Monday 27 April 2020

நான்கு சக்கரங்களில் நகரும் குட்டியானை

வெற்றிநடைபோடும் சிக்கல் வாழ்க்கையில்
ஓட்டுனர் சுமையாள் என்னும்
இருவேடங்களைத்தாங்கி
வலம்வரும் நஞ்சப்பன்

தனது குட்டி யானையின் நெற்றியில்
சிங்கம்லே
என்றெழுதி வைத்திருக்கிறார்

கடவுள்துணை என்பதாகவும்
ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் அவர்
கடவுள் தனியாக இருப்பது நல்லதல்ல எனக்கண்டு
புலிக்குட்டி எலிக்குட்டி என
பெயரன் பெயர்த்திகளின்
செல்லப்பெயர்களையும் இட்டு வைத்திருக்கிறார்

மாதத்தவணைகளில் துவங்கி
லொட்டு லொசுக்குகளில்
தொடரும் பட்டியல்
வாகனத்தின் முன் நீளுகிறதொரு
நெடுஞ்சாலையென

எத்தனையாவது ஆயிரம் கிலோமீட்டரில்
அது முடிவுறும் என்பதுதான் பெருங்கேள்வி

ஞாயிற்றுக்கிழமையின் பிற்பகலில்
அசந்துறங்கும் சிங்கத்தின் மேலேறி
வலையிழைகள் அறுந்து விழும்படிக்கு
விளையாடுகிறது சுண்டெலி.

Wednesday 22 April 2020

ஜும்ளிகளைப் பற்றிய தகவல்கள்



குனிந்து பொறுக்கி
மடியில் சேகரித்துக் கொண்டிருந்தாள்.

குட்டி விரல்களுக்குத் தோதான
குட்டிக்குட்டி சிருஷ்டிகள்.

'ஷுஷு' என்பது வேப்பம்பூ

மாதுளை மொக்குகள்
'பாப்புக்குட்டிகள் ' என்றால்
மகிழம்பூக்களோ 'பாப்ளிக்குட்டிகள் '

ஜும்ளிகளைப் பற்றிய
தகவல்கள் ஏதும்  தெரியாமல்
பட்டணம் புறப்படுகிறீர்கள்.

இதெல்லாம்
நெஞ்சழுத்தமும்
குருட்டு தைரியமும் இல்லாத வேறென்ன.

Tuesday 21 April 2020

ஒலிபரப்பு

நீர்க்குழாயின் உள்ளிருந்து
எத்தனைக்குரல்கள்.
பேசிக்கொண்டே சமைக்கிறவள்
குக்கர்விசில்
குழந்தையின் ஓலம்
சிறுமியின் வாதம்
வண்டிக்காரனின் பழையமெட்டு
சுவர்க்கோழி
சூறைக்காற்று
நேற்றைய பாடல்
நாளைய மறியல்
மழைத்துளிகள்
காட்டுத்தீ
புறப்படும் ரயில்
புரளும் கிழவன்
பெருமூச்சு
அபான வாயு......
சும்மா இருக்கும்போது
மனப்பாடம் செய்துவிட்டு
யாரைப்பார்த்தாலும்
ஒப்பித்துக்கொண்டேயிருக்கிறது பைத்தியம்!

இடம் பெயர்தல்

நான் நிறுத்திக் கொண்டேன்.
உனக்கு அறிவுறுத்திக் கொண்டேயிருப்பதை.

நதியை வழி நடத்துவது போலொரு
முட்டாள்தனம்‌.

உஷ் உஷ் என்று இத்தனை தடவை கடலை கண்டிப்பது.

புதிய ஊரின் பழைய சாளரம்
வெளியே தூரல்...

பேசுவது போலவும் பேசாதது போலவும்.

அப்புறம் இங்கே காற்றெங்கும் கடல்தான்.
அலையோசை இன்றி..

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...