Saturday 4 May 2019

சாதாபாரதியின் சகி


சிலிண்டர்காரனுக்கு  கொடுக்க
உரூவா இல்லாமல்
செல்லம்மா அல்லாடிக் கொண்டிருக்க 
புலவர் பெருஞ்சபையில்
அயலகத் திரைப்படங்கள் குறித்த
விவாதத்திலிருந்தான் சாதாபாரதி.

அவள் மளிகைக் கடையிலிருந்து 
அழைத்தபோது மாலிலும்
ரேஷன் புழுக்கத்தில் நெளிந்தபோது
ஏ சி பாரிலுமிருந்து
பண்டிதருடன் சொற்சமரஞ்செய்து வந்தான்.

மன்னர் ரெட்டபூபதியைப் பொறுத்தமட்டில்
கொள்கைகளில் தனிச்சீருண்டு.

சினேகிதரேயானாலும்
தானியமாய்த் தருவதில்லை
திரவமெனில் தாராளம்.

வெறுங்கண்ணன்
குவளைக்கண்ணன் ஆனது
அந்தப் பருவத்தில்தான்.

தோசை மாவு 
வாங்கி வருவதாய்
சொல்லி வருஞ்சுப்பையா
'தீர்த்த'க்கரையோரத்தில்
சுண்டல் பொட்டலத்தை அவிழ்த்து 
அணில் வரக் காத்திருப்பான்.

கண்ணம்மாளின் மாரை வெறித்து
செல்லம்மாவுக்கு 
காமரஸங்குறைவென்பதுமுண்டு.

'வாடகை பாக்கி வசூல்' 
காண்டத்தினின்று வெளியேறிவிட 
தேவி தவித்திருக்க 
கள்வெறியேறி 
தென்னங்காணியுள் கிடந்தான் கவி.

வால் விட்ட தலைப்பாகையினை 
பதி சூடிப்பார்த்த முகூர்த்தத்தில்
கூரைப்புடவையைக் கீறி
தூமைத்துணியாக்கிக் கொண்டாள் சகி.

- தடம் விகடன்- ஏப்ரல்- 2019

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...