Friday 28 May 2021

பதினோரு மணிக்காட்சி

 




வெட்ட வெளியில் 

ஒரு  ஈ இல்லை

காக்கையும் இல்லை

மொட்டை வானம்

பளபளத்துக்  கிடக்கிறது.

வண்டிப் புழங்காமல்

கிடந்த நெடுங்காலம் 

மல்லாந்த தண்டவாளம் 

ஒருக்களித்துப் படுக்கிறது.

வெட்கம் பார்க்காமல்

அவளுங்கூட புரண்டுவிட்டால்

வெய்யில் புதர் நடுவில்

அகண்டபெரும் வெண்திரையில்

ஆயிரங்கால் பூச்சிகளின் 

ஆலிங்கனம் துவங்கிவிடும்.


Monday 24 May 2021

கடவுள் ஆதியிலிருந்தே உப்பு,காரம் பற்றிய தெளிவோடிருந்தார்.









1.


அகண்ட வானும் திரண்ட மண்ணுமாய் படைத்த உலகம் இருண்டு கிடக்க
உடனடியாய் கடவுள் ஒளி சமைத்தார் .
நிலமென்றும் கடலென்றும் 
பேர் வைத்து 
அது நலமென்று கண்டாரவர்.

புற்பூண்டும், கனிமரமும் 
முளைத்தெழவே
அதை நல்லதென்றார்.

பெருஞ்சுடரால் பொடிமீனால்    
வானகத்தை  அலங்கரித்து
அதுவும்  நல்லதென்றே 
அவர் கண்டார்.

நான்காம் நாள் ஆயிற்று.

நீர்த்திரளில் உயிரினங்கள்
நிலவெளியில் விலங்கினங்கள்
பரவெளியில் புள்ளினங்கள் 
படைத்தவை யாவும் 
நல்லதென்று கண்டார் .

ஆறாம் நாள் ஆயிற்று.

படைத்துப் பழகிவிட்ட 
கையை வைத்துக்கொண்டு  
சும்மாயிருக்காமல்
களிமண்ணைப் பிசைந்து ஊதி  
மனிதனை உண்டாக்கினார்.

இன்பவனத்துள்ளே 
பழமரங்கள் நட்டு வைத்து,
பசியோடு அவனை விட்டு,
ஒரு மரக்கனியை மட்டும்
உண்ணக்கூடாதென்றார்.

அவனும் அதை
உண்பதில்லை என்றே
பதிலுரைக்கவும்
சலிப்புற்று
உறங்குவது போல் நடித்தார்.

அப்போதும் 
அவரது வார்த்தையை 
மீறாதிருந்தான்.

ஓ....இது நல்லதில்லை 
என்று கண்ட கடவுள்
அவனது விலாவில் மிதித்து 
எலும்பை உடைத்தார்.

 பூமி  
விறுவிறுப்பாக சுற்றத்துவங்கிற்று.


2.

’ஆதி மனிதா எங்கே இருக்கிறாய் ?’ என்று கேட்டார் கடவுள்.

 ’உமது குரலைக் கேட்டேன், அம்மணமாய் இருந்ததால் ஒளிந்து கொண்டேன்’ என்றான்.

கடவுள் ’நீ அப்படி இருப்பதாக உனக்குச் சொன்னது யார்?
நாம் உனக்கு விலக்கியிருந்த மரக்கனியைத் தின்றாயோ?’ 
என்று வினவினார். 

ஆதாம் ’எனக்குத் துணையாய்  நீர்  தந்த பெண்ணே அம்மரத்தின் கனியைக் கொடுத்தாள், நானும் தின்றேன்’ என்றான். 

பெண்ணை நோக்கி 
’நீ ஏன் அவ்வாறு செய்தாய்?’ 
என்று கேட்டார். 

அவள் ’பாம்பு என்னை வஞ்சித்ததால் தின்று விட்டேன்’ என்று பதில் சொன்னாள். 

அப்பொழுது கடவுள் வெகுவேகமாக திரும்பி பாம்பைப் பார்த்து, 

 ’நீ மேலும் மேலும் சுவாரஸியத்தைக் கூட்டுகிறாய் அற்புதம்..அற்புதம் !‘ 
என்று மெச்சிக் கொண்டார்.

3.

கடவுள் வெட்டாந்தரையாய்   தாகித்திருந்தார்.
 
ஆதாமின் குடும்பமோ 
நிழலில் இன்புற்றிருந்தது.

ஆபேல் ஆடு மேய்ப்பவன் . 
காயினோ பயிரிடுபவன்.

காயின் விளைச்சலின் பலனை  
கடவுளுக்குக் காணிக்கையாய்ச் செலுத்த
ஆபேலோ கொழுத்த ஆடுகளைக் கொடுத்தான்.
  
ஆடுகளை ஏற்றுக்கொண்ட கடவுள் 
காயினை கண்ணோக்கவில்லை. 

சினம் கொண்ட காயின் வயல்வெளியில்
சகோதரனைக் கொன்று போட்டான். 

உதிரம் நிலத்தை நனைத்த பொழுது 
வனாந்திரங்களதிர கடவுள் சிரித்தார். 

வயல் நண்டுகள் சப்புக் கொட்டின.




Wednesday 12 May 2021

இனிதினிது


 


வெறிச்சோடும் கடைவீதி

விரட்டுவோர் யாருமில்லை

சட்டைக்கு மேல் சட்டை

மூட்டைக்குள்  மூட்டைக்குட்டி

சண்டப் பிரசண்டன் 

சதிராடத்  தார்ச்சாலை

அரிதான கலைநிகழ்வு

களிக்கத்தான் ஆளில்லை

ஆனாலுமந்த 

குண்டலகேசியின் 

கவசமில்லாத் திருமுகத்தில்

குலையாதிருக்கிறது

பொன்னேபோல் பூஞ்சிரிப்பு.

Tuesday 4 May 2021

எழுத்தாளர் எம். கோபால கிருஷ்ணன் வலைப்பூவிலிருந்து

எளியவர்களின் அன்றாடங்கள் - 

ஜான் சுந்தரின் 'பறப்பன, திரிவன, சிரிப்பன’




 
ஜான் சுந்தரின்
‘நகலிசைக் கலைஞன்’ தொகுப்பு வெளியாகி சில மாதங்கள் கழித்தே வாசிக்க நேர்ந்தது. பிரமாதமான
ஒரு நாவலுக்கான தனித்துவமான கதாபாத்திரங்களையும் புனைவுத் தருணங்களையும் கொண்டிருந்தது
அந்தக் கட்டுரைத் தொகுப்பு. இசைக் கலைஞர்களின் உல்லாசமும் கொண்டாட்டமுமான குணாம்சங்களை
துள்ளலும் துடிப்புமாக சொல்லிய ஜான் சுந்தரின் மொழி அதே வலிமையுடன் அவர்களது வாழ்க்கையின்
துயர நாட்களையும் ஆதுரத்துடன் சித்தரித்திருந்தது.

இது ஜான் சுந்தரின்
எட்டு சிறுகதைகளைக் கொண்டது இத் தொகுப்பு. இவற்றில் பல கதைகளை வெளியான சந்தர்ப்பங்களிலேயே
வாசித்திருக்கிறேன். கொங்கு பிரதேசத்துக்கேயுரிய தனித்துவமான, வக்கணையான மொழியும் சற்றே
குசும்புடன் அவற்றை சித்தரிக்கும் சொல்முறையும் இக்கதைகளை வேறுபடுத்திக் காட்டிய அம்சங்கள்.
இப்போது தொகுப்பாக வாசிக்கும்போது இக் கதைகளின் வேறு சில தன்மைகளை கவனிக்க முடிந்தது.

இவை வாசித்துப்
பழகிய, ஏற்கெனவே அறிந்த தளங்களில் எழுதப்பட்ட கதைகள் அல்ல.

சிறுவர் பிராயத்துக்
கதைகள் என இவற்றைக் குறிப்பிடலாம். ஒவ்வொருவருக்குள்ளும் சற்றும் வண்ணமிழக்காத சிறார்
பருவத்தின் வெவ்வேறு காட்சிகளை இக் கதைகள் மீட்டுத் தருகின்றன. குதூகலமும் கொண்டாட்டமுமான
தூய அந்த நாட்களின் பரவசத்தை கூடுதல் குறைவின்றி சொல்லிச் செல்கின்றன. கொங்கு பிரதேசத்துக்கேயுரிய
மொழியில் அந்தப் பருவத்தின் விளையாட்டுகள், ‘செல்ல’ப் பெயர்கள், சிறுதீனிகள் என எல்லாவற்றையும்
நினைக்கச் செய்கின்றன.

‘செல்ல’ப் பிராணிகளின்
கதைகள் என்றும் இவற்றைச் சொல்லலாம். சிறுவர் பருவத்தையும் செல்லப் பிராணிகளையும் பிரிக்க
முடியாது. கிளிகள், நாய்கள், பூனைகள், காக்கைகள், அணில்கள், ஆட்டுக்குட்டியோடு பாம்பும்
கூட கதைகளுக்கு நடுவே ஓடித் திரிகின்றன.  வீட்டில்
திரியும் வளர்ப்புப் பிராணிகளுடனான பிணைப்பை நேர்த்தியாக வார்த்துள்ளன இக்கதைகள்.

சிறுவர் பிராயத்துக்
கதைகள் அல்லது செல்லப் பிராணிகளின் கதைகள் என்று இவற்றை வகுத்துக்கொண்டாலும் இவை எளியவர்களின்
மிக எளிய வாழ்க்கையையே சித்தரித்துள்ளன என்பதே இவற்றின் சிறப்பு. ஒண்டுக் குடித்தனங்கள்,
புறம்போக்கு நிலத்தில் அமைந்த குடிசைகள், மில் தொழிலாளர்களின் குடியிருப்புகள் என இக்கதைகள்
நிகழும் களங்கள் அன்றாடம் கடந்து செல்பவை. உத்தரவாதம் அற்றவை. ஆனால் இங்குள்ள மனிதர்களுக்கு
நடுவேதான் ஆடுகளும் பூனைகளும் நாய்களும் கோழிகளும்கூட உயிர் வாழ்கின்றன. அன்றாடத்தின்
நிச்சயமின்மைக்கு நடுவே சின்னச் சின்ன சந்தோஷங்களை இச் சிறு உயிர்களே தருகின்றன. மழையோ
வேறு இயற்கைச் சீற்றமோ தாக்கும்போது அவர்களுடன் சேர்ந்து இந்த உயிர்களும் அல்லலுறுகின்றன.


எளியவர்களது வாழ்வின்
நிச்சயமற்ற அன்றாடங்களை, பாடுகளை, சிக்கல்களை, துயரம் பிழிய இடைவெளியின்றி கோர்க்கப்பட்ட
வாதைகூடிய சொற்களைக் கொண்டுதான் அழுத்தமாகச் சொல்லமுடியும் என்பதில்லை.   கிளிகளும்
பூனைகளும் நாய்களும் ஓடியாடி திரிந்திருக்கும் சிறுவர்களின் உலகத்துக்குள் அவர்களுக்கான
கோணத்தில் சொல்லும்போது இன்னும் கனம் கூடுகிறது. ‘அந்தோணி’யின் மீதான தெரஸாவின் தாயன்பையும்,
‘கிக்கி’ வளர்க்கும் மலரக்காவின் துரோகத்தையும், மில்களில் பாம்பு பிடிக்கும் சசியின்
காருண்யத்தையும் வெகு சுலபமாக இக் கதைகளின் பின்னணிகளே உணர்த்துகின்றன.

‘நகலிசைக் கலைஞர்கள்’
தொகுப்பில் கண்ட பல்வேறு கலைஞர்களைப் போலவே இத்தொகுப்பிலும் சாமி, ராணி, ஸ்ரீஜா, பிரிட்டோ
சார் போன்ற அபூர்வமான குணச்சித்திரங்களைப் பார்க்க முடிகிறது. இவர்களே நம் அன்றாடத்தின்
அரிதார சலிப்பைத் துடைப்பவர்கள்.

இத்தொகுப்பின்
இன்னொரு சுவாரஸ்யம், வாசிப்பினிடையே கேட்கக் கிடைக்கும் ‘ஓசை’கள். ஜான் சுந்தர் இசைக்
கலைஞர் என்பதால் அன்றாடத்தின் ஓசைகளை தவறவிடாமல் வாக்கியங்களுக்கிடையே கோர்த்துவிடுகிறார்.
‘அபூம்சகா’, ‘டிக்கினி டிக்கினி’ என அந்த ஓசைகளுடன் படிக்கும்போது கதையும் அந்த கதாபாத்திரமும்
இன்னும் நெருக்கமாகிவிடுகிற்து. அதேபோல, ஜோக்குட்டி, ரேக்குட்டி, கிக்கி, டிப்பி, டிக்கா
என்று கதாபாத்திரங்களுக்கு அவர் சூட்டும் பெயர்கள் விசேஷமானவை.

சுவையாகவும் நேர்த்தியாகவும்
சொல்லியுள்ள இக்கதைகளில் சில ( பேசாமடந்தை, பித்தளை நாகம்) திருத்தமாக முடிவுகளை எட்டவில்லை.
லைன்வீட்டு சந்தில் ஒரு பியானோ எனும் ஒற்றை வரியில் ஆச்சரியத்தை தரும் ‘கின்னரப்பெட்டி’யும்
‘அணில்களுக்கு மட்டுமல்ல காக்கைகளுக்கும் பசிக்கும்’ என்ற மனவெழுச்சியுடன் அமைந்த
‘பறப்பன, திரிவன, சிரிப்பன’வும் அவ்வாறான உச்சத்தை எட்டியுள்ளன.

‘பறப்பன, திரிவன,
சிரிப்பன’ என மிகப் பொருத்தமாக பெயர் சூட்டப்பட்டிருக்கும் இத்தொகுப்பு எளிய உயிர்களின்
இருப்பினால் மேன்மையுற்றிருக்கும் எளியவர்களின் அன்றாடங்களை சிறார் பருவத்துக்கேயுரிய
களங்கமற்ற பார்வையில் நேர்த்தியாகத் தந்திருக்கிறது.

0

பறப்பன, திரிவன,
சிரிப்பன ( சிறுகதைகள்)ஜான் சுந்தர்

காலச்சுவடு பதிப்பகம்

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...