலானதும்

பிரார்த்தித்துக் கொண்டிருந்தவர்கள் அதட்டினர்

விளையாடுகிறவர்கள் 

வெளியேறுங்கள்

ஜெபிப்பவர்கள் மட்டும் 

உள்ளே இருக்கலாம்

வேண்டுதல் முடித்து 

எழுந்த வாத்தியார்

சுவர் பார்த்து அதிர்ந்தார்

மாதாவின் கைகளில் 

மகன் இல்லை!

- ஜான்சுந்தர்


*


ಪ್ರವಾಸ ಬಂದ ಮಕ್ಕಳ ಖುಶಿ

ದೇವಾಲಯದೊಳಗೆ ಕೇಕೆಯಾಯಿತು 


ಪ್ರಾರ್ಥನೆ ಮಾಡುತ್ತಿದ್ದವರು ಗದರಿಸಿದರು 

ಆಟ ಆಡುವವರು ಹೊರಗೆ ಹೋಗಿ

ಜಪಿಸುವವರು ಮಾತ್ರ ಒಳಗಿರಬಹುದು 


ಬೇಡಿಕೆಗಳು ಮುಗಿಸಿ ಎದ್ದ ಮೇಷ್ಟ್ರು 

ಗೋಡೆ ನೋಡಿ ಘಾಬರಿಯಾದರು

ಮೇರಿ ಮಾತೆಯ ಕೈಯಲ್ಲಿ ಮಗನಿಲ್ಲ !

ತಮಿಳು ಮೂಲ : ಜಾನ್ ಸುಂದರ್ 

ಕನ್ನಡದಲ್ಲಿ : ನಲ್ಲತಂಬಿ



*


#DO_SEARCH


When the joy of children 

out on an excursion

turned into an uproar

inside the church,

the worshippers chided.


"Those who are playing,

get out.

Only those who are praying

may remain inside."


Rising up 

after the prayer was over,

the teacher

looked at the idol

and was startled.

The Son 

was not to be found 

in Mother's hands.

-John Sundar

Translated by: Sri N Srivatsa


*


അന്വേഷിപ്പിൻ


ഉല്ലാസ യാത്രക്ക് വന്ന

കുട്ടികളുടെ സന്തോഷം

ദേവാലയത്തിനുള്ളിൽ

ഇരമ്പലായി


പ്രാർത്ഥിച്ചു കൊണ്ടിരുന്നവർ

ചൊടിച്ചു

കളിക്കുന്നവർ പുറത്തേക്കിറങ്ങുക

ജപിക്കുന്നർക്ക് മാത്രം അകത്തിരിക്കാം


പ്രാർത്ഥന കഴിഞ്ഞ്

അദ്ധ്യാപകൻ

ചുവരിലേക്ക് നോക്കി അതിശയപ്പെട്ടു

മാതാവിന്റെ കൈകളിൽ മകന്നില്ല!!

- ജോൺ സുന്ദർ.

മലയാളത്തിൽ

ജഗതി പ്രേംദാസ്


Sunday, 10 October 2021

முத்தம்





அவ்வளவு பெரிய வானம் திறந்து 

அவ்வளவு சிறிய துளி இறங்கி 

அவ்வளவு சரியாக முகத்தில் விழுவதை

எவ்வளவு பெரிய முத்தம் என்பேன்!


Tuesday, 8 June 2021

அரசவிரலும் குழந்தைக்குரலும்




மாரியம்மன் கோவிலில் கம்பம் சுத்தி ஆடுகிற அரைக்கால்சட்டைப் பையன்கள் நாங்கள். மேளச்சத்தம் எதுவும் கேட்டுவிட்டால்,  கூச்சலிட்டபடியே வீட்டுக்குள்ளிருந்து தெருவுக்கு ஓடி வருகிறவர்கள். சாவு வீடுகளில் நாக்கை மடித்துக் கொண்டு அடவு கட்டும்  நரைமீசைக்கிழவர்களின்   மாணவ மணிகள். ’இளமையில் வறுமை’ குழுவைச் சேர்ந்த எங்களை, இப்படி ’இளமையின் இனிமை’ என்று நினைத்துப்பார்க்க வைப்பதில் ஒலிவடிவாக பெரும்பங்கைச் செலுத்தியவர் அய்யா ’திரையிசை’ அவர்கள்தான். அவர்தான் கல்யாண வீடுகளிலும் கோவில் திருவிழாக்களிலும் கட்டும் கூம்பொலிப் பெருக்கிகள் வழியாகவும்  வானொலிகள் வழியாகவும் சந்தோஷ அணில்களை  எங்கள் தோள்களில் ஏற்றிவிட்டார். அவைகளோ எங்கள் செவிகளுக்குள் குட்டிகளை ஈன்று கொண்டேயிருந்தன. 


 ’மாமே(ன்) ஒரு நா(ள்) மல்லியப்பூ கொடுத்தா(ன்)…. ’

 

இப்படி ஒரு பாட்டு ஓடியது. நாங்கள் அதைக் கொண்டாடினோம். ஏனென்றால்

அந்தப்பாட்டுக்குள் எங்கள் வீட்டுப் பானைகள் இருந்தன. சோற்றுத்தட்டுகள் ஒளித்து வைக்கப் பட்டிருந்தன. நாங்கள்  தாளம் கொட்டி விளையாடும்  தகர டப்பாக்கள் இருந்தன. அந்தப் பாட்டுக்குள் வேடிக்கைப் பார்க்க வெவ்வேறு சித்திரங்கள் இருந்தன. நையாண்டி இருந்தது.  ஒரு நாடகம் இருந்தது. அந்த பாட்டுக்குள்  குரலொன்றும் இருந்தது. அந்தக் குரலுக்கு எங்களைப் போலவே பித்துப் பிடித்திருந்தது. அதுவும் எங்களைப்போலவே அரைக்கால் சட்டையை அண்ணாக் கயிற்றுக்கு ஒப்புக் கொடுத்துவிட்டு,  பின்னந்தலைக்கு ஒரு கையும், இடுப்புக்கு ஒரு கையும் கொடுத்து  டப்பாக்கூத்தாடியது.  அந்தக் குரலுக்கும் எங்கள் குரலில் இருந்தது போலவே பொய்ப்பிசிறு இருந்தது. அந்தப் பைத்தியம் தேங்காய்ப்பூவாகச் சிரித்துக் கொண்டே இருந்தது. காலங்கள் தோறும் அணில்கள் எங்கள் முதுகை வருடிக் கொண்டேயிருந்தன. 

 வேறு ஒரு காலம். மேல் உதடுகளில் மீசை மயிருக்கு மாற்றாக வியர்வை முத்துக்கள் பூத்துக்கொள்கிற பருவம். தேநீர் அருந்துவதாக பேர் பண்ணிக்கொண்டு புகை ருசிக்காக ஒதுங்கியபோது ஓலைக் கொட்டிலின்  மூலையில் 

ஒலிப்பெருக்கிகளின்  கூடுதல் அதிர்வுக்கென கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த மண்பானைக்குள்ளிருந்து  குதிரைகள்  எழுந்து வந்தன. சப்தசுரங்களின் பிடரிப் பொன்னரும்புகள் காற்றில் சிலும்பிப் பறக்க, தேர்க்குடையடியில் அமர்ந்திருந்த  அரூப ராஜகுமாரர்களை நாங்கள் பார்த்தோம். பெருமையிலும், பொறாமையிலும் நாங்கள் அவர்களுக்கு செல்லப் பெயரிட்டோம்.  'மொட்டையும், குண்டனும்!'  

 இருவரிலொருவர் எங்களைப் பார்த்து ’எடுத்து நான் விடவா’என்று கேட்க, ஒப்புக்கொண்டு நாங்கள் தலையசைக்க, அந்தப் பாட்டுக்கு இடையில் ஒரு அதிசயம் நடந்தது. சப்தப் பிக்குவான மொட்டைத் தலையர்  ஒரே ஒரு தடவை உற்சாகமாக ’சபாஷ்’  என்றார். உடனே அத்தனை வயலின்குருவிகளும்  சொல்லிவைத்தது போல


’சபாஷ் சபாஷ் சபாஷ் சபாஷ் - சபசப 

சபாஷ் சபாஷ் சபாஷ் சபாஷ்’ 


என்று அநியாயத்திற்கு கூட்டுக்குரலில் ஒத்துப்பாடின.  நம்பவே முடியாமல் திரும்பத் திரும்ப  வயலின்களைக் கேட்டு உறுதி செய்து கொண்டோம். ஆடுகளைக் கோலேந்தி மேய்க்கிற பையனாக வாத்தியங்களை மேய்க்கும் ராசாவையும், சைக்கிளைத் தள்ளிக் கொண்டு கூடவே நடக்கும் அவரது  நகரத்தோழன் பாலாவையும்  எங்களது பிரதிகளாகவே கண்டோம். ஆர்வமிகுதியில் நாங்களும் முயன்று,


த…. த…. தகிட,   தி…தி… திமித,   கி…கி… கிடத ,


என்று  முக்கித் திணறியபோது  தலையைத் தடவி, “ரொம்பத் திக்குதா?” என்று ஆதரவாக கேட்டார் திருக்குண்டர். தோற்றுப்போன தினவு தீர, அந்தாளின் தொப்பையைக் கட்டிக் கொண்டோம்.  மறுபடியும் சாகசக்காரர்களின் சைக்கிளை எடுத்து குரங்குப்பெடல் போட யத்தனித்து குப்புறவிழுந்தோம். 



தண்ணீர் என்பது ஹைட்ரஜன், ஆக்ஸிஜன்  இரண்டும்  சேர்ந்த நீர்மவடிவம்  என்பதை நினைவில் கொள்ள  ராசய்யாவின் இசையலையும், பாலய்யாவின் குரல்துடுப்பும் சேர்ந்த சித்திரம்தான் அந்த மோகனமுகம் என்று ஒப்புமைப் படுத்திக் கொண்ட தலைமுறையான நாங்கள்,  மனப்பாடமான ’மன்றம் வந்த தென்றலை’  வரிவரியாகச்  சொல்வோம். 



 ‘ சொந்தங்களேயில்லாமல்

  பந்தபாசம் கொள்ளாமல்

  பூவே உன் வாழ்க்கைதான் என்ன? சொல்’


 ’விண்ணோடுதான் உலாவும் 

 வெள்ளி வண்ண நிலாவும் 

 என்னோடு நீ வந்தால் என்ன? வா’ 


’ சொல்’ மூணு தடவைதான். ஆனா, ’வா’ நாலுதடவை தெரியுமா?’ 


சரணமுடிவுகளில் விரவி நிற்கும் அந்த  ’சொல்’லையும் ’வா’ வையும் அவைகளின்  குட்டிகளான எதிரொலிகளையும் எங்கெங்கெல்லாம் தேடியிருக்கிறோம் தெரியுமா? வீடுகளுக்கு சுண்ணம்பூசும் வகுப்புத்தோழன், ஆளும், பொருளும் இல்லாத அறைகளுக்குள்  அவைகளைக் கண்டதாகச் சொன்னான். காலிக்குடங்களினுள்ளேயும், கிணற்றுப்படிகளிலுங்கூட அவற்றைத் தேடியிருக்கிறோம். கிடைக்காத இடங்களில் தளராமல்  நாங்களே  அதை முயற்சிக்கும் போது எங்காவது படுத்திருக்கும் ஒரு நாய்க்குட்டியின் சமநிலையாகிலும் குலையும் என்பது கண்கூடு.   

 

’க, ம, ரி,…’ என்று உச்சந்தலையைக் கீறித் துவங்கும்  ’வேதம் அணுவிலும் ஒரு நாதம்’   போன்ற   சாஸ்திரிய சங்கீத அடிப்படையில் அமைந்த மெட்டுகள் ஒலிக்கும் போதெல்லாம் பயத்தில் வாத்தியார்  கணித சூத்திரத்தை  விளக்கும்போது  முகத்தை வைத்திருப்பது போல வைத்துக் கொண்டிருப்போம். ’ஆயிரம்தான் இருந்தாலும், இவ்வளவுதூரம் ’ஒண்ணா மண்ணா’ பழகிவிட்டு இப்படி நீங்கள் அநியாயம் செய்திருக்கக் கூடாது எங்களுக்கு’ என்று மானசீகமாக அவர்களிடம் கோபித்துக் கொள்வோம். பயமுறுத்தும் ஜதிசுரங்களை அது ஏதோ வேறொரு தேசத்து மொழி என்றுதான் ரொம்ப வருடங்களாக நினைத்துக் கொண்டிருந்தோம். ஆசான்கள் விடாப்பிடியாக ‘கூட்டத்திலே கோயில் புறா’     ’ சங்கீத ஜாதி முல்லை’  என்றெல்லாம் தொடர்ச்சியாக காதுவழிக் கல்வியைப் புகட்டியதால் பிழைத்தோம்.


சில வருடங்களுக்கு முன்பு ஆர்வமுள்ள எல்லோரும் பாடலாம் என்று சொன்ன ‘பாட்டுக்குப் பாட்டு’  நிகழ்ச்சியின் தற்கால வடிவம்தானே smule? பழுப்பேறி விட்ட பழைய நாட்களில் வீட்டையும், நண்பர்களையும் தாண்டினால் எங்களது பாடும் ஏக்கத்தை தீர்த்துக் கொள்ளும்படியான ஒரே வழியும், உச்சலட்சியமும் மெல்லிசைக் குழுக்களில் சேர்வதுதான்! ஒத்திகை பார்க்கும் மும்முரத்தில் முதல் பார்வையிலேயே எங்களை  நிராகரித்துவிடும் அவர்களது அறையை ஏக்கத்தோடு பார்த்தபடி,  பிளேடை சரியாக கையாளத்தெரியாத அரைகுறை ஜேப்படிகள்  இரண்டு பேர், முதுகில் செவ்வரிகளோடு, காவல் நிலையத்துக்குள்  குத்தவைத்துக் கொண்டு,  ஜெகஜ்ஜாலத் திருடர்கள் இருவரின் சாகஸங்களை சிலாகித்துக்கொள்வதைப் போல  நானும் என் நண்பனும் பேசிக்கொள்வோம். அப்போதுமிப்போதும்  எங்களைப் போன்றவர்களின் பேச்சில்  நின்று, நிறைந்து, பொங்கி வழிகிற அந்த இரண்டுபேரும் ஆக்கிரமித்துக் கொண்ட இரவுகள்தான் எத்தனை! பாடல்கள் எத்தனை! பரவசம் எத்தனை! கண்ணீர் எத்தனை!



திருமண வரவேற்பில் மணமக்கள் வாழ்த்துகளை, ஆசிகளை ஏற்றுக் கொள்வதில் கவனமாயிருக்க, துணைப்பெண்ணும்  துணை மாப்பிள்ளையும்  நூல் விட்டுக்கொள்வதை கவனிக்கும் ஒரு கூட்டமுண்டு.  ராஜா வீட்டுக் கல்யாணங்களைப் பொறுத்தவரை   மணமக்களைத்தவிர 

 

தந்திவாத்தியம் – துளைக்கருவி, 

கொட்டுவாத்தியம் – கன கருவி   


இப்படி மொத்த மண்டபமும் இணையிணையாக ஆடிக் கொண்டிருக்கும். இதற்கிடையில் மணமகன் , ’நான்தான் மாப்பிள்ளை!’ என்று சாகசம் நிகழ்த்த வேண்டும். நிகழ்த்துவார் மணமகன் பாலு! இன்ன பாடல் என்றில்லை. எத்தனை வகையாக பட்டியலிடுவது? காதலுக்கு ஒரு குரல், சோகத்துக்கு ஒரு குரல், எழுச்சிக்கு ஒரு குரல், தாபத்துக்கு ஒருகுரல், தெய்வீகத்திற்கு ஒரு குரல், தாலாட்ட ஒரு குரல் , கொண்டாட்டத்திற்கு ஒரு குரல், சீண்டலுக்கு ஒரு குரல் என்று இளையராஜாவின்  பாடகர்களைப் பிரித்து வைத்துக் கேட்கலாம். இரண்டு மூன்று வகைகளுக்கு பொருந்திப்போகிற ஓரிருவர் உண்டுதான். ஆனால் அத்தனை பாவங்களுக்கும் பொருந்துகிற ஒரே குரல் எது? ’பாட்டுத்தலைவன் பாடினால் பாட்டுத்தான்!’  அவர்கள், உடலிரண்டு பாடலொன்றாக பணியாற்றிய கலைஞர்கள்.  என்னுடன் கற்பனையாக ஒரு விளையாட்டுக்கு ஆயத்தமாகிறீர்களா? எனக்கு பள்ளித்தாளாளர் வேடம். சரியா? நீங்கள்தான் இந்த இருவரின் பெற்றோராம்! நம்மை இந்த கதிக்கு ஆளாக்கிய இருவரும் கைகளைக் கட்டிக்கொண்டு அப்பாவிகளாக நிற்கிறார்கள். நான் குற்றப்பட்டியலை வாசிக்கட்டுமா? 


’பார்த்தீர்களா இந்தப் பையன்கள் செய்து வைத்திருக்கும் காரியங்களை? எனக்கு எல்லாவற்றையும் சொல்ல அவகாசமில்லை….


’அட மாப்பிள்ள… சும்மா மொறைக்காதே மச்சான் சொன்னா கேளு’ 

’ஓரங்கா ஸ்ரீ லங்கா கொப்பரைத் தேங்கா’

’ஏ அய்யா சாமீ…. அட நீ ஆளக் காமி ‘

’மாமா ஒம் பொண்ணக் குடு’ 

’நம்ம கடை வீதி கலகலக்கும்’

’அண்ணாத்தே ஆடுறார்’



இதுபோல இந்த இரண்டுபேர் மட்டும் சேர்ந்து போட்ட கும்மாளத்திற்கு அளவேயில்லை. சில நேரங்களில் மைதானத்தில், குறிப்பிட்ட எல்லைக்குள் விளையாடுகிற பிள்ளைகள் போல, 



’சந்தைக்கு வந்த கிளி’’

’மாங்குயிலே’

’மாடத்திலே கன்னி மாடத்திலே’

‘அடுக்கு மல்லிகை…..ஆள் புடிக்குது’

‘சிவகாமி நினைப்பினிலே’

‘மயிலாடும் பாறையில’

 ‘ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா?’


இப்படி இருக்கிறார்கள். பலசமயங்களில்

வீட்டுப்பாடம் செய்துவிட்டு, கைகட்டி உட்கார்ந்திருக்கும் நல்ல பிள்ளைகளாக,


’முத்தாடுதே முத்தாடுதே’

’பேசக் கூடாது’

’பெண்மானே சங்கீதம்’

’மாலை சூடும் வேளை’

’ஓ வசந்தராஜா’

’சந்தனக் காற்றே’


இப்படியும்  நேரத்திற்குத் தகுந்தாற்போல் வேஷம் போடுவதில் இருவரும் கில்லாடிகள். விபூதி பூசிக் கொண்டு அப்படியே கோவிலுக்குள் அமர்ந்திருப்பது போல,


’வந்தாள் மகாலக்‌ஷ்மியே’

’இளஞ்சோலை பூத்ததா’

’வெள்ளிச்சலங்கைகள்’

’பூவில் வண்டு கூடும்’

’தோகை இளமயில்’

’ராக தீபம் ஏற்றும் நேரம்’  


  

என்று இருக்கிற இவர்கள் செய்கிற இன்னொரு காரியம் தெரியுமா? அத்து மீறி சுவர் ஏறிக் குதித்து விடுகிறார்கள். அங்கே இருதயம் என்றொரு குழந்தை இருக்கிறான். அவனைப் பிடித்து அமுக்கி, 


’இதயமே இதயமே’

’வானுயர்ந்த சோலையிலே’

‘உச்சி வகுந்தெடுத்து’

‘பாடிப் பறந்த கிளி ‘

’ஒன்ன நெனச்சே’

’போகுதே போகுதே’

’வைகரையில் வைகை கரையில்’

’உதயகீதம் பாடுவேன்’

’இளவேனில் இது வைகாசி மாதம்’

’யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ’



என்றெல்லாம் இருவருமாக சேர்ந்து குத்திக் கிழித்துவிட்டு வந்து ஒன்றுமே தெரியாதவர்கள் போல  இருப்பார்கள். பாவம் அந்தக் குழந்தை! ஆறாத காயத்தோடு பதைபதைத்தபடியே இருப்பான். பிரச்சினை என்னவென்றால் அவனை அப்படியே இருக்கவும் விடமாட்டார்கள். தூக்கி மடியில் போட்டுக் கொண்டு,


’நிலவே முகம் காட்டு’

‘நலம் வாழ எந்நாளும்‘

‘தேனே தென் பாண்டி மீனே’

’எல்லோரும் சொல்லும் பாட்டு’

‘மலையோரம் வீசும் காத்து’

‘பச்சமலப் பூவு ’


என்று தலை கோதுகிறவர்களும் இவர்கள்தான்.

நீஙகளே பாருங்கள். அரச உடையணிந்து டாம்பீகமாக மேடையேறி வந்து, 


 ’காதல் மகராணி ‘

’காவிரியே கவிக்குயிலே ‘

’வானம் கீழே வந்தால் என்ன?’

‘பூ மாலை ஒரு பாவை’

‘ஏய் உன்னைத்தானே’

‘மேகம் கொட்டட்டும்’



என்றால் பெருமிதமாகத்தான் இருக்கிறது. நெஞ்செல்லாம் விரிந்து கொள்கிறது. ஆனால் சமயங்களில்,’சிங்காரி சரக்கு’ என்று லுங்கியை மடித்துக் கொண்டு புழுதி கிளப்பவும் செய்கிறார்கள். நம்மால் நம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்க முடிவதில்லை. இப்போதும் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல்தான் இப்படி விதவிதமாய் புலம்புகிறோம். மூன்று தலைமுறைக்கு பாடிய பின்னரும் தன் பாடலின் சுருதியை, தாளவேகத்தை குறைத்துக் கொள்ளாமல் ராஜாவாகவே இருந்து, போகும் போதும் ராஜாவாகவே போனார் பாலு. நமது வீதியில் வசிக்கிற 60 வயது  பெரியவர் ஒருவர், ’கக காகி கீகூக்கு கக்கக்கே குக்குக்கு கேக்கே’  என்று பாடுவதாக வலிந்து கற்பனை செய்தாலும்  மனம் பொருந்துவதில்லை. எழுபதைத் தாண்டியும் சாரீரம் தளரவேயில்லையே  இருவருக்கும் ? குறிப்பிட்ட காலகட்டத்தில் கேரளத்தில் பிறந்து வளர்ந்தவர்களில் எந்த ஆண்பிள்ளை பாடினாலும் அதில் யேசுதாஸின் பாதிப்பு இல்லாமல் இருக்காது. அதேகாலகட்டத்தில் தமிழகத்திலும், ஆந்திராவிலும் , கர்நாடகத்திலும் பிறந்த ஒருவரையும் ’சுப்பிரமணி’ விட்டு வைக்கவில்லை. ’ராசுக்குட்டி’யோ இதில் எந்த மாநிலத்தையும்  மிச்சம் வைக்கவில்லை. இளையராஜா என்றாலும் சின்னராசு என்றாலும் பாலசுப்பிரமணியம் என்றாலும் குட்டிப்பையன் என்றாலும்  பொருள் ஒன்றுதான்.  மற்ற பாடல்களைப் படும்போது பாலுவாகவே இருக்கிறவர்  ராஜபாலுவாக ரூபங்கொள்வது எப்போது என்பதை நாமறிவோம்.

’எனக்காக அவர் பிறந்தார்.  அவருக்காகவே நான் பிறந்தேன்’ என்று அவரே சொல்கிறார். ‘இசை என்பது ’நறுக்கப்பட்ட சத்தம்’ அல்லது ’காற்றைத்தவிர வேறொன்றுமில்லை’ என்பார் ராசய்யா. அவர் கட்டியமைத்த பாடல்களில் முன்னணிக் கருவிகள் மூச்செடுக்கும் இடைவெளிகளில் தாளக் கோவைகள் புடைத்தெழும் அழகை நமது செவிகளறியும். போலவே நிசப்தங்களின் பேரழகையும் அனுபவித்திருக்கிறோம். பாலய்யா மருத்துவமனையிலிருந்த போது அவரை எழுந்து வரச்சொல்லி ராசய்யா அழைப்பு விடுத்தார். திரைப்படங்களுக்குப் பணிபுரிவதற்கு முன்பாகவே மேடை மெல்லிசைக் கலைஞர்களாகவே இருவரும் இணைந்து விட்டதைக் குறிப்பிட்டு பேசிக் கொண்டிருந்தவர், எதையோ யோசித்தவராக, வார்த்தைகள் கிடைக்காமல்,

’பாலு………………’ என்று ஒரு இடைவெளி விட்டார். அப்படியொரு நிசப்தத்தின் கொடூரத்தை  வாழ்நாளில் இதுவரை அனுபவித்தேனில்லை.

உலகப் பயன்பாட்டில் உள்ள  இசைக்கருவிகள்  எல்லாமும்  மனிதர்களால் உருவாக்கப்படுகிறவை. குரல்வளை? அது யார் செய்தது?  ராசய்யா என்கிற சுரபூபதியின் தர்பாரில் தலைசிறந்து விளங்கிய வாத்தியம் ஒன்று நேரடியாக  கடவுளின் கையால்  செய்யப்பட்டது.  


வாழ்க மொட்டை! வாழ்க குண்டன்!





Monday, 7 June 2021

பாதியில் துவங்குகிறாள்...

 மலையிடுக்கில் 

கண்விழித்தேன்.

எப்படி வந்தேன் 

இங்கே?

நெட்டி முறித்த 

கைநகத்தில் 

சிக்கிப் பறந்தது 

பஞ்சிணுக்கு

மெள்ள மெள்ள 

இறங்கிவந்தேன்.

உச்சிமயிர் 

குத்திநிற்க 

நேற்றையநாள் 

மந்தாரைச் சிமிழுக்குள் 

படுத்திருந்தேன்.

பிறிதொருநாள் 

நதியூறும்

மணற்பொடியுள்

வேறொரு நாள் 

பறவைமடிப் 

பஞ்சணையில்

குட்டியை 

ஒளித்து வைக்கும் 

தாய்ப்பூனை போலென் 

நாளைக் கவ்விப் 

பாட்டிடுக்கில் போடுகிறாள் 

நல்ல மங்கை.

ஓவியம் : இளையராஜா


குறுமக்கள் கொட்டாரம் - நூல் குறித்து ஒடியன் லட்சுமணன்

  ஒரு குழந்தை சக வகுப்பு குழந்தைகள் எது கேட்டாலும் வெங்காயம் என்கிறது. மாணவர் மட்டுமில்லை டீச்சர்களிடத்திலும் அப்படித்தான். கண்டித்துப் ...