Tuesday 10 December 2019

ஆய்வாளர்.அம்மா


எப்படித்தான்சொன்னாலும்
பொய்யென்று
கண்டுபிடித்துவிடுவாள் அம்மா.

விளையாடுகின்ற மகன்
திடுமென்று முகம் வெளுத்தால்
தெரிந்துவிடும் அவளுக்கு
ஆய் வருதா என்பாளே
இவளென்ன போலீஸா?

நேற்றந்தப் பேருந்தில்
உன் மடியிருந்த மரக்கன்றை
தயங்கித் தயங்கி கை நீட்டி
தொடப்பார்த்தாள் அச்சிறுமி

ஒரு கணத்தில் மரக்கன்றும்
தளிர்க்கையை நீட்டியதே
நான் பார்த்தேன் நம்பு அம்மா!

பல்லிப் பாப்பா


முளைவிட்ட
அத்தனை கிளைகளிலும்
நட்சத்திரம் பூத்து விட்ட
புது நிறக்  குழந்தை.

செங்குத்துச் சுவரில்
எங்கே ஓடுகிறாய்
என் முத்தே?

என்ன செய்கிறாள்
பொறுப்பில்லாத உன் அம்மா ?

எந்தச் சுவரின் முக்கில் நின்று
யார் கதைக்கு 
உச்சுக் கொட்டிக் கொண்டிருக்கிறாளோ?

Saturday 7 December 2019

யாழ்ப்பாணன்




சந்தன் பஸ்ஸுக்குக் காத்திருந்தார். அவஸ்தையாக இருந்தது. என்னவென்று சொல்ல முடியாத அவஸ்தை. வசந்தனுக்கு பியானோ வாசிக்கத் தெரியும். கிதார் வாசிக்கவும் தெரியும். வயலினையும் கூட ஓரளவு.... ஓரளவு என்றால் மோசமில்லை என்கிற அளவு வாசித்து சமாளித்து விடுவார். அவருக்கு மனித மனங்களை அவற்றின் கீழ்மைகளோடு சேர்த்து வாசிக்கத்  தெரிந்திருக்கவில்லை. மனதுக்குள் தோன்றியதை மறைக்காமல் வெளியே சொல்லிவிடுகிறவர் என்பதால் வசந்தன் நட்பும் உறவுகளும் இல்லாதிருந்த மனிதராயிருந்தார். காசுக்காக கச்சேரிகளுக்கு வாசிக்கப் போவதிலும் அவருக்கு உடன்பாடில்லை. சிவானந்தா காலனி சத்திய நாராயணா மண்டபத்தில் கச்சேரி நடந்து கொண்டிருக்கும் போதே யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் எழுந்து வேளியே வந்து விட்டார்..
’.....அப்புறம் என்ன செய்யச் சொல்றீங்க? அவனவன் மேஜர் மைனரு, செவன்த்து, டிம்னிஷு, ஆகுமென்ட்டு, குரோமோடிக்குனு படிச்சுட்டு  வந்து வாசிக்கணும் இவனுக சுதியே சேராம, ரோஸ் பவுடரைப் பூசிக்கிட்டு வந்து பாட்டெடுத்து நாம்படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்பானுக அப்டியே கிடாரைத் திருப்பி மண்டையோட போட்டுர்லாமான்னு தோணுச்சு ... வேண்டான்ட்டு வன்ட்டன்...
.....சுதி சேராத சூத்துக்கு பின்னால ஒக்காந்து வாசிக்கவா மியூசிக் படிச்சன்?..... ’’’‘  என்று வெடிப்பார். வசந்த்தின் இந்த அவஸ்தை மனைவிக்கும் மாமியாருக்கும் புரிய வேண்டுமே?
அந்த முண்டை ம்க்கும்ம்பாஅவங்காத்தா ஏம்ப்பா மில்லுக்கே போலாமில்லம்பா... எல்லாம் நேரம்...
வசந்தன் சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே வந்து விடுவார். எல்லா இந்த் தாளினால வந்தது.... சிகரெட் புகைந்த கையை உயர்த்தி வசந்தன் காட்டிய திசையில் சந்தனப் பொட்டோடிருந்த பெட்டிக்கடைக்காரரின் தலைக்கு மேல் தொங்கிய வார இதழ் தோரணத்தில் குங்குமப் பொட்டோடு சிரித்த முகமாயிருந்தார் இளையராஜா.ஒழுங்காப் படிச்சு வேலைக்குப் போயிருப்பேன் அந்தப் பாட்ட கேட்டுத் தொலைக்காம இருந்திருந்தா வலது கையை நெஞ்சுயரத்திற்கு கொண்டுவந்து அதை கிதாரின் ஃப்ரெட் போர்டாக பாவித்து மணிக்கட்டின் கீழ்ப்புறங்கையை நமக்குக் காட்டி அதை இடக்கை விரல்களால்  பற்றி நான்கைந்து கார்ட்ஸ் பொஷிஷன்களை நொடிக்கொன்றாக மாற்றிக்காட்டிவிட்டு,
ஜிஞ்ஜிரக்கர ஜிஞ்ஜிரக்கர ஜிஞ்ஜிரக்கர ஜிஞ்ஜிரக்கரவாயால் கூட்டுஸ்வரப்பந்தலைக் கட்டியவர் கையால் காற்றில் வாசிக்கிற மாதிரி அபிநயித்தார். வாயிலிருந்த சிகரெட்டை எடுத்துவிட்டு
ஆ...ஆஹா...ஹாஎன்று பாதி ஹம்மிங்கை பாடி நிறுத்தி விட்டு மஹாலட்சுமியின் காசு விழுகிற கை போல கீழே  காட்டி மீதியை
ஆ...ஹா ஹா ஹா அஹஹா ஆஹாஹ ஹாஎனப் பாடிவிட்டு
ஹேய்..பாடல் ஒன்று.......ராகம்.....ம்ஹீம்.....ஸாரி...ஐம் நாட் அ ஸிங்ஙர்
ரியலி....ஹீ இஸ் அன் ஏஞ்சல் ஃப்ரம்.... இரண்டு கைகளையும் தலைக்குமேல் உயர்த்திக் காட்டினார்.

ந்துவிட்டது பொள்ளாச்சி பஸ். அதன் நெற்றியில் சுருதி என்றிருந்ததைப் பார்த்துப் புன்னகைத்தவாறு ஏறி உட்கார்ந்தார். பேருந்து முழுவதையும் வியாபித்திருந்த ஹிட்டுப்பாடல்களின் சத்தம். பஸ் முழுக்க விடலைப் பையன்கள். டிரைவரின் சங்கீத ரசனையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பக்கத்திலிருந்த  நடுத்தர வயதை தாண்டிய  பொட்டு வைக்காத பெண்ணொருத்தி
யேசப்பா என்ன இப்படி சத்தம் என்றாள்.
வசந்தன் ஊழியங்களுக்கும்   கொஞ்ச நாள் வாசிக்கப் போனார்.
அவனுகளுக்கு இவனுகளே பரவால்ல பத்துல ரெண்டு பேருதான் பாடுவான் மத்தவன்லாம் கத்துவான் கேட்டா கண்டுக்காதீங்க பிரதர்ம்பான். கிட்டத்தட்ட எல்லாருமே ரெண்டு பொண்டாட்டிக்காரனுக என்பார்
ம்க்கும்...இருக்கற ஒரு பொண்டாட்டிய காப்பாத்த வக்கில்ல....
எங்கம்மாவ ஆஸ்பத்திரிக்கி கூட்டிட்டுப் போனும் காலெல்லா வீங்கிக் கெடக்குது. தயவு செஞ்சு கெளம்பிப்போயி எங்கண்ணனப் பாத்து பணம் வாங்கிட்டு வாங்க  என்று சொல்லியனுப்பியிருந்தாள் மனைவி.
பஸ்ஸின் பாட்டுச்சத்தம் தலையை வலித்தது. இசை என்கிற பெயரில் செய்யப் பட்டிருந்த வன்முறையை தாங்கிக் கொள்ள முடியவில்லை.  நடத்துனரிடம் மெதுவாக
சுருதின்னு பேரப் பாத்தேன், இல்லியா? அபஸ்ருதியா என்றார்.  நடத்துனருக்குப் புரியவில்லை. பொதுவாய் சிரித்து விட்டு கயிறைச்சுண்டி பெல்லடித்துப் போனார். பிளஸ்டிக் கயிற்றின் அதிர்வு இன்னும் அடங்க வில்லை. பேஸ் கிதார் ஸ்ட்ரிங்கின் அளவு இருக்குமா இல்ல ஒரு சுத்து பெருசா இருக்கு என்று வாய்விட்டு சொன்னார் .பக்கத்தில் இருந்தவன் வினோதமாகப் பார்த்தான். இதே மாதிரி பஸ்ஸில் பேஸ் கிதாரைத் தூக்கிக் கொண்டு ஈரோட்டுக்கு போன ஞாபகம். பெரிய பேனரில் இருந்த சேது தனியாக குழு வைத்து கச்சேரி செய்து கொண்டிருப்பதாகவும் வந்து வாசிக்கும்படியும் கேட்டுக் கொண்டார் என்பதற்காக பஸ்ஸேறிப் போனால் அங்கே டான்ஸ் ப்ரொக்ராம் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து, மண்டபம் மாறி வந்து விட்டோமா குழம்பித் திரும்பினால் ஜிகினா ஜிப்பாவில் சேது  நிற்கிறார். நம்ம ப்ரொக்ராம்தான் வாங்க ஜி என்றார். அவர் வயசுக்கு ஜி சேரவில்லை. கிடாரிஸ்டைக் காணாமல் ஏங்க... கிடாரிஸ்ட்டு?  என்றதும் மிகப் பெரிய நகைச்சுவையைக் கேட்டது போல பலமாக சிரித்தார்.  நீங்கதான் ஜி கிடாரிஸ்ட்டு ஹெஹ்ஹெஹ்ஹே ‘ என்று பல்செட்டைக் காட்டினார். இல்ல லீடு கிடார்?” ”எல்லாம் பாத்துக்கலாம் ஜி மொதல்ல செட் பண்ணுங்க..... ம்ம்.....ஏம்பா சந்திரன்! சாருக்கு காபி குடுங்க என்றார். மேடையின் முன்பக்கம் கீ போர்டு இருக்க வேண்டிய இடத்தில் டிரம் இருந்தது. தபேலா இருக்க வேண்டிய இடத்தில் ட்ரிபிளும் தும்பாவும் அண்டா மூடியை கவிழ்த்தாற்போல் ஒரு சிம்பலும் இருந்தது. ட்ரம்ஸுக்கு இடதும் வலதுமாயிருக்குமே அதுதான். டிஷ்ஷ்ஷ்ஷ்ஷ் சம்போ மஹாதேவா உலகத்தைக் காக்கும் பரம்பொருளேபழைய புராணப்படங்களில் வசனத்தை துவங்குமுன் தட்டுவார்கள். கச்சேரியில் அது அளவுக்கதிகமாய் தட்டப்பட்டது. பி ஜி எம் களின் மேல் மனவிலாவுக்கு வருகை புரிந்திருக்கும்என்று கூச்சப்படாமல் பேசினார்கள். பின்னால் ஒளித்து வைத்திருந்த கீபோர்டில் ஒளிந்து கொண்டிருந்த ஆபரேட்டர். ஃபிளாப்பியை செருகி ஆன் பண்ணி விட அது குரங்கு பொம்மைபோல டம டம டமவென்றது. பாடகர் என்று குறிப்பிடப் பட்டவன் விண்ணுக்கும் மண்ணுக்குமாக குதித்து குதித்துக் கத்தினான். அவன் சட்டையிலும் ஒரு கூலிங் கிளாஸ் தொங்கியவாறு இருந்தது.எதுக்கு ரெண்டு?“ பேண்ட்டில் எட்டு அல்லது ஒன்பது பாக்கெட்டுகள் இருந்தும் கண்ணாடியை ஏன் அங்கே வைத்திருக்கிறான் என்று குழம்பினார் வசந்தன். ஒவ்வொரு குதியலுக்குப்பின்னும் சேதுவின் கால்களைத் தொட்டு ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டான். குருபக்தி. சேது வசந்தனைக் கடந்த போது ஏங்க ஒரு மெலடி போடலாமில்ல என்றார் வசந்தன். சேது திரும்பி  “ராஜா சார் பாட்டா என்றதும் மகிழ்ந்து“ ம்ம்ம் ஆமாம் என்று மண்டையை ஆட்டினார் சிறுவனைப்போல. சந்திரன் ராஜா சார் சாங் என்ன இருக்கு பேஸ் கிடாரிஸ்ட் கேக்கறார் பாருங்க  சந்திரன் வந்து சார் ஆசையக் காத்துல தூதுவிட்டு போடுவாமா என்றார் முகத்தை சுழித்து மண்டபத்துல மெலடி ஏதாவது போடுங்கன்னா என்றார் நீங்களெ சொல்லுங்க பொன் வானம் பன்னீர் தூவுது  வாசிப்பாங்களா பொன் வானத்தில் பேஸ் கிதார் ஆணரவமாக மாறிப் பெண்குரலைப் புணர்ந்தெழுவதைக்  கண்டு சிலிர்த்திருக்கிறார் வசந்தன். என்னது வாசிக்கறதா...ஹா ஹா சார் இங்க எல்லாமே அட்டைதான்!  ஹண்ட்ரட் பர்சண்ட் ஃபீடிங் ஒன்லிஎன்ற சந்திரனை முறைத்துப் பார்த்துவிட்டு அமைதியாகி விட்ட வசந்தன் மனதளவில் பொன் வானத்திலிருந்தார். கச்சேரி முடிந்த்தும் சாப்பிட்ட பின்பு கைகழுவி விட்டு வந்து பார்த்தால் யாரையும் காணோம் சேது நம்பருக்கு போன் செய்தார் ஜீ பக்கத்துல தான் இருக்கேன் ஜி!  வந்துருவேன் வெயிட் பண்ணுங்க ஜி ப்ளீஸ்’ ‘ என்றவர் ஒரு மணி நேரத்தில் வந்து விட்டார். ஒரே பழ வாசனை.  “ஜீ தேங்க்யூ ஜி தேங்க்யூ ஜி இருகரம் குவித்து கும்பிட்டு சிரித்த முகமாக வழியனுப்பிய சேது கைகளைக் குலுக்கிய போது லாவகமாக ரூபாயை கைக்குள் வைத்துவிட்டார். மரியாதை காரணமாக அங்கே அதைப் பார்க்காமல் வெளியே வந்து பார்த்த போது மூன்று நூறு ரூபாய்கள் மட்டும் இருந்தன. அழுகை வருவது போலிருந்தது வசந்தனுக்கு. எலைட்ஸ் டேவிட் சார் கவருக்குள் ஐநூறு வைத்து பஸ்ஸுக்கும் டிஃபனுக்கும் தனியாகத் தருவார். ஒன்று வாசித்த திருப்தி வேண்டும் அல்லது இந்த பாழாய்ப் போன  பணமாவது வேண்டும். இரண்டுமே இல்லையென்றால் எப்படி ? தயங்கித் தயங்கி மீண்டும் மண்டபத்தின் உள்ளே போனார் . கல்யாண வீட்டு பொம்பளையொருத்தி சேதுவிடம் ஜூப்பரா இருந்திச்சி கச்சேரி, பீடா சாப்புடுங்க என்று கொனைந்து கொண்டிருந்தாள். இரண்டு தோள்பட்டையிலும் பிங்க் கலர் ஸ்ட்ராப் வெளியே வந்திருந்தது. சேது இவரைப் பார்த்து ஜீ பீடா சாப்புடுங்க ஜீ என்றார். வசந்தன் இடவலமாய் தலையாட்டி பேமெண்டு ரொம்ப கம்மியா இருக்கே சார் என்றார். ஜீ... தோளில் கைகளைப் போட்டு  வாசல் பக்கமாக அவரைத் திருப்பி கூட்டிக் கொண்டு நடந்த சேது நம்ம கச்சேரிக்கெல்லாம் கிடாரிஸ்டே வேண்டியதில்ல நீங்க கஸ்டப் பட்றிங்கன்னுதான் கூப்டேன்  போகப் போக பாத்துக்கலாம். ஓக்கேவா ஜீ.... நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா பாத்து பண்ணிக்கலாம் என்றார். அதுவே கடைசி. இனி இந்தப் பக்கமே திரும்பிப் பார்ப்பதில்லை என்று முடிவு செய்தார் வசந்தன். பேஸ் கிடாரை மதிக்காத தாளில்லாம் பேனரை நடத்தறதா ? ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. ஆத்து ஆத்துப் போனது வசந்தனுக்கு. பஸ்ஸேறி ஜன்னலில் தலையை சாய்த்து அமர எதிர்க் காற்று, கண்ணீரை வழிய விடாமல் தூக்கிக்கொண்டுபோனது
கிட்ட நெருங்கி வாடா   லேக்காங்கொம்மா    லேக்காங்கொய்யா   கக்கூஸ் போகையில் முக்குவது போன்ற குரலில் ட்யூட்டர் வழியாக  நாராசமாக பிரசவமான அந்தச் சத்தம் காது சவ்வைக் குத்தியதும்  வசந்தன் தன்னை மறந்து கத்தினார்.
டேய்ய்ய்ய்.... பாட்ட நிறுத்து இல்லேன்னா பஸ்ஸ நிறுத்து
இரண்டுமே நின்றது. 
சுருதியின் நடத்துனர் என்னய்யா ரவுடித்தனம் பண்றியா இஷடமில்லன்னா எறங்கிக்க டிக்கட்ட வாங்கிட்டா பன்னாட்டு பண்ணுவியாஎன்றான்.
வசந்தன் மியூசிக் ப்ளே பன்றேங்கர பேர்ல நீங்கதான்டா ரவுடித்தனம் பன்றீங்க ராஸ்கல்ஸ் என்று கத்தினார். கெட்டவார்த்தைய திருப்பி போட்ருக்காண்டா
வசந்தனின் மண்டைக்குள் பளீர் பளீரென மின்னல்கள் வெட்ட அவரது மனைவி, அவளது தாயார், ரோஸ் பவுடர் பாடகன், ரெண்டு பொண்டாட்டிக்கார பாஸ்டர், ஜிகினா ஜிப்பா சேது, கூலிங்கிளாஸ் போட்டுக் கொண்டு ஒன்பது பாக்கெட்டுகளோடு குதிக்கிறவன் எல்லோரும் சின்ன மின்னல்களுக்குள் தோன்றி மறைந்த காட்சிகளுக்கு பஸ் டிரைவர் போட்ட பாட்டு பின்னணியாக ஒலித்தது. லேக்காங்கொம்மா    லேக்காங்கொய்யா வசந்தன் கைகள்  விறைக்க பஸ்ஸின் கூரையைப் பார்த்து பாஸ்டர்ட்ஸ் பாஸ்டர்ட்ஸ்! என்று வீறிட்டார்.
லேடிஸ்லாம் இருக்காங்க தண்ணியப் போட்டுட்டு வந்து கெட்டவார்த்தை பேசறானுக சார் உள்ளேயிருந்து முகமே இல்லாத குரல் ஒலித்தது. முன் சீட்டிலிருந்த கல்லூரி மாணவன் எழுந்தான். எழுந்த வேகத்தில் வசந்தனின் முகத்தில் குத்தினான். பின்னாலிருந்த இளம் பெண்ணொருத்தி கை தட்டினாள். வசந்தன் பஸ்ஸின் படியிலிருந்து கீழே விழுந்தார்.
போலாம் ரைட் என்றார் நடத்துனர். பஸ் கிளம்பி விட்டது.

                  சாலையோரத்து புற்களின் ஈரமும் வாசனையும் வசந்தனுக்கு ஆதூரமாயிருந்திருக்க வேண்டும். இரண்டு மூன்று நிமிடங்களுக்குப் புற்களில் முகம் புதைய அம்ம...... அம்ம...... என்று அனத்தியபடியே படுத்திருந்தார். பின்பு குத்துக்குத்தாய் மண்டியிருந்த மூக்குத்திப் பூச்செடிகளைப் பற்றி எழுந்து உட்கார்ந்து எச்சிலும் ரத்தமும் வழிய சிதறிக்கிடந்த காசுகளைப் பொறுக்கிக் கொண்டே சின்னக் குழந்தை போல னத்தினார். அனத்தியவாறே எழுந்தார். இரண்டடி எடுத்து வைத்திருப்பார். அடுத்து வந்த பேருந்து அவரைத் தாண்டிப் போக அதன் உள்ளிருந்து என்ன என்ன கனவு கண்டாயோ சாமீஎனக் கசிந்த பாடல் காதில் விழுந்த கணத்தில் வெடித்துக் கதறினார் வசந்தன். இளையராஜாவின் குரல் கொண்ட அந்த பஸ்ஸுக்குப் பின்னால் அப்ப...... அப்ப......என்று கத்திக் கொண்டே ஒடினார். 

- நகலிசைக்கலைஞன் நூலில் இருந்து






Monday 11 November 2019

திருவருணைக் காப்பு


முன்னங்கால்கள் இல்லாத நாய்க்குட்டி
தன்னிடம் உள்ளதென்றாள்.

’கருணையம்மா கருணை’ என்றேன்.

’பின்னங்காலிரண்டும் நசுங்கி விட்ட
பூனையொன்றும் என் பிள்ளை’ என்றதும்தான்
’அருணை அருணை’
என்றந்தக் கைகளை பிடித்துக் கொண்டேன்.

’தரையுரசும் பூனைமுலைக்கு
பளிங்குத்தள வீடு பார்த்தோம்’
என்றவள் சொன்ன போது
வாயிழந்து கரங்குவித்தேன்.

மாலைக் கண் நோய் கொண்ட
இன்னுமொரு நாய்க்குட்டி
உண்டெனச் சொல்லுகையில்
உடைந்திருந்தேன்.

‘கருப்பு வெள்ளைக் காட்சிகளில்
வெள்ளை மட்டும் மங்கி விடும்
மற்றபடிக் குறையில்லை ‘ என்றாளே

உள்ளத் திருவோட்டில்
ஒரு பருக்கை கூட இல்லை.

ஐயன்மீர்!
தங்கள் வசம் உள்ளவற்றில்
நல்லதொரு சொல் இடுக

அன்னையின் முழுக்கிற்கு இன்னும்
ஆயிரஞ்சொல் வேண்டும்!





Saturday 9 November 2019

இந்தக் கடலில் ஒரு சிட்டிகை உப்பில்லை

கடலின் கரையில் என்னத்தை தேடுகிறாய் நங்கை?

உன் மகள் சங்குகளை சேகரிக்கிறாள் பார்த்தேன் .

நீ எதை தேடுகிறாய் நங்கை? 

கொற்றவை வெறிப்பதுபோல் 

ஏன் இப்படி கடலை வெறிக்கிறாய்? 

நான் கவனித்தேன் 

ஆண்களைத் தவிர்த்து அலைகளையே பார்க்கிறாய்

உனது ஒரு தம்ளர் பௌர்ணமியையும்   

கடல் குடித்துவிட்ட கதையை 

உம் கொட்டிக் கேட்கிறாள் மகள். 

இந்தப்பெருங்கடலின்வசம்

 தாகத்துக்கொரு மிடறில்லை

நம் வாழ்வு ருசிக்க  

சிட்டிகை உப்புமில்லை மகளே

ஆல்பத்தின் எல்லாப் புகைப்படங்களிலும்  

நீயும் மகளும் கடலும் இருக்கிறீர்கள்

யாரும் எதிலும் சிரித்துக் கொண்டில்லை 

நேற்றென் கனவில்                                                                             

நானோர் காட்சியை நிறுவினேன் நங்கை.

நீயும் மகளும் நடந்து வர                                                                        

கழுவிய பாதையை விரிக்கிறது கடல்.

பழுப்பில் வெள்ளி பூத்த சிப்பியொன்றை                                                        

மகளுக்குப் பரிசளித்து                                                                                  

பாதங்களை முத்திக் கொள்கிறது.




Saturday 2 November 2019

எழுமின்!

தாழத்தரை
வீழ்ந்த
நிழல்
மெதுவாய்
மெது மெதுவாய்
நிலமூர்ந்து
ஊர்ந்தூர்ந்து
மரம் பற்றி
கிளையேறி
வனமேறி
மலையேறி
வானேகி
இருளாகி
இரவாகி
கனிநிலவை
கவ்விற்றே காண்.


Wednesday 30 October 2019

கள்ளூறுஞ்சுனை

பழைய வருடங்களின் 
இனிப்பை
எச்சில் கூட்டி அருந்தும்
ஈக்களின் இறகுகள் 
காய்வதில்லை

நம்தன  நம்தன  நம்தன  நம்தன.....
அஅ..அஅ.... அஅ..அஅ....  

தித்திப்பின் 
ஈரத்தில் நனைந்த
கழுத்துப்பட்டைகள்
நாயின் நாக்கென நீள
கால்சட்டைகளின் 
கீழ்ச்சுற்றளவோ
தேவாலய மணியளவு
விரிந்து வளர்கிறது
அசட்டை செய்து 
திரிகிறதொரு பித்துக்குளி.

தய்யரத்தய்யா தய்யரத்தய்யா
தய்யரத்தய்யா தய்யரத்தய்யா

இசைகசியும் 
டீக்கடையின்
குறுகிய இருக்கைகளில்
ஈக்கள் மொய்க்கின்றன.

பால்பாத்திரத்தில் 
துடுப்பை போடுகிற
தேநீர்க்காரா 
கொஞ்சம் ஓய்வெடு  
வா 
என் பரிசலில் வந்தேறு.

ஏ குரியா குரியா குரியா தந்தேலா பாலி
ஏ குரியா குரியா குரியா தந்தேலா வாலம்

மதுக்கூடத்தில்
நாம் ராஜாவுக்கும் 
மன்னருக்கும்
வேண்டுமட்டும் 
செலவு செய்வோம்.

கைத்தாளமிட்டோர்
அவரவர் சாப்பிட்ட 
விவரம் சொல்லி
பொற்காசுகளைப் 
பெற்றுச்செல்க.
இதோ இதோ 
போதையின் உச்சத்தில்
ஆர்மோனியப் பெட்டியை 
திறக்கிறார் மன்னர்  
அமைதி காக்கச்சொல்லி 
பிச்சைக்காரனைப்போல்
கட்டளையிடும் 
பித்துக்குளியின் 
காதுமடலை
உரசியுறுமுகிறது 
ராஜாவின் பாஸ்கிடார்

தம்தம்தம் தம்தம்த தம்தம்
தம்தம்தம் தம்தம் ததம்

ஐயோ மூடர்களே
இசை நுரைத்துப்
பொங்கி வழிந்த நாட்களில்
செவியை மறைத்து 
மயிரை வளர்த்தீர்கள்.

கர்ஜனை 
எதிரொலித்த திக்குகளில்
இப்போது நரிகளின் 
மூத்திரவாடை
இந்ததேசத்தின் தண்ணீர் 
கறுத்துப் போவதை
எச்சரித்துப்போகிறது 
தேவமின்னல்.

சுழலில் சிக்கிய 
பரிசலென
சுற்றத் துவங்குகிறது 
கிராமபோன் தட்டு

ஆஹா ஒஹோ ஏஹே ஹொய்
ஆஹா ஒஹோ ஏஹே ஹொய்






ஔஷதக் கூடம்





000

அப்பாவுக்கு புற்றுதானாம்.
உறுதியாகிவிட்டது.
மூப்பின் பொருட்டு இரண சிகிச்சையை 
நிராகரித்துவிட்டார் மருத்துவர்.
சங்கதி தெரியாமல்  
பேத்தியின் பிரதாபங்களில் 
தோய்கிறார் அப்பா.
கதாபிரசங்கியின் துடிமேளக்காரனாக
அப்பாவின் பேச்சுக்கெல்லாம் 
பக்கத்துப் படுக்கைக்காரர் 
முகிழ்நகை செய்கிறார்.  
அவரது தொண்டையில் 
துளையிட்டிருக்கிறார்கள்.

000

இப்போது எப்படி இருக்கிறது?
பரவாயில்லை
காற்றோட்டமில்லை .... நல்ல படுக்கையில்லை
பரவாயில்லை
செவிலியர் இல்லை ......மருந்து போதவில்லை
பரவாயில்லை..... பரவாயில்லை
வலி மிகும் சமயங்களில் மருத்துவரே இருப்பதில்லை
ஆனாலும்..... பரவாயில்லை  
நாம் கொஞ்சம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம்
இப்போதைக்கு இந்தக் கூரையின் மீது  குண்டு விழாது


000


அப்பாவுக்கு வெந்நீர் தேவை.
மருத்துவமனைக்கு வெளியே
நடுஇரவிலும் திறந்திருக்கும் 
அடுமனைகள் உண்டு.
நல்ல காபியும் சிகரெட்டும் கிடைக்கும்.
இருளில் வலுப்பெறும் 
பாடல்களை ஒலிக்கவிடுவார்கள்.
நான்கைந்து நிறுத்தங்களைத்தாண்டினால்
சந்துக்குள் ஒரு தேநீர்க்கடை இருக்கிறது.
அங்குதான் 
இளஞ்சூட்டுக் கருணை கிடைக்கும்.

000


என் மேலாளருக்கு 
எல்லாமே பொய்யாகத் தெரிகிறது.
’தலைமை மருத்துவர் 
முதல் சுற்று வரும்போது
பார்த்துவிட்டு வருகிறேன்’ என்றால்
ஒப்புக் கொள்ள மறுக்கிறார்.
பக்கத்து படுக்கைக்காரரின் மனைவி
தான் பார்த்துக் கொள்வதாகச் சொல்கிறார்.
’டாக்டரை நீங்களும் பார்க்க வேண்டுமா?’
’நேற்று மாலையே பார்த்தாகி விட்டது’
துணிகளை மடித்தபடி
’இன்று மாலை 
வீட்டுக்குப் போகிறோம் என்றார்.
அருகாமைக்கு வந்து குரலை இடுக்கி
’பெரிய டாக்டர் 
கையை விரித்துவிட்டார் தம்பி’
கணவரிடம் திரும்பி பரிவாக கேட்கிறார்
தாகமாக இருக்கிறதா ?.... 
கொஞ்சம் தண்ணீர் தரட்டுமா?

000

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...