Monday 24 May 2021

கடவுள் ஆதியிலிருந்தே உப்பு,காரம் பற்றிய தெளிவோடிருந்தார்.









1.


அகண்ட வானும் திரண்ட மண்ணுமாய் படைத்த உலகம் இருண்டு கிடக்க
உடனடியாய் கடவுள் ஒளி சமைத்தார் .
நிலமென்றும் கடலென்றும் 
பேர் வைத்து 
அது நலமென்று கண்டாரவர்.

புற்பூண்டும், கனிமரமும் 
முளைத்தெழவே
அதை நல்லதென்றார்.

பெருஞ்சுடரால் பொடிமீனால்    
வானகத்தை  அலங்கரித்து
அதுவும்  நல்லதென்றே 
அவர் கண்டார்.

நான்காம் நாள் ஆயிற்று.

நீர்த்திரளில் உயிரினங்கள்
நிலவெளியில் விலங்கினங்கள்
பரவெளியில் புள்ளினங்கள் 
படைத்தவை யாவும் 
நல்லதென்று கண்டார் .

ஆறாம் நாள் ஆயிற்று.

படைத்துப் பழகிவிட்ட 
கையை வைத்துக்கொண்டு  
சும்மாயிருக்காமல்
களிமண்ணைப் பிசைந்து ஊதி  
மனிதனை உண்டாக்கினார்.

இன்பவனத்துள்ளே 
பழமரங்கள் நட்டு வைத்து,
பசியோடு அவனை விட்டு,
ஒரு மரக்கனியை மட்டும்
உண்ணக்கூடாதென்றார்.

அவனும் அதை
உண்பதில்லை என்றே
பதிலுரைக்கவும்
சலிப்புற்று
உறங்குவது போல் நடித்தார்.

அப்போதும் 
அவரது வார்த்தையை 
மீறாதிருந்தான்.

ஓ....இது நல்லதில்லை 
என்று கண்ட கடவுள்
அவனது விலாவில் மிதித்து 
எலும்பை உடைத்தார்.

 பூமி  
விறுவிறுப்பாக சுற்றத்துவங்கிற்று.


2.

’ஆதி மனிதா எங்கே இருக்கிறாய் ?’ என்று கேட்டார் கடவுள்.

 ’உமது குரலைக் கேட்டேன், அம்மணமாய் இருந்ததால் ஒளிந்து கொண்டேன்’ என்றான்.

கடவுள் ’நீ அப்படி இருப்பதாக உனக்குச் சொன்னது யார்?
நாம் உனக்கு விலக்கியிருந்த மரக்கனியைத் தின்றாயோ?’ 
என்று வினவினார். 

ஆதாம் ’எனக்குத் துணையாய்  நீர்  தந்த பெண்ணே அம்மரத்தின் கனியைக் கொடுத்தாள், நானும் தின்றேன்’ என்றான். 

பெண்ணை நோக்கி 
’நீ ஏன் அவ்வாறு செய்தாய்?’ 
என்று கேட்டார். 

அவள் ’பாம்பு என்னை வஞ்சித்ததால் தின்று விட்டேன்’ என்று பதில் சொன்னாள். 

அப்பொழுது கடவுள் வெகுவேகமாக திரும்பி பாம்பைப் பார்த்து, 

 ’நீ மேலும் மேலும் சுவாரஸியத்தைக் கூட்டுகிறாய் அற்புதம்..அற்புதம் !‘ 
என்று மெச்சிக் கொண்டார்.

3.

கடவுள் வெட்டாந்தரையாய்   தாகித்திருந்தார்.
 
ஆதாமின் குடும்பமோ 
நிழலில் இன்புற்றிருந்தது.

ஆபேல் ஆடு மேய்ப்பவன் . 
காயினோ பயிரிடுபவன்.

காயின் விளைச்சலின் பலனை  
கடவுளுக்குக் காணிக்கையாய்ச் செலுத்த
ஆபேலோ கொழுத்த ஆடுகளைக் கொடுத்தான்.
  
ஆடுகளை ஏற்றுக்கொண்ட கடவுள் 
காயினை கண்ணோக்கவில்லை. 

சினம் கொண்ட காயின் வயல்வெளியில்
சகோதரனைக் கொன்று போட்டான். 

உதிரம் நிலத்தை நனைத்த பொழுது 
வனாந்திரங்களதிர கடவுள் சிரித்தார். 

வயல் நண்டுகள் சப்புக் கொட்டின.




No comments:

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...