Thursday 13 February 2020

திக்கிப்பேசுகிறவன்


வெல்டிங் பணிமனையின்
வெளிச்சப் பொறி அவன் பேச்சு.
வார்த்தைகளைப் பெற்றுப்புறந்தள்ள
கர்ப்பவலி தின்னும் நெஞ்சிலிருந்து
மேடேறும் குதிரைகள் மணலில் புதைந்து திமிறுகின்றன.
கோபங்கொள்ளுகையில்
அவனது நாவுக்கு தாளம் தப்பிவிடுகிறது
வாயிலிருந்து புறப்படும் அக்கினிஅம்புகள்
பகைஞரின் காலடியில் மல்லிப்பந்துகளாய் மாறி விழ
மூர்க்கர்களும் மரணாயுதங்களை தரையிலெறிந்துவிட்டு
சிறியோனை முத்தஞ்செய்வார்கள்.
மனதுருகும் வேளைகளில் நீள்குழல்விளக்குகள்
உயிருக்குத்துடிப்பதைப்போலவே
அவன் இன்னும் அதிகமாக திக்குவான்
பொறியில் சிக்கித்துடிக்கும் பன்றியென
அந்த உதடுகள் துடித்திருக்க
துருப்பேறிய ஆணியை விழுங்குவதைப்போல
நாம் நமது எச்சிலை விழுங்க வேண்டும். 
நேற்றைக்கு அவன் என்னிடம் 
தனது அன்பைச் சொன்னான்.
மற்றவர்களுடையதைக் காட்டிலும்
கூடுதல் எடையோடிருந்த
அவனுடைய அன்பில்
எழுத்துருக்கள் திரளாயிருந்தன.
ல...லவ் யூ..... ந..நண்பா








No comments:

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...