Tuesday, 22 October 2019

ரொம்ப சுமாராகப் பாடுபவன்



கலைப் பெருந்தாகம் 
தன்னுள் பற்றியெரிய அலையும் 
ரொம்ப சுமாராகப் பாடுபவனுக்கு
பருகக்கிடைக்கிறது 
மேசைக்கரண்டி அளவேயான 
மண்ணெண்ணை.

கனவுகளின் வஸ்திரங்களை 
நெசவு செய்து கொள்ளும் அவனை 
அம்மணமாக்குகின்றன 
ஸ்வரஸ்தானங்கள்.

கலைமகளின் 
வாரிசுச்சான்றிதழ் 
எதுவுமில்லை அவனிடம் 
எனினும்
கண்ணில் சுண்ணாம்பு வைத்து 
தெருவில் விட்டு விட்ட 
அவளைத் தொழுதே முழங்குகிறது 
துயரனின் குரல்.


வார இதழ்களை 
சுருட்டிப் பிடித்து
ஒலி வாங்கியை தரிசிக்குமவன் 
கீதங்களைக் கொண்டாடி 
தனக்கே காட்சியளிக்கிறான் 
ஒரு தேற்றறவாளனாக


அடுமனைகள் 
தேனீரூற்றி
கோல்டு ஃபில்டர் தூபம் காட்டி 
அவனை வளர்த்தெடுக்கின்றன.


ரொம்ப சுமாராகப் பாடுபவன் 
இரண்டுவரிகளை
உங்கள் மீது தெளித்து விட்டு 
கிரணங்கள் விழும் திசையை
ஊடுருவிப் பார்க்கிறான்.

நாதங்கள் தீண்டத்தீண்ட                                                             நாகமாகிறவனின் உடலில்                                                      
உக்கிர தெய்வத்தின் நிறம் பாரிக்கிறது                                                       
ஏகடியம் பேசுகின்றன சாத்தான்கள்

தன் காயங்களின் மேல் 
திரையிசையை 
பிதுக்கித் தடவிக் கொள்ளுமவன் 
மனைவியின் இறுதிச் சடங்கில் 
திடீரென வீறிட்டுப் பாடுகிறான் 
ஊளையை ஒத்து

“....பறவையே எங்கு இருக்கிறாய்........... 
 .....பறக்கவே என்னை அழைக்கிறாய்....

படபடவென செட்டைகளை 
உதறுகின்றன கல்லறைப்புறாக்கள் 
                                                   
”.....தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே.....








No comments:

கண்ணே என் கீரைத்தண்டே

 கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நான் சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன். இரவு 11 மணி இருக்கலாம். நண்பர் செல்வேந்திரன் ...