Wednesday 17 September 2014

‘சொந்தரயில்காரி’ தொகுப்பு வெளியீட்டு விழாவில் கவிஞர் கலாப்ரியா ( 2.2.14. கோவை )




இந்தத் தொகுப்பைப் பொறுத்தவரை ஜான் தன் கலைமானின் கொம்பைத் தானே வரைந்திருக்கிறார். தன் இரவின் முழுநிலவைத் தானே கொண்டாடியிருக்கிறது, இந்த இளைய நிலா. கிரிக்கெட் மொழியில் சொன்னால் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை பிரமாதமாக ஆடியிருக்கிறார். அவருடைய ஆட்டச்சக்கரம் – வேகன் வீல்- உராய்வேயின்றி அழகாகச் சுற்றியிருக்கிறது. 

நெல்லிக்காய் மூட்டை சிதறினாற்போல என்று ஒரு பேச்சு வழக்கு உண்டு எங்கள் பக்கத்தில், அதுபோல அக்காவின் மடியிலிருந்த பச்சைப் பயிறு சிதறியோடுவதில்,அலைக்கழிப்பில் ஆரம்பிக்கிறது, எந்தக் கலைஞனையும் போலவே ஜான் சுந்தரின் ஆரம்ப வாழ்க்கையும்.

வலியைத் தருகிற வாழ்க்கை, கலைஞனுக்கு ஒரு பார்வையைத் தரும். அது பார்ப்பதையெல்லாம் படைப்பின் மகத்துவத்தோடும், படைப்பின் முரண்களோடும் பார்க்கும். மகத்துவத்தை வியந்தும் முரண்களை உணர்ந்தும் பார்க்கும். கலை மனம் மகத்துவ மலரை முரண் நாரில் கோர்க்கும். அல்லது அந்தச் செடியிலேயே வண்ணத்துப் பூச்சிக்காய் வாடவிட்டுக் காவல் காக்கும்.இந்தப் பார்வை வாய்த்தவருக்கு வார்த்தை வாய்க்கும். தேர்ந்தெடுத்த புதுப்புது வார்த்தைக் கூட்டங்கள் மூளைக்குள் வடம் பிடிக்கும். அப்போது அவனது மொழியே மைதுன மகிழ்ச்சி கொள்ளும், தன் கொழிப்பைப் பார்த்து, செழிப்பைப் பார்த்து.

ஜானுக்கு எப்படி மொழி வாய்க்கிறது பார்ப்போமா

உங்கா மரத்தின் கனி
_____________________

நூல் கிளைகளில்
கொத்துக் கொத்தாய்
கனிந்திருந்த மார்புகளைப் பார்த்து
ஏங்கி அழுகிறது குழந்தை
ஐந்து ரூபாய் கொடுத்து
அதிலொன்றைக் கொய்து தந்தவுடன்
அம்மாவைக் கட்டிக் கொள்வது மாதிரி
அதனைக் கட்டிக் கொள்கிறது குழந்தை
இது அம்மாதான்...இது அவளேதான்
கண்ணாடிக் கரைசலாய்
வாயிலிருந்து ஒழுகும் அன்பில்
அபிஷேகம் செய்யப்படுகிறது
வாயுலிங்கம்
எச்சில்சாலைகளில்
காம்பைத்தேடும் நெடும்ப்யணம்
ஈறுகளால் நடந்தே இந்த உலகத்தை
சுற்றி வந்தாயிற்று ஒரிரு முறை
தொப்புள் முடிச்சைக் கண்டதும் அத்தனை சிரிப்பு
இது அம்மாதான்...இது அவளேதான்
‘உங்கா’ வென குழந்தை வீறிடக் கேட்டு
முகம் சுண்டி விட்டபலூனுக்கு
மெதுமெதுவாய்... மெதுமெதுவாய்..
முலைக்கத் தொடங்குகிறது ஒற்றைக் காம்பு
இப்போது... நிஜமாகவே
இது அம்மாதான்... இது அவளேதான்.

தாயின் முலையூட்டலுக்கு ஏங்கும் ஒரு குழந்தமையின் தவிப்பைக் கவிதையெங்கும் வழியவிட்டிருக்கும் ஜான் சுந்தரின் கவித்துவம் காளமேகப்புலவரின் ‘யானையும் வைக்கோற்போரும்’ போல ஒரு சிலேடைக் கவிதையாகிற அபாயத்தை அழகாகத் தவிர்த்திருக்கிறது.அதிலும் காற்று நிரம்பிய பலூனை வாயுலிங்கமாகப் பார்ப்பதும்,அதுவே சுருங்கத் தொடங்கையில்,பால் சுரக்கும் காம்பாவதும் தானாகக் கை வந்த செய்நேர்த்தி.

கவிதை தானாகக் கைவருவதில் எனக்குப் பெரிய நம்பிக்கையில்லை. ஒரு வலிய அனுபவம் பசுமரத்தாணி போல,பின்குஷனில் யத்தனங்களின்றிச் சொருகிக் கொள்ளும் குண்டூசி போல, மூளைக்கூழில்,அல்லது ஈர மனத்தில், ஏற்படுத்தும் சித்திரம் மொழியாக உருப்பெறுவதென்பது ஒரு பழக்கத்தின் காரணமாகவே என்று நினைப்பவன் நான்.சொல்லவில்லையா அவ்வைக் கிழவி சித்திரமும் கைப்பழக்கம் என்று.ஆனாலொரு கவிதையக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு கவிஞனுக்கு இருக்கிறது. மண்ணிலிருந்தோ, விலா எலும்பிலிருந்தோ செய்யப்பட்ட பொம்மையின் நாசியில் ஊதி ஜீவன் தருவது போல், ஒரு மூச்சுக்காற்றில் கவிதைக்கு ஜீவன் தர வேண்டிய கட்டாயத்தில் இருப்பவன் கவிஞன்.

”அப்படியல்ல....” என்று ஒரு கவிதை,

இங்கே...
துணிக்கடையில்
பணிமனையில்
உணவகத்தில்
மதுக்கடையில்
பொடியன் என்றால்
கொஞ்சம் இளப்பம்தான்.
அங்கே அப்படியல்ல

உங்கள் மட்டிலுமொரு
விளிச்சொல்தான்
தம்பியென்பது
ஈழத்தில் அப்படியல்ல

மேலும்.....
காணவில்லை என்பதும்
நாதியில்லை என்பதுவும் கூட...

கடைசி மூன்று வரி இல்லாவிட்டால் இந்தக் கவிதை ஒரு மண்பொம்மை. மூனு வரிகளில் ஆறு தேர்ந்தெடுத்த வாரத்தைகளில் ஜீவ சுவாசத்தை ஊதி துடி துடிக்கும் உயிர்ப்பைத் தருகிறார், கர்த்தராகிய ஜான்சுந்தர்.கவிதையைப் பிழைக்க வைத்து விடுகிறார்...கவிஞராகிய ஜான் சுந்தர். ஆனால் நாம் தான் ஈழத்தமிழனை நம் இறையாண்மைக்கு பலி கொடுத்து விட்டோம்.

கோள்மூட்டி விரல்கள் என்று ஒரு கவிதை.(பக்கம்_42)
நீங்கள் செல்லும் பக்கமெல்லாம் திரும்பும் சூரியகாந்திக் கவிதைகள் நிறைந்த இந்தப் புத்தகத்தில்; குட்டி இளவரசர்களும்,இளவரசிகளும் ஆலிஸும் அலையும் அற்புதமான ஜானின் உலகில் பூத்திருக்கும் இன்னொரு சூரியகாந்தி இந்தக் கவிதை.

எல்லாக் கவிதைகளின் எல்லா வரிகளிலும், வரிகளுக்கிடையேயும் ஜான் தன் பார்வை சென்று பற்றியதையெல்லாம் அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார்.
புதிய வார்ப்புகள் கவிதையில் (பக்62) பரோட்டாக் கடையின் நிகழ்வுகளையும் கூடவே மாஸ்டரின் கனவுகளையும் அவர் எழுத்தில் வார்த்திருக்கும் விதமே அருமையான உதாரணம். பார்வையில் கூர்மையுள்ள, ஆவியில் எளிமையுள்ள, பாக்கியவானின் பதிவுகள் இந்த அறுபத்திச் சொச்சம் கவிதைகளும்.
கவிதையைக் கைவிடாத, நமக்குத் தூரமாயில்லாத கவிதைகளைத் தரும் இந்த சங்கீதக்காரனை வாழ்த்தி விடை பெறுகிறேன் வணக்கம்.





No comments:

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...