Friday 28 February 2020

ஹமாரா பஜாஜ்

பெட்டியை பக்கவாட்டில்
மாட்டிக்கொண்டு திரியும் பஜாஜ் CD 100-க்கு
லேடி பேர்ட்-ஐப் பார்க்கும்போதெல்லாம்
நரம்பு முறுக்கிக் கொள்ளவும்
சைக்கிளை வழிமறித்து
ஆக்டிவா மாதிரி வைத்துக் கொள்வதாக சொன்னபோது
பச்சைக்கிளிகள் ஆலோலமிட்டன.

 ஆலஞ்சடை திருகி
வெட்கிய சைக்கிளை
ஆரத்தழுவிய பொழுதுகளில்
அது றெக்கையுதறி வானுக்குத்தாவும்.

பெட்டிக்குள் காமசூத்ராவை பத்திரப்படுத்தும்போது
பார்பிபொம்மையும் தண்ணீர் துப்பாக்கியும்
இருப்பது கண்டு
நாக்கைக் கடித்துக்கொள்ளும் நமது பஜாஜ்
அப்புறமாய் விசிலடிக்கவும் செய்தது.

விதி வலுத்த நாளொன்றில்
ஆக்டிவா கருத்தபல்ஸரின் தோள்சேர்ந்த கோலங்கண்டு
அது உடலையுதறி
வானுக்குத்தாவ முடிவு செய்தது.

தினசரி வீட்டுக்குள்ளிருந்து
எழும்பி
குடிமேசையில் இறங்குமிந்த
துருவேறிய சைக்கிளின்
டம்ளரில்
கொஞ்சத்தை
சரித்துத் தொலையுங்களேன் ஜி.

Thursday 20 February 2020

தூத்தல்




ஆனைமுதுகிருந்து
தன்படையைத் தூற்றும்
தலைவனென
அந்த லாரி ஓட்டுனர்
திரும்பாமலே
எச்சிலை உமிழ்ந்தார்.

உச்சாணியிலிருந்து 
அதுவொரு தூறலாக
எங்கள் மேல் விழுந்தது.

நாங்கள்
அவரை வாழ்த்தினோம்.

விட்டொதுங்குகிற
நகரத்தை…… 
விடாது தடுக்கிற
சமிக்ஞைத் தண்டுகளை…..
டயரில் விழுகிற
பொடிவண்டிகளை……
மழுங்கி விட்ட
சனங்களை……
தொப்பிக்குள் பதுக்குகிற
காவலரை…..
 
எதைக் குறித்தோ
அவர் சினந்திருக்கிறார்.









Thursday 13 February 2020

திக்கிப்பேசுகிறவன்


வெல்டிங் பணிமனையின்
வெளிச்சப் பொறி அவன் பேச்சு.
வார்த்தைகளைப் பெற்றுப்புறந்தள்ள
கர்ப்பவலி தின்னும் நெஞ்சிலிருந்து
மேடேறும் குதிரைகள் மணலில் புதைந்து திமிறுகின்றன.
கோபங்கொள்ளுகையில்
அவனது நாவுக்கு தாளம் தப்பிவிடுகிறது
வாயிலிருந்து புறப்படும் அக்கினிஅம்புகள்
பகைஞரின் காலடியில் மல்லிப்பந்துகளாய் மாறி விழ
மூர்க்கர்களும் மரணாயுதங்களை தரையிலெறிந்துவிட்டு
சிறியோனை முத்தஞ்செய்வார்கள்.
மனதுருகும் வேளைகளில் நீள்குழல்விளக்குகள்
உயிருக்குத்துடிப்பதைப்போலவே
அவன் இன்னும் அதிகமாக திக்குவான்
பொறியில் சிக்கித்துடிக்கும் பன்றியென
அந்த உதடுகள் துடித்திருக்க
துருப்பேறிய ஆணியை விழுங்குவதைப்போல
நாம் நமது எச்சிலை விழுங்க வேண்டும். 
நேற்றைக்கு அவன் என்னிடம் 
தனது அன்பைச் சொன்னான்.
மற்றவர்களுடையதைக் காட்டிலும்
கூடுதல் எடையோடிருந்த
அவனுடைய அன்பில்
எழுத்துருக்கள் திரளாயிருந்தன.
ல...லவ் யூ..... ந..நண்பா








நூற்றியெட்டை மறித்தல்


நீரோடையில் மிதக்கும்  
ஒற்றை மலர் என் வண்டி
மாலுமி  பெடலைச் சுழற்றினால்  
ஓடை பெருகி  கடலாகும்
இந்த ஆம்புலன்ஸோ
சாக்கடையின் நடுநெஞ்சில் 
ஓலமிட்டு நீந்துகிற வாத்து 
அதைப் பார்த்தாலே எனக்கு எரியும்
மாற்றுத்திறனாளியானால் என்ன
அவலங்களுக்கு எதிராக
துரும்பையாகிலும்   நகர்த்துவோம் என்கிறாள் தோழி
எனது மூன்று சக்கரத்தையும்  நகர்த்தி
அவசரவூர்தியின் குறுக்கே போடுவேன்
அதன் அலறலும்
தொடர்ந்தோடும்  வண்டிகளின் பதறலும்
தனியள் என்று என்னைப் பரிகசிப்பது போலில்லையா







வேலியில் படருந்தொப்புள்கொடி

கொடிநுனித்
தளிரிலை
நிலம்விழக்
கிழிந்தவன்
குலக்கொடி
உலர்ந்திட
நெறிக்குது 
வேலிமுள்.












தீக்குச்சி

000


தேனீர்ப்பொழுதில்
நீளும் குச்சியில்
ஓரிதழ் தாமரை.
அதைகும்பிட்டுக் கொள் 
சிகரெட்டே.


000


தீக்குச்சி
ஒரு கன்னிப்பையன்.
ஆவி தீரத்தீர
காற்றில் எழுதுகிறது
தண்ணெனக் குளிர்ந்த
கருந்துளையை.


000


பெட்டி 
தன்னிடம் சொன்னதை
அப்படியே 
கைமாற்றிவிட்டுப் போனது 
குச்சி.
சிகரெட்டால்
அதை 
ஜீரணிக்கவே 
முடியவில்லை


Friday 7 February 2020

போக்கற்றவன் கூற்று

எல்லாக் குறும்புகளையும் விட்டுவிட்டு
குடும்பத்தைத் திரும்பிப்பார்த்தான்.
அது
குண்டி மணலைத் தட்டிவிட்டு
எழுந்து போயிற்று.

ஸ்விகிப்பையன்


விளக்கைத் தேய்க்க 
பூதம் வந்த கதைதான் 
ஸ்விக்கிப் பையனுடையதும்.
பதறப்பதற பொதியை வாங்கி 
கனலை அணிந்து பறக்கிறான்.
காற்று தழுவ 
சாம்பல் பறந்து 
ஒளிர்கிறது கங்கு!
'சாப்பிட நேரம் கிடைக்காது
யாரிடமோ சொல்கிறது 
பிணி தீர்க்குஞ்சிறுதெய்வம்.
ஒரு கையை 
பாக்கெட்டில் விட்டுக்கொண்டு
குழந்தை கழட்டிப் போட்டதை 
வாங்குவது போல் 
முகத்தை வைத்துக் கொள்கிறாய்.
முறுவல் என்பது 
சாத்தான் குஞ்சுகளுக்கு 
விலக்கப்பட்ட கனி .
இல்லையா?






தைரியத்திருவாளன்


காவல்காரத் தாத்தனின்
புகை வளையல்களில் 
கை நுழைக்கிறாள் 
அரூபப்பேத்தி.
நூற்றுக்கணக்கில் 
விதைத்தும் 
சொற்ப மணிகளே 
அறுவடையாகும் 
ஹாலோ பிளாக் 
அவென்யூக்களில் 
சல்யூட் பண்ணும் 
எலியின் சர்க்கஸ் 
பழைய சாகஸம்
வீடு கைவிட்டாலும்
அடைக்கலந்தரும் 
வாசல்கள் உண்டே 
என்கிறது 
எழுந்து நிற்கும் சவப்பெட்டி
ஒருக்களித்த 
வாழ்வுக்கும்
ஜால்ரா போட 
ஒரு சைக்கிள்
வேலைமுடிந்து 
வருகையில் 
பூ வாங்கித் திரும்புவது 
ஒருகாலம்.
கீரைக்கட்டுகளுடன்
வளைக்குள் சேர்கிறாய்.
அகாலத்தில் 
இப்படி கை நீட்டுகிறவனை
சந்தேகமாக பார்க்காதே 
வாட்சுமேன் தாத்தா
நரைநெஞ்சத்தணலின் 
கொஞ்சத்தை
இந்த பீடிக்கு நெருப்பாக்கு
ஒன்று சொல்லவா
உலோக மரங்களின் 
ஒற்றைக் காய்களும்
பழுத்து ஒழுகும் 
இந்தப் பொழுதின் 
ராயன் நீதான்
சும்மா
கோலை சுழற்றி 
சுவற்றில் அடி 
எந்த நாய் வருமென்று 
நான் பார்க்கிறேன்.






Thursday 6 February 2020

அப்பாடா


ம்மாவின் பழைய காதல்
பந்தல் வரை வந்து நிற்க
வாசலில் இருந்த மகள்
தயங்கித் தயங்கி ‘நல்வரவு’ என்றாள்.
படியேறி அது இவளைக் கடந்தபோது
ஆசுவாசத்திலொரு வார்த்தை சொன்னாள்.
போன உயிர் திரும்பி வந்தது.
உயிரின் முகத்தில் தளும்புமிரு குளங்களிருந்தன.
குட்டிப்பையன் பன்னீர் செம்பால் மழை செய்தான்.



பூக்காடு

யோசித்து
யோசித்துப் பின்பு
மகளுக்கொரு பேர் வைத்தேன்
ரோஜா

அண்டை வீடுகளுக்கு என் மனைவி
ரோஜாம்மா- ஆகிப் போனாள்
ரோஜா அப்பா என் பெயரானது
மகனும் ஆனான் ரோஜாண்ணா

ரோஜா பொம்மை
ரோஜா வீடு
ரோஜா பென்சில்
ரோஜா ரப்பர்

எங்கள் வீட்டுத் தொட்டியிலிருந்த
பெயர் தெரியாப் பூவுங்கூட      
ரோஜாப்பூவானது அவர்களுக்கு

ஒரேயொரு பெயரை மட்டுந்தான்
நட்டு வைத்தேன் நான்                                                                  
என் வீடு மெள்ள மெள்ள 
உருமாறிக் கொண்டிருக்கிறது                                                    
கரும்பச்சை இலைகளும்
இளஞ்சிவப்பு மலர்களுமாக                   
முட்களேதுமில்லாத
பெரியதொரு ரோஜாவனமாய்.















Tuesday 4 February 2020

ம்ப்ப்ப்ரூம்ம்ம்ம்ம்.....

நடிகர்களுக்கு
குரல் கொடுப்பவர்
விருந்துக்கு வந்திருந்தார்
வீட்டுச்சிறுவன்
பெரிதாக அவரை
கண்டுகொள்ளவில்லை
தினசரி
வானூர்திக்கும்
புகைவண்டிக்குமே
குரல் கொடுப்பவன் அவன்.





பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...