Friday 30 November 2018

ஆபுக்குட்டி எனும் அபூர்வ மலர்


தகை வரை போய், ஒரேயொரு தேநீர் அருந்திவிட்டுத் திரும்ப வேண்டும். பொள்ளாச்சி போகும் வழியில், மர நிழலில் பாய் விரித்து உட்கார்ந்து பேச வேண்டும் என்றெல்லாம் தோன்றும். தோன்றுவதைச் செய்துவிடுவதும் உண்டு . அப்படி இசையும் சாம்ராஜும் சாம்சனும் செந்திலும் உடனிருக்க, ஆனைகட்டியை நோக்கிய பயணத்தில் பாபுவின் சமீபத்திய கவிதையைப் பற்றி பேச்சு வந்தது.

‘கட்டிங்கைத் தண்ணீரில்லாமல்
ஓரே மடக்கில் குடிப்பவருக்கு
இரண்டு வெள்ளரித் துண்டுகள்
கொடுங்கள் தோழர்
ஏழு வருடங்களுக்கு முன்
5 லாரிகளுக்கு
ஓனர் அவர்.’
“அ… ஏன் ஜான்ஜி… பாபுவைப் பார்க்கலாமா?” என்றார் சாம்சன்.
“இப்பவா?”
“இப்போதான்!”
எப்போதும் குளங்கட்டியிருக்கும் அந்தக் கண்களைப் பார்க்கத்தான் வேண்டும்.
 “ஓ போலாமே.”
“ரெண்டு துண்டு வெள்ளரி வாங்கிட்டுப் போவமா?”

போய்க்கொண்டிருந்த சாலையிலேயே லாடத் திருப்பமிட்டு, சேலத்தை நோக்கி சாம்சன் காரைத் திருப்பிய தருணம் பொற்கிரணங்களால் ஆனது.

``ஹூய்” என்றொரு சந்தோஷக் கூச்சல் பொள்ளாச்சி சாலையெங்கும் எதிரொலிக்க, போனோம். மாலை உள்ளன்பின் கனத்தைத் தாங்கிய அந்த இரண்டு துண்டுகளையும் பாபுவுக்கு ஊட்டிவிட்டுத் திரும்பினோம். அவ்வளவேதான்... திரும்பிவிட்டோம்!
கண்ணாடி வழியே பார்த்தபோது, விழுங்கிய வெள்ளரித் துண்டுகளின் கனம் தாங்காது, பாபு அப்படியே நின்று கொண்டிருந்தார்.

‘நள்ளிரவு 1.40
யாரிடமாவது
இரண்டு வார்த்தைகள் பேச
எண்களைத்
துழாவுகிறது
அம்மு
தொடர்பு எல்லைக்கு
வெளியே இருக்கிறாள்
அசந்து உறங்கும்
நண்பர்களே
நள்ளிரவு 1.40
உங்கள் எண்ணை அழைக்கும்போது
எடுத்துப் பேசுங்கள்
அந்த இரவில்
நள்ளிரவு 1.40 ஐ
தற்கொலையிலிருந்து
காப்பாற்றியவர்
நீங்களாகவும் இருக்கலாம்.’


 இ
ந்தக் கவிதையைப் படித்ததும் பாபுவிடம் பேச வேண்டும் போலிருந்தது. பாபு போனை எடுத்ததும், “பாபு உங்க தொகுப்பைத்தான் படிச்சுட்டு இருந்தேன்” என்று சொல்லச் சொல்ல, எதுவோ  குரல்வளையைக் கவ்வ, “பா…பு” என்று குரலுடைந்தேன். மறு முனையிலிருந்த பாபு வேடிக்கையாக “ஒண்ண்ண்ணும் கவலைப்பட வேண்டாம் ஜான்! சேலமே உங்க பின்னால நிக்கும். ஒரு பய உங்கள தொட மாட்டான்!” என்று, தமிழ்ப் பட ‘பஞ்ச் டயலாக்’ பாவனையில் உரக்கப் பேசினார். பயங்கரமாகச் சிரித்துவிட்டேன்.

அதே சமயம் பாபு, சாம்சனுக்கு போன் செய்து, ``ஜான் ஏதோ தொந்தரவாயிட்டாப்ள போல… கூட இருங்க...” என்று சொல்லியனுப்ப, சாம் வந்து,

“அ… ஜான் ஜி… அ... சும்மாத்தான் வந்தேன்… அ… என்ன வாசிச்சீங்க?” என்றதும் நான்,  “பாபு போன் பண்ணினாரா?” கண்ணீர்த்தாரைகள் காயாமல் சிரித்தபடியே கேட்க, சாம்சனுக்கு ஒரே குழப்பம்.
``அட போங்கப்பா ஒண்ணுமே புரியலியே?” என்று குழம்பிக் கொண்டிருக்கையில், சாம்சனுக்கு போன் வந்தது, பாபுதான். சாம்சனிடம் விசாரித்துவிட்டு என்னிடம் கொடுக்கச் சொல்லி, நான் வாங்கி, “பாபு...” என்றதும்,

``ஒண்ண்ண்ணும் கவலைப்பட வேண்டாம் ஜான்” என்று  மீண்டும் அதே பாணியில் தொடங்க, நான் “பின்னால சேலமே நிக்கும்! அதானே?” என்றேன்.

பாபு அலட்சியமாக, ``ம்ஹூம்...! இப்ப வேற ஏற்பாடு பண்ணியிருக்கு, செவ்வாய் கிரகமே உங்க பின்னால நிக்கும்” என்றார்.

துயரம் பீறிடும் நகைச்சுவைத் துணுக்குகளை கைவசம் நிறைய வைத்திருந்தார் பாபு!

‘யாரோ 
நுழைகிறார்கள்
யாரோ
வெளியேறுகிறார்கள்
தாழிட்டபடி
இருக்கிறது
கதவு
நம் கைகளில்
இல்லை
நுழைவதும்
வெளியேறுவதும்.’


ன்னோடு நல்ல தொடர்பிலிருந்த நண்பர் கவிஞர் தியாகு  தனது முப்பத்தாறு வயதில் மரணித்துவிட்ட விரக்தியில், “இனி எவனாவது வந்து ‘ஜான்குட்டி’னு கூப்பிட்டுப் பாருங்க, அப்புறம் இருக்கு” என்று முகநூலில் பதிவிட்டேன். அடுத்த நிமிடமே அலைபேசியில் வந்த பாபு, “ஜான்குட்டி... ஜான்குட்டி’ என்று சீண்டிக்கொண்டே இருந்தார்.

பாபு இறந்துவிட்டதாகச் சொல்லி, படுக்கவைத்திருந்தார்கள். நான் கண்ணதாசன் செய்ததுபோல “யாரெல்லாம் துடிக்கறீங்கனு பார்த்தேன்” என்று  சொல்லி எழுந்து சிரிக்கப் போகிறார் பாபு என்று பார்த்துக்கொண்டேயிருந்தேன். பாபு சிரிப்பை அடக்க முடியாமல் படுத்திருப்பது போலவே தெரிந்தது. அவரது தம்பியின் மகன்கள் தாமரைக் கண்ணனும் கதிரவனும்  ‘ஆபுக்குட்டி ஆபுக்குட்டி’ என்றே அரற்றிக் கொண்டிருந்தார்கள். மஞ்சளில் நனைத்த தூளியில்வைத்து தேரில் ஏற்றி, ஆபுக்குட்டியை மயானத்துக்குச் சுமந்துபோனோம். நெருப்புவைக்கும்வரை நம்பாமல் பார்த்துக்கொண்டேயிருந்தேன். இந்தமுறையும் ஜான்குட்டி ஏமாந்தான். ஆபுக்குட்டிதான் ஜெயித்தான். ஆபுக்குட்டியின் வீட்டுக்கு எதிரிலிருந்த மரத்துக் காகம், தன் எச்சத்தை ஜான்குட்டியின் சட்டையின் மீது தெளித்து  “ஏப்ரல் ஃபூல்… ஏப்ரல் ஃபூல்...” என்று கரைந்தது.

இசைக்குறிப்புகள் எழுதும் மூலப்பிரதியின் பின்னணியில், ராஜா தனது தாடையை இடது கைவிரல்களில் தாங்கியிருக்கும் சித்திரம் மங்கலாக  பதியப்பட்டிருக்கும். தக்கை கூட்டங்களில் பாபு அப்படித்தான் உட்கார்ந்திருப்பார்.உன்னிப்பாகக் கவனிக்கிறாராம். நான் சீண்டுவேன். சமயங்களில் கட்டைவிரலை மடித்து, மீத விரல்களால் வாயை மறைத்து ஞானகுருவிடம் உபதேசம் கேட்டுக்கொள்ளும் சீடன் போல முகத்தை வைத்துக்கொண்டு தன் தோழர்களுக்குத் தேவையான சாப்பாடு உள்ளிட்ட விஷயங்களைத் தருவிக்கக் கட்டளையிட்டுக் கொண்டிருப்பார். கடும் விமர்சனங்கள், காரசாரமான விவாதங்களுக்கிடையே தளும்பாது மிதந்துகொண்டிருக்கும் அந்த தக்கை.

தேவனின் கோவில்
மூடிய நேரம்
நானென்ன கேட்பேன் தெய்வமே
எங்கேயும் செருகலாம்
பிடுங்கலாம்
ஒண்டிக்கட்டையை
தற்கொலை
இரங்கல் கூட்டம்
விவாகரத்து
எல்லாமே
விளையாட்டு
பேரானந்தம்
அதற்கு
என்ன இப்படிப் பண்றீங்க
டாக்டர் குரலுக்கும்
அவ்வளவு குதூகலம்
உனக்கென்ன
குடும்பமா
குழந்தையா
எனும்போது மட்டும்
ஏய்ய்ய்... ஏஹேய்...
தந்தனா தந்தனா தந்தனா ஆஆ...
தந்தானத் தனனானத்தானன்னா அஅஅஅ ஆ
தந்தானா தந்தானா... ஹேய்...


தொண்டைக்குள் எப்போதும் அழுந்திக் கொண்டிருக்கிற நெருஞ்சி முள்ளை விழுங்க முடியாமல் துப்பவும் விரும்பாமல்  கசியுங்குருதியை அருந்தி வாழ்ந்த அந்தப் பறவை, எங்கள் கைகளிலும் கொஞ்ச நாளிருந்தது.
மயானத்து மரத்தடி இரங்கல் கூட்டத்தில் மோகனரங்கண்ணன், “பாபு என்னிடம் மட்டும்தான் இவ்வளவு நெருக்கமாக ஆத்மார்த்தமாக இருக்கிறான் என்று நினைத்தேன். ஒவ்வொருவரிடமும் அப்படித்தான் இருந்திருக்கிறான் என்பது இப்போது தெரிகிறது” என்று கலங்கிச் சொன்னார்.

உண்மையில் எல்லோரிடமும் அப்படி அன்யோன்யமாகத்தான் இருந்தார் பாபு. ஆனால், தன் உடல் உபாதைகளைச் சொல்லும்போது மட்டும் அந்நியர்போல  “கொஞ்சம் தொந்தரவாயிடுச்சு ஜான்” என்பார். ‘தலைவலி’ தொந்தரவாயிடுச்சு என்றால் சரி, ரத்தவாந்தியும் வெறுமனே “தொந்தரவாயிடுச்சு”தானா பாபு?

லிபி ஆரண்யா ஒருமுறை  “இப்பல்லாம் காதல் தோல்வின்னா பசங்க, வெறியில பொண்ணுங்கமேல அமிலத்தை ஊத்திடறாங்க, பாபு மாதிரி ஆள்கள் மட்டும்தான் அன்பு மிகுதில அதைத் தன் மேலேயே ஊத்திக்கிறாங்க” என்றார்.

சேலம் சிவா லாட்ஜின் சிறு அறைக்குள், எட்டுப்பட்டி சொந்தமும் கூடி,  கறி விருந்தும் குலவைச் சத்தமும் பாட்டுக் கச்சேரியும் ரத்தக்களறியுமாகத் திருவிழா நடக்கும். உற்சாகத்தில் பாடும்போது, நண்பர்களின் களியாட்டத்தில் உற்சாகமாகி விட்டால், பாபு வெளியே பயங்கர மகிழ்ச்சியில் திளைப்பதாக, அதீதனாகக் காட்டிக்கொள்வார். பொய்... பொய்... அத்தனையும் பொய் என்று அவரது எப்போதும் காயாத விழிகள் சொல்லும். உண்மையில் பாபு உள்ளுக்குள் வலி தின்னும் வினோதன். போதும்! என்னால் எழுத முடியவில்லை,

லட்சத்தில் ஒருவனுக்குத்தான்
அபூர்வமலர் கிடைக்கிறது
அது
உதிரும் தருவாயில்.
இதுவும் ஆபுக்குட்டியின் வரிதான். நான் லட்சத்தில் ஒருவன்போலும்!
- ஜான் சுந்தர்,

Friday 21 September 2018

இசைத்தெய்வத்தின் மேடை - பாவண்ணன்- தூறல் இலக்கிய காலாண்டிதழ்

இசைத்தெய்வத்தின் மேடை
- பாவண்ணன்
தூறல் இலக்கிய காலாண்டிதழ்
ஜூலை- செப்-2018
திருவிழா மேடைகளிலும் திருமணக்கூடங்களிலும் உற்சாகக்களை சூழ நிகழும் பாட்டுக்கச்சேரிகளை நாம் அனைவரும் பார்த்திருப்போம். காதுகொடுத்துக் கேட்கிறவர்களும் கேட்காதவர்களுமாக நிரம்பிவழியும் மக்கள் தொகைக்கிடையே நின்று பாடுவது அவ்வளவு எளிமையான செயலல்ல. ஆழமான கனவுகளோடு தன்னையே இன்னொரு மனிதனாக மாற்றிக்கொள்பவர்களால் மட்டுமே அந்த மேடையில் நிற்பது சாத்தியம். தனக்குத் தேவையான விசையை தன் நெஞ்சிலிருந்து திரட்டியெடுத்துக்கொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள் அவர்கள். எம்.எஸ்.வி., இளையராஜா, எஸ்.பி.பி., டி.எம்.எஸ்., பி.பி.ஸ்ரீநிவாஸ், மலேசியா வாசுதேவன், பி.சுசிலா, ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரி, சொர்ணலதா, வாணி ஜெயராம் ஆகியோராக தம்மையே உருவகித்துக்கொண்டு பாடவோ இசைக்கவோ தொடங்கும்போது, அவர்கள் சிறகு முளைத்தவர்களாக மாறுகிறார்கள். தமக்கென ஒரு வானத்தையே உருவாக்கிக்கொண்டு, அதில் வட்டமடிக்கிறார்கள். நள்ளிரவுக்குப் பிறகோ, அதிகாலையிலோ அவர்கள் மெல்ல மெல்ல கீழிறங்கி வண்டி பிடித்து வீட்டுக்குப் போய்ச் சேர்கிறார்கள்.
அவர்கள் அனைவரும் தன் வயிற்றுப்பாட்டுக்காகவோ, தன்னை நம்பியிருக்கும் குடும்பத்தின் வயிற்றுப்பாட்டுக்காகவோ ஏதோ ஓர் அலுவலகத்தில் சின்னச்சின்ன வேலைகளைச் செய்பவர்களாகவும் கடைச்சிப்பந்திகளாகவும் இருக்கக்கூடும். அந்தப் பகல்நேர வாழ்க்கையைக்கூட அவர்கள் தம் கனவுகளின் ஆற்றல் வழியே கடந்துசெல்லவே முயற்சி செய்வார்கள். தன்னை கணந்தோறும் கலைத்து விளையாடியபடியே இருக்கும் கனவுகளை உதறவும் சக்தியில்லாமல் வென்றெடுக்கும் வாய்ப்புகளுக்கு வழியுமில்லாமல் செத்துச்செத்துப் பிழைப்பவர்கள் அவர்கள். காலமெல்லாம் கைசோரும் வரைக்கும் நீந்திக்கொண்டே இருந்தாலும், அவர்கள் ஒதுங்க ஒரு கரை தென்படுவதே இல்லை. ஒதுங்கி நிற்கும் கரையில் அவர்கள் நினைத்த வாழ்க்கை இருப்பதில்லை. கற்பனைக்கும் எதார்த்தத்துக்கும் இடையில் அகப்பட்டு நசுங்கிநசுங்கி சொர்க்கத்தையும் நரகத்தையும் தனக்குத்தானே உருவாக்கிக்கொள்கிறார்கள். உதிர்ந்துபோகும் அந்த நட்சத்திரங்களை தன் நினைவிலிருந்து ஒரு கோட்டோவியமாக தீட்டி வைத்திருக்கிறார் நகலிசைக்கலைஞன் ஜான் சுந்தர்.
அசோகமித்திரன் எழுதிய கரைந்த நிழல்கள் நாவலை அனைவருமே படித்திருப்போம். திரைத்துறையில் கால்பதிக்கும் கனவுகளோடு வந்து முட்டிமோதி கரைந்துபோகும் எளிய மனிதர்களுடைய வாழ்க்கைச்சித்திரங்கள் அடங்கிய தொகுப்பு அது. அரைநூற்றாண்டுக்குப் பிறகு இப்போது வந்திருக்கும் ஜான் சுந்தரின் நகலிசைக்கலைஞன் மேடைக்கச்சேரிக் கலைஞர்களுடைய பல்வேறு சித்திரங்களின் தொகுப்பாக வந்திருக்கிறது. சற்றே முயற்சி செய்திருந்தால் ஒரு நாவலாக விரிந்து செல்வதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளவையாகவே இக்கட்டுரைகள் காணப்படுகின்றன.
ராமேட்டன், டேனியல், சூர்யா, கலைச்செல்வன், மகேந்திரன், வசந்தன், பைரவன் என பல கலைஞர்களைப்பற்றிய நினைவுகள் இந்தக் கட்டுரைத்தொகுதியில் பதிவாகியிருக்கின்றன. தொகுதி முழுதும் சுந்தரின் மொழி கூர்மையாகவும் துல்லியமாகவும் இயங்குவதைப் பார்க்கமுடிகிறது. சம்பவச்சித்தரிப்பில் குறைத்துச் சொல்லும் இடங்களிலும் தாவிச்செல்லும் இடங்களிலும் அவர் கைதேர்ந்தவராகவே இருக்கிறார்.
ராமேட்டன் இசைஞானம் மிக்க கலைஞர். மின்னிசைப்பலகை பயின்று அதிலிருந்து எழும் இசைக்கோவைகளைப் பயின்ற மனிதர். ஒரு கைப்பேசி வாங்க அவருள் எழும் எளிய கனவையும் அதை வாங்கிய பிறகு அதை அவர் கையாண்ட விதம் பற்றிய சித்தரிப்பையும் புன்னகை அரும்பாமல் படிக்க முடியாது. கட்டுரையின் இறுதிப்பகுதியில் உள்ள தனியறைக்காட்சி புன்னகையின் நேரெதிர் புள்ளியில் கொண்டு சென்று நிறுத்திவிடுகிறது. வாடகைப்பணம் கட்டாததால் ஒரு நாள் இயங்காப் பேசியாகிவிடுகிறது அவர் கைப்பேசி. படுக்கையில் ஓரத்திலேயே கிடக்கிறது. அப்போது ஏதோ ஓர் அழைப்பு. அழைப்புகளை வழக்கமாக தாவியெடுத்துப் பேசக்கூடிய ராமேட்டன் அமைதியாக இருப்பதைப் பார்த்து சேச்சி திகைக்கிறாள். பிறகு தானே எடுக்கிறாள். மறுமுனையில் சொல்லப்பட்ட சொற்களுக்கு அவள் பதில் சொல்ல முற்படுகிறாள். அறையை விட்டு மெல்ல வெளியே வந்து “அவருக்கு கச்சேரி இல்லைம்மா, இருந்தால் கட்டியிருப்பார்” என்று சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். “அடுத்த மாதம் எல்லா பாக்கிகளையும் சேர்த்து கட்டிவிடுவார்” என்று அமைதிப்படுத்துகிறார். ஆனால் மறுதிசையில் ஒலிக்கும் குரல் ஓயவேயில்லை. சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்கிறது. மன்றாடும் குரலில் மீண்டும் சேச்சி, “அதான் சொல்றனே, சீக்கிரம் கட்டிடுவாரும்மா” என்று சொல்கிறார். அதற்குள் எழுந்து வெளியே வந்துவிடும் ராமேட்டன் பதிவுசெய்யப்பட்ட குரலுக்கு பரிவோடு பதில் சொல்லும் சேச்சியை அருகில் அழைத்து மென்மையாக உண்மையை எடுத்துரைக்கிறார்.
டேனியல் பற்றிய விவரங்கள் ஒரு தனிநாவலுக்கு உரியவைபோல இருக்கின்றன. அவர் பாடும் ’ஏன்டி முத்தம்மா’ பாடலுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. மது அருந்திய போதையோடு திரும்பும் அவர் வீட்டில் உறங்கும் மனைவியையும் பிள்ளைகளையும் எழுப்பி தன்னைச் சுற்றி உட்காரவைத்துக்கொண்டு பாட்டு பாடிக் காட்டிவிட்டு உறங்கச் செல்லும் பழக்கமுள்ள மனிதர் அவர். பள்ளிக்கூடம் போகாமல் பகல்முழுதும் தூங்கும் குழந்தைகளிடம் எழுந்ததும் காரணம் கேட்கிறார். ”விடிஞ்ச பிறகுதானேப்பா நீங்க பாட்ட நிறுத்தினீங்க. அதுக்கப்பறம்தான் நாங்க தூங்க ஆரம்பிச்சோம்” என்று பதில் சொல்கிறார்கள் பிள்ளைகள். எதிர்பாராத கணமொன்றில் விதி அவர் குடும்பக்கூட்டைக் கலைத்து விளையாடிவிடுகிறது. அவருடைய மூத்த மகள் திடீரென தன் காதலனுடன் தலைமறைவாகிவிட, கண்ணீர் விட்டு அழுது தவிக்கும் மனைவியை அமைதிப்படுத்த இயலாமல் தவிக்கிறார் டேனில். ஒரு கட்டத்தில் சட்டென அடங்கி டேனிலிடம் முட்டை பரோட்டா வாங்கிவரச் சொல்லி அனுப்பிவைக்கிறார். அப்பாவியாக அவள் சொல்லுக்குப் பணிந்து பரோட்டா வாங்கி வந்து உண்ணச் செய்கிறார் டேனில். அன்று இரவு எல்லோரும் சோர்ந்து உறங்கும் தருணத்தில் அவள் தூக்கு போட்டு மரணமடைந்துவிடுகிறாள். கதறியழும் டேனிலின் குரல் இன்னும் ஒலித்தபடியே உள்ளது.
எவ்வளவு இழப்புகள். எவ்வளவு கண்ணீர். எவ்வளவு துக்கம். ஆயினும் இசைத்தெய்வம் வீற்றிருக்கும் பீடத்தின் முன் இந்தக் கலைஞர்கள் ஒவ்வொருவராகச் சென்று தன்னைத்தானே பலியாக வழங்க தலைகொடுக்கிறவர்களாகவே இருக்கிறார்கள். அந்தச் சுயபலியின் வழியாக அவர்கள் அடைவதென்ன என்பதை அவர்கள் மட்டுமே உணரமுடியும்.
சூர்யா மற்றுமொரு பலிக்கலைஞர். இசைப்பித்து அவரை கோவையிலிருந்து சென்னையை நோக்கி விரட்டியடிக்கிறது. எப்படியோ படாத பாடுபட்டு லட்சுமண் சுருதி குழுவில் பாடும் வாய்பை அடைந்துவிடுகிறார். இரவு பகலாக எங்கெங்கோ கச்சேரிகள். பேருக்கு ஒரு வேலை, பிறகு கச்சேரி என ஓடிக்கொண்டே இருக்கிறது வாழ்க்கை. தற்செயலாக கிட்டிய ஏ.ஆர்.ரகுமான் சந்திப்பில் அவர் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அங்கே தோன்றும் பாடகி சொர்ணலதாவைக் கண்டதும் அவரோடு சேர்ந்து ஒரு பாட்டு பாடும் வாய்ப்பு தன் வாழ்வில் என்றாவது கிட்டுமா என ஏக்கம் கொள்கிறது மனம். ரகுமானின் அலுவலகத்தில் தொடர்புக்கான எண்ணை வாங்கிக்கொள்கிறார்கள். அழைப்பு இன்று வரும் நாளைவரும் என்ற கற்பனையோடு மேலும் சில நாட்கள் கழிகின்றன. எதிர்பாராத விதமாக நிகழும் ஒரு சாலைவிபத்து அவரை மருத்துவமனைவாசியாக மாற்றிவிடுகிறது. அருகிலிருந்து பார்த்துக்கொள்ள வந்த பெற்றோர் சலிப்போடு “போதுமடா சாமி, ஒன்னோட பாட்டும் கூத்தும், இப்பவே நீ கோயம்புத்தூருக்கு புறப்படு” என்று அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். வண்டியேற்ற வரும் அவர் மாமா ஒரு சில நாட்களுக்கு முன்பு தொடர்ச்சியாக நாலைந்து முறை வந்த ரகுமானின் அலுவலக அழைப்புகளை போகிற போக்கில் சொல்லிவிட்டுச் செல்கிறார். விதியை நொந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
கோவை திரும்பிய சில மாதங்களிலேயே ஒரு தொழிலதிபரின் அலுவலகத்தில் வேலை. திருமணம். ஆயினும் இன்னும் விடாத இசைப்பித்து மறுபடியும் அவரை சென்னைநோக்கித் தள்ளுகிறது. இப்போது மனைவியோடும் எட்டு மாதக் குழந்தையோடும் சேர்த்துவைத்திருந்த இரண்டு லட்ச ரூபாயோடும் சென்னைக்கு வருகிறார். அவர் நினைத்த வாய்ப்புகள் கூடிவரவில்லை. விஷக்காய்ச்சலால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மனைவியைக் காப்பாற்றுவது பெரும்பாடாகிவிடுகிறது. ஒரு தருணத்தில் கையில் வெறும் ஐம்பது ரூபாய் மட்டுமே எஞ்சுகிறது. மனம் கசந்துபோன சூர்யா மீண்டும் கோவைக்கே திரும்புகிறார். பேரூர் ஆற்றங்கரையில் புரோகிதம் செய்யும் தொழிலில் ஈடுபடுத்தி வருமானத்துக்கு வழிவகுக்கிறார் அவருடைய அக்காவின் கணவர். எப்போதாவது தேநீர்க்கடைகளில் ஒதுங்கும்போது ஒலிக்கும் பாடல் குரல் அவரை ஒருகணம் கனவை நோக்கித் தள்ளி கண்களை ஈரம் கொள்ளவைக்கிறது. ஆனால் பாடல் வரி முடிந்ததும் ஆற்றங்கரைக்கே சென்றுவிடுகிறார்.
‘ப்ளீஸ் ஆன்ஸ்வர் மை ப்ரேயர்’ என்னும் வரியை ‘ப்ளீஸ் கேன்ஸல் மை ப்ரேயர்’ என மாற்றிப் பாடிக் குழப்பும் பைரவன், பலகுரல் மன்னன் நீலமலை மகேந்திரன், குடிப்பழக்கத்தால் சிகரத்திலிருந்து தரையை நோக்கி விழுந்து தன்னைத்தானே இழந்துவிடும் கலைச்செல்வன், ‘என் கண்ணிரண்டைக் காப்பாற்றும் கண்ணிமையும் நீதான்’ என்னும் வரியை ‘என் கண்ணிரண்டைக் காப்பாற்றும் கண்ணு மையும் நீதான்’ என மாற்றி எழுதிவைத்துக்கொண்டு மனப்பாடம் செய்யும் குமார், இரவு முழுதும் நடந்த கச்சேரிக்கு முந்நூறு ரூபாய் கொடுக்கப்பட்டதைக் கண்டு மனமுடைந்து இரவுப்பேருந்தில் ஏறிச் செல்லும் நண்பன், தமிழை தன் மனம் போனபோக்கில் எழுதிவைத்துக்கொண்டு வாசிக்கும் பாலக்காட்டு எடக்கை ராமச்சந்திரன் என ஏராளமான மனிதர்களை சுந்தர் இத்தொகுதியில் கோட்டோவியங்களாகத் தீட்டி வைத்திருக்கிறார்.
கலைஞர்கள் தம் மனம் உணர்கிற ஒருவித நிறைவுணர்ச்சியால் வாழ்கிறவர்கள். தனக்குக் கைவந்த கலையை தெய்வத்தின் துணை என நினைத்து அதையே பயின்றுபயின்று அந்த வாசல் வழியே எவ்வளவு தொலைவு அந்தக் காட்டுக்குள் ஓட முடியுமோ, அந்த அளவுக்கு ஓடிக் கடக்க முயற்சி செய்பவர்கள். ஆனால் அந்தச் சின்ன மகிழ்ச்சியைக்கூட அந்தத் தெய்வம் அவர்களுக்கு அனுமதிப்பதில்லை. கசப்பையே பிரசாதமாக வழங்கும் கருணையற்ற தெய்வமாக இருக்கிறது காலம். அந்தக் கசப்பின் கடுமையை மறக்க மதுவில் விழுகிறார்கள் கலைஞர்கள். கசப்பாலும் மதுவாலும் உறிஞ்சப்பட்ட பிறகு வெற்றுச்சக்கைகளாக விழுகிறார்கள் கலைஞர்கள். அந்த மகத்தான கலைஞர்களின் கண்ணீர்ச்சுவடுகளே இந்த நூல்.
தோல்விகளின் வரலாற்றை கசப்பே படியாத ஒரு மொழியில் முன்வைப்பது ஒரு மாபெரும் கலை. சொந்தத் துயரை மறந்துவிட்டு, மேடையில் காதல் பாட்டைப் பாடும் இசைக்கலைஞனுக்கு அது இயல்பாகவே கைவந்திருப்பது ஆச்சரியமில்லை.
(நகலிசைக்கலைஞன். ஜான் சுந்தர். கட்டுரைகள். காலச்சுவடு வெளியீடு, 669, கே.பி.சாலை, நாகர்கோவில் 629001. விலை. ரூ.150)

Monday 2 July 2018

ஆர்மோனிய பூதம்

ஆர்மோனிய பூதம் 

னக்கோர் ஆர்மோனியக்காரியைத் தெரியும்
அடுத்த தெருவின் அகாடெமிக்காரியையும் தெரியும்
ஆர்மோனியத்திடம் பாடுகிற குழந்தைகள் பத்துப் பதினைந்தும்
அகாடெமியிடம் ஆர்மோனியங்கள் மட்டுமே பத்துப் பதினைந்தும் இருந்தன.
எப்போதாவது மாடிக்கு வந்து வானம் பார்ப்பாள் அகாடெமிக்காரி
மூன்று மாடி ஏறி வருவது எவ்வளவு சிரமம்.
‘கானாம்ருதம் பட்டால் வானம் கரைந்தொழுகும்’ பழம்பாட்டின் சுரங்களால்
கூரையோட்டுப் பொத்தலை அடைப்பாள் ஆர்மோனியக்காரி.
எனக்கு ஆர்மோனியக்காரியின் அம்மாக்காரியையும் தெரியும்
இருள்கவியும் அந்தியினந்தியில்
அகாடெமிக்காரியின் வீட்டிலிருந்து வெளியேறி 
என்னிடம் மாட்டிக்கொண்டாள்.
ஒளிந்திருக்கிற பூதத்தை
அகாடெமிக்காரியின் பாத்திரங்களில்
தேடிக்கொண்டிருப்பதைச் சொன்னாள்,
தேய்த்துத் தேய்த்து ஒருநாள் அதைப் பிடித்தும்விடுவாள்.
ஆர்மோனியக்காரி இனி எழுப்பப்போகிற மாடிகளை
துளைத்துக்கொண்டு இறங்குவது வானுக்கும்
கான்கிரீட்டைத்தாண்டி வான்தொடுவது கானாம்ருதத்திற்கும் எவ்வளவு சிரமம்



Friday 23 March 2018

வதனமே சந்திர பிம்பமோ




பார்க்கும் முகங்களின் சாயலை மற்றொன்றில் தேடிப் பிடிப்பதும்,  அதை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும்போது அவர்கள் முகங்களில் மிளிரும் வினோதங்களை வேடிக்கை பார்ப்பதும் என் நோய்களில் ஒன்று. நடனக்குழு நடத்துனன் வினோத்தும் நானும் தேனீரகத்தில் நடிகர் சரத்குமாரை வெகுபலவீனராகக் கண்டோம். பேச்சுக்கொடுத்த போது தன் பெயர் சுப்பிரமணி என்றார். கன்னக்கதுப்புகளுக்குள் பன்னை செருகி ஸ்வெட்டருக்கு மேல் சட்டையணிவித்ததும் தோளும், மார்பும்  தினவெடுக்க பயில்வான் மேடையேறி  சலக்கு சலக்கு சரிகைச்சேலை என்று துள்ளினார். சுவரோவியராயிருந்த  ரஜினிகாந்தையும், உணவகச் சிப்பந்தி விஜயகாந்தையும் கூட கண்டுகொண்டது இப்படித்தான். எழுத்தாளர் வண்ணதாசனின் முகத்தில் (ராபர்ட்) ராஜசேகரனைப் பார்த்த போது உடனிருந்த சாம்ராஜ்  அவருக்கு பாடகர் ஹரிஹரன் சாயலுமுண்டுஎன்றார். நான் பெரியப்பாவிடமே  நியாயம் கேட்டேன்.  நான் ஹரிஹரனா என்பது தெரியவில்லை ஜான்….. ஆனால், நான்தான் ராஜசேகரன்என்றவர் வெடித்துச்சிரித்தார். குழந்தைகளின் விளையாட்டைக் குலைத்துவிடாதிருந்த  நெகிழ்மனக்கலைஞர் வாழ்க. ’அப்பல்லாம்   நீலக்கலர் ஹோண்டா பைக்குல வருவாப்லதலைவன்அழகன்என்று சொல்லி சாம் காட்டிய புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்தேன். அப்போது பார்த்திருந்தால் பெரியப்பாவென்று  நிச்சயம் சொல்லியிருக்க மாட்டேன்.  சார் என்று கொஞ்சம் தள்ளியிருந்திருப்பேன். அறிவியல் வாத்தியார் போல அவ்வளவு பெரிய மீசை. அட, இப்போதும் கூட அவர்தானே தாவரவியல் வாத்தியார்!
                    சாம்ராஜின் முகத்து ரோமராஜ்யங்களையெல்லாம் வெள்ளைக்கு நிறம் மாற்றி மீசையைக் கொஞ்சம் முறுக்கி வைத்தால் இன்னொரு தோழர்.தியாகு! தோழருக்கு தாடியை ஒட்டி கண்ணாடியணிவித்தால் அவரே சாம்ராஜ். கவனம் பிசகினால் இயக்குனர் ராம் ஆகிவிடும் வாய்ப்புமுண்டு.  பிரபுதேவாவின் மூத்த சகோதரர்தான் இயக்குனர் ராம் என்றால் என்னுலகில் சரிதான். பிரத்யேகமான ஒரு கோணத்தில் மட்டும் பாடகர் உன்னி மேனனின் சாயல் தனக்கு இருப்பதாக  சாம்ராஜ் நம்புகிறார். நண்பர்களோ எல்லாக் கோணங்களிலும் அவர் பரோட்டா சூரியாகவே தெரிகிறார் என்கிறோம்.
லிபி ஆரண்யாவை நான் மம்மூட்டி என்பேன். சாம் அவரை கிரிக்கெட் வீரர் ஜாவீத் மியாண்டட் என்பார். லிபிக்கு நடிகர் முனீஸ்காந்தும், முனீஸ்காந்துக்கு லியோனியும் உறவின்முறை என்றெல்லாம் போகும் பேச்சு.
              ஃப்ரான்ஸிஸ் கிருபாவுடன் தங்கியிருந்த கவிஞர் சாம்சன், மிடுக்காக உடையணிந்து பிரெஞ்சுத் தாடியெல்லாம் வைத்துக் கொண்டு வந்தாலும் அவரது முகத்தில்  நடிகர் செந்தாமரை ஒளிந்துகொண்டிருப்பதை கண்டுபிடித்துவிடுகிறேன். சாம்ராஜோ சாம்சனுக்குள் இயக்குனர் கௌதம்மேனன் இருப்பதாக சொல்வார். உடனே என் கையை உதறி விட்டு பரோட்டா உன்னியின் கரங்களை உணர்ச்சி பொங்க பற்றிக் கொள்வார் செந்தாமரை மேனன்.
                      கவிஞர் இசையின் முகத்தைப் பிழிந்தால் இரண்டு தேக்கரண்டி பலே பாண்டியாசிவாஜி கணேசனும், ஒரு தேக்கரண்டி     நடிகர் ராஜேஷும், ஒரு தேக்கரண்டி  கவிஞர் அப்துல் ரகுமானும் எஞ்சுவார்கள். கைப்பிடியளவு ’Mister Bean’ Rowan Atkinson - ஐயும் போதுமான அளவு புத்தர் சிலையின் முகத்தையும் சேர்த்துப் பிசைந்தால் கிடைப்பது பத்திரிக்கையாளர் கவின்மலரின் முகம். பக்தி இலக்கியம் தந்த பரந்த நெற்றியோடு மரபின் மைந்தனின் முகத்தில் ஒளிர்வது பாரதிராஜாவின் ராஜா. சிறுகதையாசிரியர் விஷால்ராஜாவுக்கு கிருஷ்ணாவதாரம் போட்டுவிடுவதாக பொய் சொல்லி நீலச்சாயம் பூசிவிட்டால் அவரே ’Avatar’ நாயகன். கராத்தேமணியின் தமிழ்த்தம்பி கவிஞர் மகுடேசுவரன்! தேவேந்திர பூபதிக்கு சீனக்கராத்தே வீரரின் வாகு. அவருக்கும் விஷ்ணுபுரம் சரவணனுக்கும் சகோதரச்சாயலுண்டு. மஜித் மஜிதி படங்களிலோ, ருஷ்யப் படங்களிலோ காலச்சுவடு ஆசிரியர் கண்ணனைப் பார்த்திருக்கிறேன். அவர் கொஞ்சம் சதாம் ஹூசேனைப் போலவுமிருக்கிறார். அரபு ஷேக்குகளின் உடையை அவருக்கு அணிவித்துப் பார்க்கவேண்டும்.
                    முள்ளும் மலரும், மெட்டி, போன்றவற்றில் குணச்சித்திரம் செய்த சாமிக்கண்ணுவின் சாயல் கண்மணி குணசேகரனுக்கு.  கவிஞர் மோகனரங்கனின் மீசையைத் திருத்தி நாவலர்  நெடுஞ்செழியனுக்கும், கண்ணாடியை கழற்றி, வெயிலில் நிறுத்தி இளமையில் காமராஜ் என்கிற தலைப்பிற்கும் பொருத்தலாம்.
                         கவிஞர் அறிவுமதி, மகாநதியில் அமைச்சராக  நடித்த மோகன் நடராஜனையும், ஷோபாசக்தி, வெற்றிமாறனின் பொல்லாதவனில் நடித்த பவனையும், மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமி, ரன் திரைப்படத்தில் நடிகர் விவேக்கின் தந்தையாக வரும் சாத்தப்பனையும், ’‘விடம்பனம்’’‘ சீனிவாசன் நடராஜன், எந்திரன் வில்லன் புரபசர் போராவையும் எனக்கு நினைவு படுத்துகிறார்கள். ஹிட்லருக்கும் சாப்ளினுக்கும் ஒன்றேபோல மீசையென்று சொல்வதால் இரண்டு தத்துவங்கள் ஒன்றாகி விடாது என்கிற தைரியம்தான் இப்படியெல்லாம் எழுதுகிறது. நீங்கள் ஆலமரம் என்பதை நான் கிளிவீடு என்கிறேன். தவறென்ன?
             கவிஞர் சுகுமாரனைப் பார்க்கும்போதெல்லாம் பள்ளி நாட்களில் வளர்த்த பச்சைக்கிளி நினைவுக்கு வருகிறது. அவரிடம் நேரில் பேசுவதை விடவும்  தொலைபேசுவது வசதியாக இருக்கிறது. நேரில் எடுத்துக்கங்க சார் என்று  மிளகாய்ப்பழங்களை நீட்டி விடுவேனோ என்று ஒரு பயம். அவரது முகத்திற்குள் கிளியொன்று தங்கியிருப்பதைப் போல் நா.முத்துகுமாரின் முகத்தில் வெள்ளாடும், நாஞ்சில் நாடனிடத்தில் பெருங்கடுவன்பூனையும், சு.வேணுகோபாலிடம் சிறுபூனைக்குட்டியும், வெய்யிலிடம் சிறுத்தைப்புலியும், கிடாரி இயக்குனர் பிரசாத் முருகேசனிடம் கீரிப்பிள்ளையும் உண்டு. மறைந்த ஓவியர் வீரசந்தானத்தின் முகவமைப்பில் ’fighter fish betta’  -என்னும் மீனின் முழுவுடலும் இருக்கும். அசோகமித்திரனும்,கி.ராவும் அருகி வரும் டோடோபறவைகள்.


           சமுத்திரச்சித்திரத்தை சிப்பியில் கண்டு துள்ளும் பித்து இது. அதற்குத் தக்கதாய் தினமொரு முகமும் கிடைத்துக் கொண்டேயிருக்கிறது. எல்லோருக்கும் தெரிந்தவர்களாக  சொல்லுவதைத்தவிர பரவலாகத் தெரியாதவர்களையும் சொல்லுவேன். அது சுவாரஸியக் குறைவாயிருக்கலாம். மதுரை பேருந்து நிலையத்தில் முகம் முழுக்க பூத்த மருக்களோடு பாம்படமணிந்து, மூதாட்டி வேடத்தில் பழம் விற்றுக் கொண்டிருந்தார் Hollywood நடிகர் Morgan Freeman. பேசிப் பார்த்தும் பயனில்லை. வியாபாரத்திலேயே கருத்தாயிருந்தார். ஈரோட்டிலிருந்து திருப்பூருக்கு தினமும் ரயிலில் வருகிற நண்பர் முருக இளங்கோவுக்கு, பழம்பெரும் வில்லன் நடிகர் அசோகனின் முகம்!. (எழுத்துப் பிழையாகி பழம் பெறும் வில்லன் என்றால் விநாயகரைக் குறிக்குமோ?)         ஏனுங் ஜான், சாப்ட்டு போலாமுங்என்று கொங்கு பாஷை பேசுகிற அசோகனை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?. பாரதியாக நடித்த சாயாஜி ஷிண்டேவுக்கு தற்போது கோயமுத்தூர் மெல்லிசை நிகழ்ச்சிகளில் கிதார் வாசிக்கிற சுனிலின் பாத்திரம்.
                                               என்னோடு பாட்டு பாடுங்கள் என்கிற தலைப்பில் எஸ் பி பாலசுப்ரமணியம் நடத்திய தொலைக்காட்சி  நிகழ்ச்சியில் பேஸ்கிதார் வாசித்த தர்மராஜையும், சேலம் தக்கைசாகிப்கிரானையும்  பார்க்கும் போதெல்லாம் விளையாட்டாக வெயிட்டே இல்ல ஈஸியா இருக்கறதுஎன்பேன். வில்லாதி வில்லன் திரைப்படத்தில் கோதப்பட்டிக்குள் கவுண்டமணி பொதுவுடமை பேசுவார். அப்போது ஒருவர் வந்து நேக்கு ஒடம்புல காயம் தழும்பெல்லாம் வேணும் எனக் கேட்பார். அவரது சகோதரர்கள்தான் சாகிப்பும், தர்மராஜும்.
காசு, பணம், துட்டு, மணி.. மணி பாடல் புகழடைந்த போது, மாதம்பட்டி சென்னனூரைச்சேர்ந்த welder நாகராஜை  உள்ளூர் துணிக்கடை விளம்பரத்தில் கானா பாலாவாக்கினேன். முகப்பொருத்தத்திற்காகவே அந்த விளம்பரம் கொண்டாடப்பட்டது! தியாகி குமரன் மார்கெட்டில் கூலிமுக்கில் திறந்தமார்போடு நின்று மீசையை முறுக்கும் அண்ணா பாரம் தூக்கும் தொழிலாளர் சங்கத்தைச் சார்ந்த அண்ணன்களில் பெரும்பாலானோர் ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் மன்னர்கள்.
          அரசுப் பள்ளிகளுக்கு என்னோடு வருகிற நடிகர் பிரேம்ஜி அமரன், தன்னை காகித மடிப்புக் கலைஞர்  ’origami தியாகசேகர் என்று சொல்லிக் கொள்கிறார். முதல் பார்வையிலேயே கண்டுபிடித்துவிட்டேன். சேட்டைகளெதுவும் செய்யாமல் சாதுவாக இருந்தால் நமக்குத் தெரியாதாம்!  
                             விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த செல்வேந்திரனைப் பார்த்தால் இயக்குனர் லிங்குசாமியின் உடன்பிறப்பு என்பதாக தோன்றும். அதே வட்டத்தில் சுரேஷ் வெங்கடாத்திரியை பழைய ஸ்டெப் கட்டிங் கமலுக்கும், ரமேஷ் கண்ணாவுக்கும் இடையில் நிற்க வைக்கலாம்.

              இரண்டிரண்டு விழிகள், செவிகள், இதழ்கள், கத்தை மயிர், மூக்கு, இவற்றை வைத்துக் கொண்டு சரமாரியாக இயற்கை வனைந்து தள்ளும் முகங்கள் எத்தனையெத்தனை? யோசித்தபடியே மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு கிளம்புவதற்கு முன் ஏதாவது வாங்கி வர வேண்டுமா? என்று கேட்டதற்கு சூடாக வடையோ, பக்கோடாவோ கிடைத்தால் பரவாயில்லை என்றார்கள். ஒலம்பஸ்பேருந்து நிறுத்தத்தில் தள்ளுவண்டியில் வடை போடுகிறவரைப் பார்த்து அதிர்ந்தேன். டிக் டிக் டிக்  வில்லன்! அத்தனை அக்கிரமங்களையும் செய்துவிட்டு அப்பாவி கமலஹாசனை கொலைப்பழிக்கு ஆளாக்கிவிட்டு இங்கே  பஸ் ஸ்டாண்டில்  வடை தட்டுவதுபோல் நடிக்கிறாயே உருளைக்கிழங்கே! உன்னை மனதுக்குள் கருவியபடியே பொட்டலம் கட்டச்சொல்லி பணத்தை கொடுத்துவிட்டு எனக்கு எல்லா நியாயங்களும் தெரியும், எல்லா தர்மங்களும் தெரியும்என்று அவருக்கு மட்டும் கேட்கும்படி ரகஸிய குரலில் சொல்லி முறைத்தேன். தலையை நிமிர்த்தாமல் கல்லாப்பெட்டியை கிளறியபடியேசில்லறை இல்லியாண்ணா என்றார் பொருந்தாத கீச்சுக் குரலில்.
                   ’Kung fu Panda’ பார்த்த போது திரையரங்கில் துள்ளினேன். ஒரே படத்தில் மூன்று பேரைக்கண்டுபிடித்து விட்டேன். பாண்டாவின் வளர்ப்புத் தந்தை எழுத்தாளர் ஜெயமோகன். பாண்டாவின் உடல் மொழியில் கவிஞர் தென்பாண்டியன். எழுத்தாளர் மணி எம்கே மணிதான் மாஸ்டர் ஷிஃபு!மீசையில் கறுப்பேறும் தினங்களின் காஸ்மிக் நடனம் சிறுகதைத் தொகுப்பை சமீபத்தில் வெளியிட்ட மணி, அவரது கூந்தலால்  ’Ice Age’ படங்களைத் துவங்கி வைக்கும் அணிலைப் போலவும்  தெரிகிறார். அது போலவே  Hollywood நடிகர் Samuel Jackson-ன் ஸ்த்ரீபார்ட்தான் எலெக்ட்ரா  தொகுப்பின் கவிதாயினி ஸ்வாதி முகில் என்பவர். நடிகை Halle berry’ யின் சிகையலங்காரத்தில் இருப்பதால்  மற்றவர்கள் தன்னைக் கண்டுபிடிப்பது கடினம் என்பதாக ஒரு எண்ணம் அவருக்கு.   
                        இப்படியே பேசிக் கொண்டிருந்த போது இளங்கோ கிருஷ்ணன் சினிமாவுல casting க்கு உங்களை போட்டா நல்லா இருக்கும் என்றார். பதிலுக்கு  நன்றி சொல்லும் விதமாக அவரது கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தி வில்லன் நடிகர் ஆர் பி விஸ்வமும், நித்தியானந்தாவும் நல்லபேரெடுக்க  தேர்ந்து கொண்ட உடல்தானே உங்களுடையது? என்று மிரட்டினேன். சம்பவம் நடந்தது கோவையில். சேலத்திலோ தஞ்சை பிரகாஷ் சவரம் செய்து கொண்டு தக்கை பாபுவென்று சொல்லித்திரிகிறார். கண்கள் காட்டிக்கொடுத்து விடுகின்றன. கோவை இலக்கிய சந்திப்பைச் சேர்ந்த பொன்.இளவேனிலும், பெரியவர் பொதியவெற்பனும் ஒரே ஆள்தான். இரட்டை வேடம்!  தந்தை மகன் பாத்திரங்கள் கொடுக்க வேண்டும். இருவருக்குமே வினுச்சக்கரவர்த்தியின் சாயலுண்டு. ஆரண்யகாண்டத்தில் ஜாக்கிஷராஃபாக நடித்தவர் கவிஞர் அய்யப்ப மாதவன். வண்ணநிலவனின் முகவரிகளில் மலையாளத் திலகனும், மௌலியும், வீகே ராமசாமியும்  இன்னும் வசிக்கிறார்கள். கோவை சிறுவாணி வாசகர் மையப்பொறுப்பாளர் பிரகாஷ் ஓவியர் மணியம் செல்வனின் மன்னர்களில் ஒருவர். .செ வின் நவீன நாயகன் கதிர்பாரதி.
               இவ்வளவையும் பேசுகிற  இந்த மொட்டைத்தலையின் உள்ளும் புறமும் கொஞ்சம் சரக்கைச் சேர்த்தால் இயக்குனர் சுகாவின் சாயலில் இருப்பேன்…. இல்லையா? என்று    நண்பர்களிடம் கேட்டேன். புன்னகைத்து  இல்லை……காந்தி……என்று அவர்கள் துவங்கியபோது     மொட்டைத்தலை, வட்டக் கண்ணாடிசரிதான்…. தேசப்பிதா                என்றெண்ணி தாடைக்குக் கை கொடுத்தேன். ‘மீசையை மழித்து வெட்கப் பட்டால் அச்சு அசல் அப்படியே  நடிகை காந்திமதி தான் என்று பதில் வந்தது. இந்த முகத்துக்காகவாவது  நான் கொஞ்சம் பழமொழிகளைக் கற்றுக் கொள்ளவேண்டும்.

மொகத்துக்கு மொகம் கண்ணாடின்னாளாம்
இப்ப அதப்பத்தி ஒனக்கு என்னாடின்னாளாம்

  1. காலச்சுவடு- மார்ச்- 2018





பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...