Saturday 9 November 2019

இந்தக் கடலில் ஒரு சிட்டிகை உப்பில்லை

கடலின் கரையில் என்னத்தை தேடுகிறாய் நங்கை?

உன் மகள் சங்குகளை சேகரிக்கிறாள் பார்த்தேன் .

நீ எதை தேடுகிறாய் நங்கை? 

கொற்றவை வெறிப்பதுபோல் 

ஏன் இப்படி கடலை வெறிக்கிறாய்? 

நான் கவனித்தேன் 

ஆண்களைத் தவிர்த்து அலைகளையே பார்க்கிறாய்

உனது ஒரு தம்ளர் பௌர்ணமியையும்   

கடல் குடித்துவிட்ட கதையை 

உம் கொட்டிக் கேட்கிறாள் மகள். 

இந்தப்பெருங்கடலின்வசம்

 தாகத்துக்கொரு மிடறில்லை

நம் வாழ்வு ருசிக்க  

சிட்டிகை உப்புமில்லை மகளே

ஆல்பத்தின் எல்லாப் புகைப்படங்களிலும்  

நீயும் மகளும் கடலும் இருக்கிறீர்கள்

யாரும் எதிலும் சிரித்துக் கொண்டில்லை 

நேற்றென் கனவில்                                                                             

நானோர் காட்சியை நிறுவினேன் நங்கை.

நீயும் மகளும் நடந்து வர                                                                        

கழுவிய பாதையை விரிக்கிறது கடல்.

பழுப்பில் வெள்ளி பூத்த சிப்பியொன்றை                                                        

மகளுக்குப் பரிசளித்து                                                                                  

பாதங்களை முத்திக் கொள்கிறது.




No comments:

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...