Sunday, 12 July 2020

உங்கா மரத்தின் கனி




நூல் கிளைகளின் நுனிகளில்
கொத்துக் கொத்தாய்
கனிந்திருந்த மார்புகளைப் பார்த்து
ஏங்கியழுகிறது குழந்தை.

ஐந்து ரூபாய் கொடுத்து
அதிலொன்றை கொய்து தந்தவுடன்
அம்மாவைக் கட்டிக் கொள்வது மாதிரி
அதனைக் கட்டிக் கொள்கிறது குழந்தை.

இது அம்மா தான்... இது அவளே தான்.

கண்ணாடிக் கரைசலாய்
வாயிலிருந்து ஒழுகும் அன்பில்
அபிஷேகம் செய்யப்படுகிறது
வாயு லிங்கம்.

எச்சில்சாலைகளில்
காம்பைத்தேடும் நெடும்பயணம்.
ஈறுகளால் நடந்தே இந்த உலகத்தை
சுற்றி வந்தாயிற்று ஓரிரு முறை.

தொப்புள் முடிச்சைக் கண்டதும் அத்தனை சிரிப்பு.

இது அம்மாதான்..... இது அவளேதான்.

’உங்கா’ வென குழந்தை வீறிடக்கேட்டு
முகம் சுண்டி விட்ட பலூனுக்கு
மெது மெதுவாய்..........மெது மெதுவாய்
முளைக்கத் துவங்குகிறது ஒற்றைக்காம்பு.

இப்போது...... நிஜமாகவே
இது அம்மாதான்....... இது அவளேதான்

No comments:

கண்ணே என் கீரைத்தண்டே

 கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நான் சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன். இரவு 11 மணி இருக்கலாம். நண்பர் செல்வேந்திரன் ...