Wednesday 30 October 2019

கள்ளூறுஞ்சுனை

பழைய வருடங்களின் 
இனிப்பை
எச்சில் கூட்டி அருந்தும்
ஈக்களின் இறகுகள் 
காய்வதில்லை

நம்தன  நம்தன  நம்தன  நம்தன.....
அஅ..அஅ.... அஅ..அஅ....  

தித்திப்பின் 
ஈரத்தில் நனைந்த
கழுத்துப்பட்டைகள்
நாயின் நாக்கென நீள
கால்சட்டைகளின் 
கீழ்ச்சுற்றளவோ
தேவாலய மணியளவு
விரிந்து வளர்கிறது
அசட்டை செய்து 
திரிகிறதொரு பித்துக்குளி.

தய்யரத்தய்யா தய்யரத்தய்யா
தய்யரத்தய்யா தய்யரத்தய்யா

இசைகசியும் 
டீக்கடையின்
குறுகிய இருக்கைகளில்
ஈக்கள் மொய்க்கின்றன.

பால்பாத்திரத்தில் 
துடுப்பை போடுகிற
தேநீர்க்காரா 
கொஞ்சம் ஓய்வெடு  
வா 
என் பரிசலில் வந்தேறு.

ஏ குரியா குரியா குரியா தந்தேலா பாலி
ஏ குரியா குரியா குரியா தந்தேலா வாலம்

மதுக்கூடத்தில்
நாம் ராஜாவுக்கும் 
மன்னருக்கும்
வேண்டுமட்டும் 
செலவு செய்வோம்.

கைத்தாளமிட்டோர்
அவரவர் சாப்பிட்ட 
விவரம் சொல்லி
பொற்காசுகளைப் 
பெற்றுச்செல்க.
இதோ இதோ 
போதையின் உச்சத்தில்
ஆர்மோனியப் பெட்டியை 
திறக்கிறார் மன்னர்  
அமைதி காக்கச்சொல்லி 
பிச்சைக்காரனைப்போல்
கட்டளையிடும் 
பித்துக்குளியின் 
காதுமடலை
உரசியுறுமுகிறது 
ராஜாவின் பாஸ்கிடார்

தம்தம்தம் தம்தம்த தம்தம்
தம்தம்தம் தம்தம் ததம்

ஐயோ மூடர்களே
இசை நுரைத்துப்
பொங்கி வழிந்த நாட்களில்
செவியை மறைத்து 
மயிரை வளர்த்தீர்கள்.

கர்ஜனை 
எதிரொலித்த திக்குகளில்
இப்போது நரிகளின் 
மூத்திரவாடை
இந்ததேசத்தின் தண்ணீர் 
கறுத்துப் போவதை
எச்சரித்துப்போகிறது 
தேவமின்னல்.

சுழலில் சிக்கிய 
பரிசலென
சுற்றத் துவங்குகிறது 
கிராமபோன் தட்டு

ஆஹா ஒஹோ ஏஹே ஹொய்
ஆஹா ஒஹோ ஏஹே ஹொய்






ஔஷதக் கூடம்





000

அப்பாவுக்கு புற்றுதானாம்.
உறுதியாகிவிட்டது.
மூப்பின் பொருட்டு இரண சிகிச்சையை 
நிராகரித்துவிட்டார் மருத்துவர்.
சங்கதி தெரியாமல்  
பேத்தியின் பிரதாபங்களில் 
தோய்கிறார் அப்பா.
கதாபிரசங்கியின் துடிமேளக்காரனாக
அப்பாவின் பேச்சுக்கெல்லாம் 
பக்கத்துப் படுக்கைக்காரர் 
முகிழ்நகை செய்கிறார்.  
அவரது தொண்டையில் 
துளையிட்டிருக்கிறார்கள்.

000

இப்போது எப்படி இருக்கிறது?
பரவாயில்லை
காற்றோட்டமில்லை .... நல்ல படுக்கையில்லை
பரவாயில்லை
செவிலியர் இல்லை ......மருந்து போதவில்லை
பரவாயில்லை..... பரவாயில்லை
வலி மிகும் சமயங்களில் மருத்துவரே இருப்பதில்லை
ஆனாலும்..... பரவாயில்லை  
நாம் கொஞ்சம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம்
இப்போதைக்கு இந்தக் கூரையின் மீது  குண்டு விழாது


000


அப்பாவுக்கு வெந்நீர் தேவை.
மருத்துவமனைக்கு வெளியே
நடுஇரவிலும் திறந்திருக்கும் 
அடுமனைகள் உண்டு.
நல்ல காபியும் சிகரெட்டும் கிடைக்கும்.
இருளில் வலுப்பெறும் 
பாடல்களை ஒலிக்கவிடுவார்கள்.
நான்கைந்து நிறுத்தங்களைத்தாண்டினால்
சந்துக்குள் ஒரு தேநீர்க்கடை இருக்கிறது.
அங்குதான் 
இளஞ்சூட்டுக் கருணை கிடைக்கும்.

000


என் மேலாளருக்கு 
எல்லாமே பொய்யாகத் தெரிகிறது.
’தலைமை மருத்துவர் 
முதல் சுற்று வரும்போது
பார்த்துவிட்டு வருகிறேன்’ என்றால்
ஒப்புக் கொள்ள மறுக்கிறார்.
பக்கத்து படுக்கைக்காரரின் மனைவி
தான் பார்த்துக் கொள்வதாகச் சொல்கிறார்.
’டாக்டரை நீங்களும் பார்க்க வேண்டுமா?’
’நேற்று மாலையே பார்த்தாகி விட்டது’
துணிகளை மடித்தபடி
’இன்று மாலை 
வீட்டுக்குப் போகிறோம் என்றார்.
அருகாமைக்கு வந்து குரலை இடுக்கி
’பெரிய டாக்டர் 
கையை விரித்துவிட்டார் தம்பி’
கணவரிடம் திரும்பி பரிவாக கேட்கிறார்
தாகமாக இருக்கிறதா ?.... 
கொஞ்சம் தண்ணீர் தரட்டுமா?

000

சகோதரியை பலாத்காரம் செய்தவர்களைக் கொன்று பழிவாங்கிய புரூஸ்லீ பதினான்கு வருடங்கள் கழித்து போன மாதம் தான் விடுதலையானார்.




உப்பு காரத்தை தவிர்த்து விடுகிறார். உடற்பயிற்சிகளில் சிறந்தது நடைப்பயிற்சியே               
என்கிறார்.முன் போல உணர்ச்சி வசப்படுவதில்லை. சாதுவாக நடந்துகொள்கிறார்.
பிரச்சினைகளை நிதானமாகக் கையாளுகிறார். தூங்கும் புத்தனை வணங்கிவருகிறார்.
அண்ணன் மகளுக்கு நிஞ்ஜாக் கட்டைகளில் கயிற்றை இணைத்து ஸ்கிப்பிங் விளையாடக் கொடுத்துவிட்டார். டீ ஷர்ட்டுகளை அணிவதில்லை. முழுக்கை ஜிப்பா மட்டும்தான். விபத்துகளை பார்க்க நேர்ந்தால் முற்றத்தில் கால்களைக் கழுவிக் கொண்ட பின்பே வீட்டுக்குள் நுழைகிறார். ஆனால்.....அவர்........ அக்கிரமங்களை பார்த்துக்கொண்டு சும்மாயிருப்பதில்லை. நடு இரவில் எழுந்து கொள்கிறார். நயவஞ்சகர்களின் முதுகுத்தோலை உரித்தெடுக்கும் நான்கைந்து வரிகளை ருஷ்யப் பெயரில் பதிவிட்டபிறகே படுக்கைக்குப் போகிறார்.








Tuesday 22 October 2019

நீலச்சிலுவை சாபங்கள்

நிலைமை ஒரு நாள் தலைகீழானது.
வனங்களின் ஆட்சியின் கீழ் வந்தன
நவீனப் பெருநகரங்கள்.

விருட்சங்களின் கால்களில் 
விழுந்து கதறுகின்றன 
கட்டடங்கள்.

உடைகளின்றி 
கொத்துக்கொத்தாக தொங்குகிறீர்கள்
கோழிகளின் சைக்கிள்களில்.

நறுக்கப்பட்ட 
மனிதவிரல்கள் கோர்த்த சரங்களை சார்த்தி 
துவங்குகிறது ஐந்தறிவுக்கோவிலின் பூசை.

தங்கள் வாடிக்கையாளர்களிடம்
நெஞ்செலும்பு நல்லதென சொன்னபடியே
லாவகமாக உங்கள் தோலை அகற்றும் வெள்ளாடுகள்.
( மர்மஉறுப்புகளையும் கேட்டு வாங்குமொரு கும்பல்)

பூஞ்செடிகளின் மரண ஊர்வலத்தில்
வழியெங்கும் தூவத்தேவை
நூற்றுக்கணக்கிலான காதுமடல்கள்.

இளகிய மனங்கொண்ட பூனைகள்
மனிதக்குட்டிகளை வளர்க்கக் கூடும்.

கதியின்றி நடுத்தெருவில்
தோழியைப்புணருகையில்
கல்லெறியாமல்
உங்களை கடக்கட்டும் நாய்கள்.







ரொம்ப சுமாராகப் பாடுபவன்



கலைப் பெருந்தாகம் 
தன்னுள் பற்றியெரிய அலையும் 
ரொம்ப சுமாராகப் பாடுபவனுக்கு
பருகக்கிடைக்கிறது 
மேசைக்கரண்டி அளவேயான 
மண்ணெண்ணை.

கனவுகளின் வஸ்திரங்களை 
நெசவு செய்து கொள்ளும் அவனை 
அம்மணமாக்குகின்றன 
ஸ்வரஸ்தானங்கள்.

கலைமகளின் 
வாரிசுச்சான்றிதழ் 
எதுவுமில்லை அவனிடம் 
எனினும்
கண்ணில் சுண்ணாம்பு வைத்து 
தெருவில் விட்டு விட்ட 
அவளைத் தொழுதே முழங்குகிறது 
துயரனின் குரல்.


வார இதழ்களை 
சுருட்டிப் பிடித்து
ஒலி வாங்கியை தரிசிக்குமவன் 
கீதங்களைக் கொண்டாடி 
தனக்கே காட்சியளிக்கிறான் 
ஒரு தேற்றறவாளனாக


அடுமனைகள் 
தேனீரூற்றி
கோல்டு ஃபில்டர் தூபம் காட்டி 
அவனை வளர்த்தெடுக்கின்றன.


ரொம்ப சுமாராகப் பாடுபவன் 
இரண்டுவரிகளை
உங்கள் மீது தெளித்து விட்டு 
கிரணங்கள் விழும் திசையை
ஊடுருவிப் பார்க்கிறான்.

நாதங்கள் தீண்டத்தீண்ட                                                             நாகமாகிறவனின் உடலில்                                                      
உக்கிர தெய்வத்தின் நிறம் பாரிக்கிறது                                                       
ஏகடியம் பேசுகின்றன சாத்தான்கள்

தன் காயங்களின் மேல் 
திரையிசையை 
பிதுக்கித் தடவிக் கொள்ளுமவன் 
மனைவியின் இறுதிச் சடங்கில் 
திடீரென வீறிட்டுப் பாடுகிறான் 
ஊளையை ஒத்து

“....பறவையே எங்கு இருக்கிறாய்........... 
 .....பறக்கவே என்னை அழைக்கிறாய்....

படபடவென செட்டைகளை 
உதறுகின்றன கல்லறைப்புறாக்கள் 
                                                   
”.....தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே.....








பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...